எங்கள் காணி நிலம் வேண்டும்

( முகவுரை : மனித உரிமை மீறல்களில். மக்களுக்கு உரிமையன் பாரம்பரிய காணிகளை அரசு ஆக்கிரமிப்பது உரிமை மீறலே. இக் கதை அதைக் கருவாக கொண்டது engal kaani nilam vendum tamil story)

கேப்பாப்புலவு

“காணி நிலம் வேண்டும் பராசக்தி …” என்ற பாரதியாரின் உரிமைப் பாடல் கேப்பாப்புலவு குக்கிராமத்தில் உள்ள ஒரே ஒரு தேநீர் கடையில்1975 ஆம் ஆண்டில் ஒலித்துகொண்டிருந்த காலம் அது. இராசா என்ற இராசையாவின் தேனீர் கடையில் இருந்து வரும் இசையைக் கேட்க சில கிரமத்தவர்கள் வருவார்கள். பசுப்பாலும். ஆட்டுப் பாலும் கலந்த தேனீரும் சுடச்சுட உளுந்து வடையும். சுண்டலும் அக்கிரமத்தில் கிடைக்கும் இடம் ராசாவின் தேநீர் கடை ஒன்றே. கதலி. இதரை வாழைக் குலைகள் இரண்டு எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். மூன்று போத்தல்களில் இனிப்புப் பண்டங்கள். தேனீர் விரும்பாதோர் தாகத்தைத் தீர்க்க கடையில் தொங்கும் செவ்விளனியை வாங்கிக் குடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். புகைப்போருக்கு த்ரீ ரோஸ் சிகரெட். சோக்கலால் பீடி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வை.சி.சி.கு சுருட்டு கூட அக் கடையில் இருந்தது அவைற்றை கடைக்கு முன் போடப்பட்டிருந்த இரு வாங்குகளில் இருந்து மக்கள் சுவைப்பார்கள்

உழைப்பாளிகளுக்கும். விவசாயிகளும் . மீன்பிடி தொழிலாளிகளும். ஆடு மாடு மேய்போரும் வசிக்கும் கிராமம் கேப்பாப்புலவு. நந்திக் கடலோரத்தில் கடல் காற்று வீசும் கிராமம். வீரன் பண்டாரவன்னியன் வழிவந்த வன்னியர்கள் வாழும் முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்த கிராமம்.

engal kaani nilam vendum

எங்கள் காணி நிலம் வேண்டும்

அக்கிராமத்தின் குலதெய்வம் இரு மைல் தூரத்தில் தென் கிழக்கு திசையில் உள்ள வரலாறு படைத்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில். பல அற்புதங்களைச் செய்தவள் அப் பத்தினி தெய்வம். கஜபாகு மன்னன் சேரநாட்டில் இருந்து மாதகல் வழியாக நந்திக் கடல் என்று அழைக்கப்படும் வாவிக்கு அருகே தோற்றுவித்த கோவில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பத்தாவது கோவில். பளை என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். 8.7 மைல்கள் நீளமும் 3.1 மைல்கள் அகலமும் உள்ள நந்திக் கடல் கரையோரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இறுதி ஈழப்போர் நடந்தது.அக்கிராமத்தில் சுமார் 140 குடும்பங்கள் 500 ஏக்கர் காணியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தனர்.

அமைதியாக வாழ்ந்த மக்கள் தாம் ஈழத்து இறுதி போரில் சிக்குப் படுவோம் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பலர் போரின்போது உயர் இழந்தனர். தமிழ் ஈழத் தலைவர் நந்திக் கடல் ஓரத்தில் மரணத்தைத் தழுவினார் என்று சிங்கள அரசு சொன்னாலும் அதற்கு போதிய ஆதாரம் இல்லை.

போர் 2009 இல் முடிந்ததும் சுமார் 60,000 வன்னி வாசிகள் பிறந்த நாட்டில் அகதிகளாய் வவுனியாவுக்கு அருகே உள்ள செட்டிக்குளத்தில் அமைந்த திறந்த வெளி மணிக் பண்ணயில் இராணுவத்தின் பார்வையில் வைக்கப் பட்டனர் அகதிகளுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருந்ததா என பலரை குறுக்கு விசாரனை செய்தது இராணுவம்.

கேப்பாப்புலவில் தேனீர் கடை வைத்திருந்த ராசாவின் குடும்பமும் அகதிகள் முகாமில் போருக்குப் பின் வாழவேண்டி வந்தது. ராசாவின் குடும்பம் இராணுவதால் தீவிர விசாரனைக்கு உற்படுத்தப்ட்டார்கள்  ராசாவை குறுக்கு விசாரனை செய்த இராணுவக் கேப்டன் மதும பண்டார கேட்ட கேள்விகளுக்கு ஒளிவு மறைவு’ இன்றி தைரியமாக ராசா பதில் சொன்னான்.
“ உன் பெயர் என்ன? அதிகாரத்தோடு கேப்டன் பண்டாரவின் முதல் கேள்வி ராசாவை பார்த்து பறந்தது
“இராசையா சேர்”
“ உண்டை குடும்பத்திலை எத்தினை பேர்”?
“ நானும் மனைவியும், மூன்று பிள்ளைகள். எல்லாம் ஐந்து பேர். ”
“ குடும்பத்தில் எல்லோரும் இந்த முகாமிலா ?
“ இல்லை சேர். நானும் என் மனவியும் எனது இரு மகள்மார் மட்டுமே உயரோடு இந்த முகாமில் இருக்கிறோம். மகன் எங்களோடு இல்லை”
“உன் மனைவி பெயர் என்ன”?
“ பார்வதி”
: :உனக்கும் உன் மனைவிக்கும் என்ன வயசு”

“ எனக்கு வயசு அறுபது. என் மனைவிக்கு வயசு ஐம்பத்தி ஆறு.”

“உன் பிள்ளைகள் பெயர்கள் என்ன”?

“ மூத்தவன் சேரன். அடுத்தது நாச்சியார் கடைசி மகள் நல்லம்மா”

“ உண்டை மகன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போரிட்டு இறந்தானா?

“ அது எனக்குத் தெரியாது சேர். சேரன் குடும்பத்தை விட்டுப் போய் எட்டு
வருடங்களாகி விட்டது“

“ எதற்காக அவன் வீட்டை விட்டு போனான்”?

“ அவன் படிக்காததுக்கு நான் ஒரு நாள் கண்டித்தேன். கோபத்தால் வீட்டை விட்டு ஓடிப்போனான்”

“ நீ உண்டை கிராமத்தில் என்ன வேலை செய்தனி”?

“ தேனீர் கடை வைதிருந்தனான்”

“நீ போராளிகளுக்கு உணவு கொடுத்ததாக உன்னைப்பற்றி விசாரித்த போது எங்களுக்குத் தெரியவந்தது. அது உண்மையா?

“ என் கடைக்கு பலர் வருவார்கள் போவர்கள். அதில் போராளிகள் யார் என்று அடையாளம் கண்டு நான் வியாபரம் செய்யவில்லை” kaani nilam vendum tamil story

“எவ்வளவு காலம் அந்த கிராமத்தில் வாழ்கிறாய்”?

காலச்சக்கரம்

“எனது பரம்பரை பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள். எனது பூட்டனார் வீரத்தேவன், வன்னி மன்னன் பண்டார வன்னியனின் படையில் இருந்தவர். அவரின் சேவைக்காக மன்னன் கொடுத்தது கேப்பாப்பிலவு கிராமத்தில் மூன்று ஏக்கர் வயல் காணி. காலம் தொட்டு அந்த கிராமத்தில் அந்த காணியில் விவசாயம் செய்து, இரண்டு அறைகள் உள்ள வீட்டில் வாழ்ந்து வருகிறோம்”.
“ நீ வேறு தொழில் செய்தனியா”?

“ வியாபரம் மட்டுமல்ல என் காணியில் என் மகள்மாரின் உதவியோடு காய்கறித் தோட்டம் செய்தனான். ஆடு மாடு வளர்த்தனான்”

“ உன் மகள்மார் இருவரும் என்ன செய்கிறார்கள்”?

“ இருவரும் முல்லைத்தீவில் ஒரு ஸ்கூலில் படித்தவர்கள். இப்ப போரினால் படிப்பை நிறுத்தி விட்டார்கள்”

“ உன் மகளில் ஒருத்தியான நல்லம்மா நல்லாக தையல் வேலை செய்வாளாமே உண்மையா?

“ என் கடையில் கிடைக்கும் வருமானம் போதாததால் தேடி வந்த கிராம மக்களுக்கு ஆடை தைத்து கொடுத்து சம்பாதிப்பாள்.”

“ உன் கிராம மக்கள். யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து வந்து குடியேறியவர்களா”?

“ இல்லை. என்னை போல் வன்னியர் வம்ச வழி வந்தவர்கள். பாரம்பரியமாக காணியில் வாழ்ந்து வருபவர்கள்”.

“ நாங்கள் விசாரித்ததில் உன் மகள் நல்லம்மா போராளிகளுக்கும் யுனிபோர்ம் தைத்துக் கொடுத்ததாக அறிந்தோம். உண்மையா”?

“ பிஸ்னஸ் என்று வரும் போது எந்த தையல் வேலை வந்தாலும் குடும்ப வருமானத்துக்காக அவள் செய்திருக்கலாம்”

“ விசாரணையின் போது தெரியவந்தது உன் மனவியும் இரு மகள்களும் புலிகள் இயக்க போரளிகளுக்கு உணவு தயாரித்து கொடுத்தார்கள் என்று. அது உனக்குத் தெரியுமா”?

“ விருந்தோம்பல் தமிழர் கலாச்சாரம். பசி என்று வீடு தேடிவந்தால் உணவு கொடுக்காமல் அனுப்புவது என் குடும்பத்தின் பழக்கமில்லை”

“ உன்னை உன் சொந்த காணியில் மீள் குடியமர்த்தாமல் பக்கத்தில் உள்ள பகுதியில் சகல வசதிகளோடு நவீன கிராமத்தில் உன் சொந்தக் காணியை விட கூடிய பரப்பு உள்ள காணியில் குடியமர்த்தினால் போய் வாழ உனக்கு சம்மதமா”?

“ எங்களுக்கு நாங்கள் பாரம்பரியமாக வாழந்து வந்த காணி நிலம் தான் வேண்டும். என் பூட்டனாருக்கு வன்னி மன்னன் பண்டார வன்னியன் கொடுத்த விலை மதிக்க முடியாத காணி அது. அதை எங்களிடம் இருந்து பறிக்காதீர். பிரிட்டிஷ் ஆண்ட போது எங்கள் காணியை அவர்கள் எடுக்கவில்லை”

“ திரும்பவும் உங்கள் காணிக்கு போவதில் அங்கு புலிகள் இயக்கத்தால் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உனக்குத் தெரியுமா?

“ எந்த ஆபத்தையும் நாம் எதிர்கொள்ள நாம் தயார். எனக்கு என் காணி நிலம் வேண்டும் திருப்பித் தாருங்கள். எங்களை எங்கள் சொந்த நாட்டில் அகதிகலாய் வைதிருக்காதீர்”

“ நீ சரியான பிடிவாதக்காரனாக இருக்கிறாயே. உன் காணிக்கு அதன் மதிப்புக்கு கூடுதலாக அரசு பணம் கொடுத்தால் அதை நீ அரசுக்கு விற்கத் தயாரா?

“ அரசு எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் என் பாரம்பரிய காணியை நான் விற்கப்போவதில்லை. எங்கள் குல தெய்வம் வற்றாப்பளை அம்மன் எங்களைக் கைவிடமாட்டாள். சிங்களவர்களை போல் எங்களுக்கு பத்தினி தெய்யோ மேல் நம்பிக்கை உண்டு ” உறுதியாக ராசா சொன்னான். கொகுவெலவுக்கு அருகே உள்ள நவகமுவைச் சேர்ந்த பண்டார ராசாவின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போனான். காரணம் அவனது கிராமத்தில் உள்ள பத்தினி கோவிலின் பக்தன் அவன்.

*******

ஐநா சபையின் அழுத்தம் காரணமாக 2015 இல் பெரும்பாலோர் மீள் குடியேற்ற பட்டனர். கேப்பாப்பிலவு 140 குடும்பங்கள் தமது பரம்பரையாக வாழந்த காணிகளில் மீள் குடியேற்றம் செய்யப் படாமல் அருகே புதிய மாதிரி கிராமம் அமைத்து அதில் குடும்பங்களை அரசு குடியேற்றியது. பரம்பரையாக மக்கள் வாழ்ந்த கேப்பாப்புலவு 5௦௦ ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து கண்ணி வெடிகளைச் சாட்டாக வைத்து காணிகளை திருப்பிக் கொடுக்க காலம் தள்ளிப் போட்டது. அக்காணிகளைக் கொடுக்காதுக்கு வேறு காரணமும் இருந்தது. எங்கே அந்தக் காணியில் புலிகள் இயக்கம் போரில் மடிந்த தம் மாவீரர் நினைவாக கல்லறைகள் அமைத்து விடுவார்களோ என்ற அச்சம் சிங்கள அரசுக்கு இருந்தது. ஒருபோதும் இல்லாத ஒரு புத்த கோவில் அக்கிராமத்தில் சிங்கள இராணுவதால் அமைக்கப்பட்டது. மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகள் தரப்படாமல் ஏமாற்றப்பட்டு வருவதாக மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர். என்று தோன்றும் அவர்கள் வாழ்வில் விடிவெள்ளி?

******.

மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை

(உண்மையும் கற்பனையும் கலந்து உருவாக்கப் பட்டது)

– பொன் குலேந்திரன் – கனடா

பொறுப்பாகாமை

You may also like...