என் மின்மினி (கதை பாகம் – 25)
சென்ற வாரம் – நீ சொல்வது எல்லாம் சரி. தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர். – en minmini thodar kadhai-25.
கண் கலங்கிய அப்பாவை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அம்மாவும் தனது கையினை பிசைந்தபடி செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். தம்பியோ நடந்தனவற்றை எல்லாம் சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு சலித்தவனாக பக்கத்துக்கு வீட்டு பசங்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்பா….என்ன நடக்குது இங்கே.இவங்க எல்லோரும் என்னவெல்லாமோ சொல்றாங்க.இது உண்மையா அப்பா.அங்கே திருடிய பணத்தில் தான் எனக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் பண்ணீங்களா என்று கடகடவென எதையும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தேன்.
நான் பேச பேச திகைத்து நின்ற அம்மா என் பக்கத்தில் வந்து இதுக்கு மேலேயும் எதுவும் பேசி அவரை கொன்னுறாதே.யாரோ ஏதோ சொல்றாங்கனு நாமே அவரை சந்தேகபடலாமா என்றவாறே என் வாயை அடைக்க நான் அமைதியாக நின்றேன்…
என் முதுகை தட்டி கொடுத்தவாறே அப்பாவை பார்த்து இந்த புள்ள கேட்டதில் என்ன தப்பு இருக்கு.தப்பு செய்தால் தண்ணி குடிச்சுதான் ஆகணும்.நீயும் அது மாதிரி இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்.எடுத்த காசை ஒழுங்கு மரியாதையாக அவங்ககிட்டே திருப்பி கொடுத்து மன்னிப்பு கேளு என்றார் பெரியப்பா. ஒன்றும் புரியாமல் அனைவரையும் பார்த்து கைகூப்பி வணங்கியபடி நான் எந்த தவறும் செய்யவில்லை.அடுத்தவர் காசில்
குடும்பம் நடத்த நான் ஒன்றும் தரம் கேட்டு போகவில்லை என்று பேச பேச எதையும் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் வந்து இறங்கிய மூவரும் அப்பாவினை அடிக்க தொடங்கிவிட்டனர்.அனைவரும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தபோது நானும் அம்மாவும் மட்டும் அவர்களின் காலில் விழுந்து அப்பாவினை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுது கொண்டிருந்தோம்…
நாங்கள் கெஞ்சி அழுவதை பார்த்து சரி இப்போ போறோம்.ஆனால் எடுத்த காசு காலையில் வீடுதேடி வந்துருக்கனும் என்று மிரட்டியபடி கோபத்துடன் கிளம்பினார் அரிசி ஆலையின் முதலாளி சேகரன். நானும் அம்மாவும் சேர்ந்து அப்பாவை கைதாங்கலாக பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றோம். எங்க பின்னாலே பின்தொடர்ந்த பெரியப்பாவும் சித்தப்பாவும் ஏன்டா இப்படி திருடி மானத்தை வாங்குறே.கௌரவமாக வாழ்ந்த குடும்பத்தில் இப்படியும் ஒரு களவாணிப்பயலா என்று ஊரே காரி துப்புகிறது.இந்த பொழப்புக்கு பூச்சி மருந்து குடிச்சுக்கிட்டு குடும்பத்தோட சாகலாம் இல்லயா என்றனர் – en minmini thodar kadhai-25.
பொறுமையாக இருந்த அம்மா பேச ஆரம்பித்தாள்….
சொத்தில் அவருக்கு வர வேண்டிய பங்கையும் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு. இதுக்கு மேலேயும் அவரை கேவலப்படுத்தி பேசிட்டு இங்கே இருந்தா உங்கள உயிரோடு
கொளுத்திருவேன்.மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போங்கடா நன்றிகெட்ட நாய்களா என்று அவர்களை துரத்தி அடித்தாள்….
– அ.மு.பெருமாள்
பாகம் 26-ல் தொடரும்
ஒவ்வொரு வாரமும் புதிய திருப்பத் துடன் போகிறது
கதை உணர்ச்சிபூர்வமாக நகர்கிறது . கதாசிரியருக்கு வாழ்த்துகள்..