மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 3)
பிறந்தநாள் பரிசுபோல், நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞ்ர் இளவேனில் அவர்களின் கவிதைத் தொகுப்பு, மெய்யுறுதல் தொகுப்பு குறித்த சீலா சிவகுமார் அவர்களின் அனுபவ பதிவு – meyyuruthal puthaga vimarsanam-3.
ஒரு புல்லின் அசைவு முதற்கொண்டு கோடி கோடியாகச் செலவு செய்து பூத்தூவிய அரசின் செயல் வரை, இந்தக் கொரோனா ஊரடங்கின் அத்தனை அம்சங்களையும் இந்தக் கவிதைகள் பதிவு செய்து வைத்துள்ளன. இந்நூல் இரண்டாம் உலகப்போரைவிடவும் கொடுமையான, இந்தக் ‘கொரோனா காலம்’ முழுவதையும் உள்ளடக்கிய மிகச்சிறந்த கவிதை ஆவணம்.
இந்நூலின் கவிதைகள் ஒவ்வொன்றும் தேதி நேரத்தோடு, கொரோனாவின் ரெளத்திரத்தைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. எனவே, கவிதையை நேசிப்பவர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் நிச்சயம் இந்நூலை வாசிக்க வேண்டும். புதிதாகக் கவிதை எழுத விரும்புகிறவர்களும், தனக்குள் நிகழும் சிறு உணர்வையும், கண் முன் நிகழும் சாதாரணக் காட்சியையும் கவிதையில் எப்படி கொண்டு வருவது என்று அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நாட்டு நடப்பு
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவரவரும் வாதித்துக் கொண்டும், தாளித்துக்கொண்டும், நக்கலடித்துக் கொண்டும், நாட்டு நடப்பு குறித்த குறைகளைச் சொல்லிச் சொல்லி தூற்றிக்கொண்டும் இருந்தபோது, பலர் புத்தக வாசிப்பில் இருந்தனர். கவிஞர் இளவேனில் அவர்கள், எதிலும் பங்குபெறாது, தனித்திருந்து நாட்டின் நிகழ்வுகளையும் தனிமையின் உணர்வுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தார்.
கவியரசின் உள்ளம்
முகநூலில் கவிஞர் இளவேனிலின் பல கவிதைகளுக்கு, கவிஞரும் ஓவியருமான எழுத்தாளர் இந்திரன் அவர்கள், சுய பகடி கவிதை என்றும் அற்புதம் என்றும் புதுமை என்றும் வலி நிறைந்த கவிதை என்றெல்லாம் பாராட்டியிருந்தார். கசல் கவிதை நாயகரான கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள் ‘மெய்யுறுதல்’ கவிஞரைப் பாராட்டி, மேலும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார். சில கவிதைகள் கருத்துப் பதிவு எதுவுமின்றி இருக்கும். நாலைந்து பேர் கண்களில் மட்டுமே பல கவிதைகள் பட்டிருக்கும். ஆனால், புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது, இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது என்ற கவியரசின் உள்ளம் அவருக்கானது.
ஊரடங்கு தொடரும்
அவர்எழுதிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும்போது, புத்தகம் நிறைவுற்றதென எண்ணிக்கொள்வேன். ஆனால், ஊரடங்கு அடுத்தடுத்து தொடரும்போது, கவிதைகளும் வரிசை கட்டி வரத் துவங்கிவிடும்.
பக்கம் 100ஐத் தாண்டிவிட்டது, இத்தோடு நிறுத்திவிடுவார், பக்கம் 150 வந்துவிட்டது இத்தொகுப்பிற்கு இது போதும், பக்கம் 200ஐத் தாண்டிவிட்டது அப்பாடி ஒருவழியாகப் புத்தகத்தை முடித்துவிட்டேன் என்று
நினைத்துக்கொள்வேன். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் நிகழவில்லை. “பக்கங்களைப் பற்றிய அக்கறை இல்லை. எவ்வளவு பக்கங்கள் வருகிறதோ அவ்வளவையும் தொகுப்பாக்கிவிடலாம்” என்று சொன்னார்.
பெருந்தன்மையாளர்
புத்தகத்தைப் பார்த்து பெருமிதத்தில் மகிழந்திருந்த கணத்தில், அவர் அலைபேசியில் அழைத்து, ‘நீங்க ஒரு நல்லது பண்ணியிருக்கீங்க. சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் போடலை, அவற்றையெல்லாம் இன்னொரு சின்ன தொகுப்பாகக் கொண்டுவந்துவிடலாம்’’ என்று நயமாகக் கூறினார். இப்படித்தான், பிறரது குறைகளையும் நிறைகளாக்கிக்கொள்ளும் பெருந்தன்மையாளர் கவிஞர் இளவேனில் – meyyuruthal puthaga vimarsanam-3.
166 கவிதைகளே இடம்பெற்றுள்ளன
எழுதிய கவிதைகள் மொத்தம் 187, ஆனால், இத்தொகுப்பில் 166 கவிதைகளே இடம்பெற்றுள்ளன. புத்தகவேலை நிறைவுற்றாக ஒவ்வொரு முறையும் எனக்கு நானே கற்பித்துக்கொண்ட மெத்தனத்தால் 21 கவிதைகள் இந்தத் தொகுப்பில் விடுபட்டுப் போயின. உண்மையிலேயே தொகுப்பு நன்றாக வந்திருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக்கொண்டிருந்த என் கர்வம் இடம்தெரியாமல் போனது.
கொரோனா ஒழியும் வரையில் கொரோனா பற்றிய அவர் கவிதைகளும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என்பதால், அடுத்த தொகுப்பிற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்டேன். இதில் ஒரு கவிதையும் தவறாமல் இடம்
பெற்றுவிடும் என நம்புங்கள்.
பெருமைமிகு இந்நூலின் புத்தக வடிவமைப்பு செய்யும் பணி எனக்குக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அட்டை வடிவமைப்பை அழகுறச் செய்த என் தம்பி விக்னேஷ் குமாருக்கு நன்றி.
இந்த நூலினை அனைவரும் அவசியம் வாங்கி வாசியுங்கள். 290 பக்கங்கள் கொண்ட, இதன் விலை ரூ. 250/– மட்டுமே.
வெளியீடு – அகத்துறவு , 19 சிவசக்தி நகர், இருகூர், கோவை 641103
– சீலா சிவகுமார்
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
பாராட்டுகள்
சீலா சிவகுமார் அவர்கள் இந்தக் கவிதைக்கு எழுதிய விமர்சனம் அருமையாக இருக்கிறது. அவர் எழுதி இருக்கும் விதம் அந்தக் கவிதை நூலை ஒவ்வொருவர் உள்ளத்திலும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயம் தோற்றுவிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. பாராட்டுக்கள்!!
விமர்சனம் அருமை. வாழ்த்துகள். படிக்க ஆவலை தூண்டும் நற்பதிவு.
ஆத்மார்த்தமான விமர்சனம். இக்கொடிய கொரானா காலத்தின் நிகழ்வுகளின் சரித்திர பதிவாக இந்நூல் விளங்கும்.யதார்த்தமான பதிவு. ஆசிரியருக்கும்,விமர்சகர் சீலா சிவகுமாருக்கும் என் வாழ்த்துக்கள் .