மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு
மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma
வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் மட்டுமே அந்த வீட்டில் பெரிய ஆறுதலாக தெரிந்தாள்.
கதையில் தான் வரும்! நிஜத்தில் கிடையாது
அப்பா நேற்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் “அஞ்சு! நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க! நல்ல குடும்பம். நல்ல படிச்ச பையன். கணினி இன்ஜினியராக, ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம்.இந்த தடவை என் பேச்சை நீ கேளு!” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
பக்கத்து வீட்டு பையனோடு விளையாடிக் கொண்டிருந்த அனன்யா,” அத்தை இங்க பாரு! இந்த சதீஷ் என்னை பூதம் இருக்குன்னு பயமுறுத்தறான்.” என்றபடி சிணுங்கிக் கொண்டே ஓடிவந்து அத்தையை கட்டி கொண்டாள்.
“இந்தப் பேய் பூதம் எல்லாம் கதையில் தான் வரும்! நிஜத்தில் கிடையாது என்று சொல்லி இருக்கேன்ல அனன்யா குட்டி” என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டாள் அஞ்சனா – marakka mudiyuma.
பிரியமுடன் அமர்த்திக் கொண்டாள்
காலை எப்போதும் போல அஞ்சனா பள்ளி கிளம்பினாள்.”அம்மா! 5 மணிக்கு தானே அவங்க வராங்க! நான் ஸ்கூல் போயிட்டு மூணு மணிக்கு வந்துடுறேன்” என்று அவள் பதிலை எதிர்பாராமல் தெருவில் இறங்கி நடந்தாள். அருகில் உள்ள பள்ளியில் டீச்சராக பணிபுரிந்த அஞ்சனா.
மதியம் 3 மணிக்கு சொன்னபடி வந்துவிட்டாள். வடை, கேசரி, ரவா கிச்சடி என வீடே கமகமத்தது. எரிச்சலோடு சிம்பிளாக ஒரு புடவையும் முத்துமாலையும் மட்டும் போட்டுக்கொண்டாள்.
5 மணிக்கு பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் சகஜமாகப் பேச , அஞ்சனாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வழக்கம்போல காப்பி கொடு, காலில் விழு என்றெல்லாம் இல்லாமல் மாப்பிள்ளை காமேஷின் அம்மா, அவளை பிரியமுடன் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள். சற்று நேரம் பேசி டிபன் சாப்பிட்டு முடிந்ததும், காமேஷின் அப்பா, “பெண்ணும், பையனும் தனியாக பேசிக் கொள்ளட்டுமே!” என்றார்.
உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்
காமேஷும், அஞ்சனாவும் தோட்டத்தில் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்தனர். “மிஸ் அஞ்சனா! நீங்கள் ஸ்கூல்ல 10th கெமிஸ்ட்ரி தானே எடுக்குறீங்க!” என்றவன் பதிலை எதிர்பார்க்காமல், “மாமா உங்களைப் பற்றி சொன்னார். நான் வேலையில் ஜாயின் பண்ணி ஆறு வருஷம் ஆச்சு. இந்த ஆறு வருஷத்துல யாரையாவது லவ் பண்ணி இருக்கியான்னு கேட்காதீங்க! நான் யார்கிட்டயும் சிக்கலை! இந்த மூஞ்சியும் யாருக்கும் பிடிக்கல !…. குறும்பும், சிரிப்புமாக, அவன் பேசிக்கொண்டே போக, அஞ்சனாவுக்குள் இருந்த இறுக்கம் தளர ஆரம்பித்தது.
“மிஸ்டர் காமேஷ்! நீங்கள் நல்ல பேசுறீங்க. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு வரன் பார்த்தாங்க. ஜாதகம் பொருந்தி, பெண் பார்த்துட்டு, புடிச்சிருக்குன்னு சொல்லி நிச்சயதார்த்தமும் ஜாம் ஜாம்னு நடந்தது. கல்யாணமும் நிச்சயமாச்சு! ஒரே பொண்ணுன்னு எங்க அப்பா, அம்மா சக்திக்கு மீறி செஞ்சாங்க. கல்யாணத்துக்கு வீடு பூரா உறவுக்காரங்க, எனக்கு மனசு பூரா சந்தோஷம். கல்யாணத்துக்கு முதல் நாள் காலை மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்ச கையோடு மாப்பிள்ளையை காணும். எல்லா இடமும் தேடினோம். கடைசியில் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணி, மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார் .
ராசியில்லாத பொண்ணு
குடும்பமே அந்த அதிர்ச்சியில் நிலை குலைஞ்சு போச்சு! அதிலிருந்து மீண்டு வரவே நாளாச்சு! அதற்கப்புறம், எங்கப்பா முயற்சியை கைவிடல வர்ற வரன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுவாரு, அவங்களும் வேணான்னு போயிடுவாங்க மனசு முழுக்க ரணம். எந்த தப்பும் பண்ணாத எனக்கு ஏன் இந்த கெட்ட பேரு. நடந்ததுதில என் தப்பு என்ன இருக்கு? ராசியில்லாத பொண்ணுன்னு பட்டம் வேற.. நான் உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பல! இனி நீங்க யோசித்து உங்க முடிவை சொல்லலாம்,” என்றவாறே எழுந்தாள்.
“உட்காருங்க அஞ்சனா! நான் உங்ககிட்ட தெளிவாகவே என் முடிவை சொல்கிறேன் இந்த கல்யாண விஷயத்துல நடந்ததற்கு நீங்க எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது இதுல உங்க தப்பு எதுவும் கிடையாது கடந்தகால கசப்பை மறந்துடுங்க! நாம ஆரம்பிக்கப் போற புது வாழ்க்கையில சந்தோஷம் மட்டும்தான். இதுல நாம உறுதியாக இருப்போம்.”
கல்யாணம் பண்ணி வச்சதே நான் தான்
அஞ்சனாவின் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது. முதல்தடவையாக நாணத்தில் தலை குனிந்தாள். எல்லாம் நல்லபடியாக முடிந்து, திருமணத்திற்கு நாள் குறிக்க காமேஷ் சந்தோஷமாக பெற்றோருடன் கிளம்பினான் – marakka mudiyuma.
வீடு திரும்பும் போது மனதிற்குள், “என்னை மன்னிச்சுடு அஞ்சனா! உன்னை வேணான்னு தூக்கிப்போட்ட மாப்பிள்ளைக்கு காதல் கல்யாணம் பண்ணி வச்ச நண்பர்கள்ல நானும் ஒருவன். சத்தியமா அவன் விரும்பும் பெண்ணை அவனுடன் சேர்க்கவே நினைச்சோமே தவிர, அது இன்னொரு பெண்ணை இந்த அளவுக்கு புரட்டிப்போடும்ன்னு நினைக்கலை. நான் பண்ணினது மிகப் பெரிய தப்பு. என் நண்பன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்க, இங்கே நீ கஷ்டப்படுவது என்ன நியாயம்? ஒன்று நிச்சயம் அஞ்சனா! இனி உன் வாழ்க்கை என்னோடு நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும் .அதுக்கு நான் பொறுப்பு!” என்று நினைத்துக்கொண்டான்.
“என்ன காமேஷ்! பொண்ணு புடிச்சிருக்கா? என்ற அப்பாவிடம், “ரொம்ப புடிச்சிருக்கு பா! “ என்றான் சந்தோஷமாக .
– தி.வள்ளி, திருநெல்வேலி
அருமையான கதை. நல்ல முடிவு!!
ஆழமான எழுத்தாளுமை.. சிறப்பான கதை முடிவு..
எதிர்பாராத திருப்பம். யூகிக்க முடியாத அருமையான ரசிக்க வைத்த சிறுகதை. பாராட்டுக்கள்.
Story super mam
கதை நல்லா இருக்கு.ஆனால் பக்கத் தலைப்புகள் அவசியமா என்று தோன்றுகிறது?! கதையின் தொடர்ச்சியைக் குறைக்கிறது.