இருள் சூழ்ந்த பௌர்ணமி!

இந்த சிறுகதை தொகுப்பு வாயிலாக கிருஷ்ண பிரியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – krishna priya kathaigal irul soolntha pournami

amavasai pournami

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக கிடைத்த அந்த இனிய மாலைப்பொழுது என்பதால் ஒரு களிப்பு. அவனது ஆர்வம் தனது ஸ்ப்ளெண்டர் வாகனத்தை அவள் இயக்க வேண்டும் என்று. ஏற்கனவே இருந்த பயிற்சியின் நம்பிக்கையில் அவள் வாகனத்தை இயக்க கம்பீரமாக அவன் பின் சீட்டில். சீண்டலாக சொன்னான், பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்வதும் ஒரு சுகம்தான் என்று.

காடுவெளியில் இருசக்கரவாகனம் சிறிது வேகம் குறைவாகவே சென்றது. முழுவதும் காட்டுப்பாதை என்பதால் தங்களையே மறந்து ரசனையில் ஆழ்ந்திருந்தது அவர்களது பயணம். ஒரு நீண்ட வேளைக்கு பிறகு கோடிலிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அதுவே அவர்களது பயணத்தின் இலக்காக இருந்தது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம். இங்கு தான் 108 அடி உயரமான சிவலிங்கம் இருக்கிறது.

அதன் அழகும் பிரமிப்பும் அவர்களை மெய்மறக்கச்செய்தது.

அவர்கள் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்றப்படுவதை உணர்ந்தார்கள். அந்த கணத்தில்தான் மனதில் ஒரு திடுக்கிடும் பயம் வந்தது. அதுவரை மறந்து போன காலம், தூரம், பாதுகாப்பு என அனைத்தும் அக்கணம் பூதாகரமாக காட்சிகொண்டது. அந்த கிராமம் பெங்களூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்கும் – krishna priya kathaigal.

அப்பொழுது மணி இரவு 7.

எப்படியும் திரும்பி சென்றாகவேண்டும் என்ற கட்டாயம், வேறுவழியும் தென்படவில்லை. அதுவரை இருந்த அந்த ரசனை உணர்வு அடையாளமின்றி சிதறிப்போனது அவர்களிடம்.
ஒரு சிறு அதிர்ஷடம், அன்று பௌர்ணமியாக இருந்தது. வேகமாக வண்டியை இயக்கதொடங்கினார்கள். அற்புதமாக தெரிந்த அந்த இயற்கை அழகு இப்பொழுது ஒரு அடர்ந்த பயம்கொள்ளும் காடாக தென்பட்டது.

அச்சம் உச்சமடைந்து

வரும்வேளையில், காதலிலும் ரசனையிலும் மறைந்துபோன தூரம் இப்போது எதோ ஒரு இனம்தெரியாத உருவம் அவர்களை துரத்துவதுபோல் பயமூட்டியது. நிலவின் வெளிச்சத்தை தவிர எந்த ஒரு மின்விளக்கின் வெளிச்சமும் கண்ணெட்டும் தூரம் வரை தென்படவில்லை. வழிநெடுவிலும் மரங்களும் அந்த காதலர்களும் தவிர எந்த ஒரு மனிதரின் நடமாட்டமும் இல்லை. எப்படியோ ஒரு பகுதி தூரத்தை வந்தடைந்தனர். ஆனால் வண்டி நின்றது நான்கு ரோட்டின் நடுவில்
அப்பொழுதுதான் அச்சம் உச்சமடைந்து.
அந்த நான்கு வழியில் எந்த வழி பெங்களூர் செல்லும் என்று தெறியவில்லை, வழிகேட்கவும் ஆளில்லை. அன்று கூகுல் மேப்பும் வழக்கத்திற்கு வராத காலம். சுற்றிலும் மிகப்பெரிய மரங்கள், போகும் வழியின் பாதை புலப்படவில்லை, திரும்பி போகவும் மனமில்லை

அதுவரை இருந்த தைரியத்தில் ஒரு சிறு நடுக்கம். கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு ஒரு பாதையை தேர்வு கொண்டனர்

சிறிது தூரம் வந்த பொழுது, எதேர்சையாக ஒரு இருசக்கர வாகனம் அவர்கள் எதிரே வந்தது. அதில் இரு ஆண்கள், பார்வையில் கிராமத்தைச் சேர்ந்தாற்போல் தென்பட்டனர். ஒருநிமிடம் வண்டியின் விளக்கை அணைத்துவிட்டு ஒதுங்கி நிற்கலாமா, இல்லை அவர்களை வேகமாக கடந்து சென்று விடலாமா, இல்லை நம்பிக்கையோடு நின்று வழிகேட்போமா என்று மனதில் திணறலும் நடுக்கமும். ஆளில்லாத அந்த நடுக்காட்டில், இரவுவேளை காதலியோடு நின்று, அடையாளம் தெரியாதவர்களிடம் வழிகேட்க யாருக்கும் பயம்தானே. ஆனால் செல்லும் வழி சரிதான் என்ற நம்பிக்கையும் இல்லை.

குருட்டு தைரியம் என்று சொல்வதுபோல், அந்த ஆண்களை நிறுத்தி அவர்களது பாதை சரிதானா என்று வினவினர். அவர்கள் எந்தவொரு சலனமுமின்றி எதார்த்தமாக வழியைக்கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தர். ஆழ்ந்த நன்றியை தெரிவித்தனர். நேரம் இரவு 8 யை கடந்து விட்டது.

மீண்டும் சோதனை, மறுபடியும் ஒரு முச்சந்தியில் வந்து சேர்ந்தனர். இப்பொழுது அந்த ஆளில்லாத காட்டில் ஒரு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்தது . பீதியின் உச்சத்திற்கு சென்றனர் அவர்கள். அந்த ஆட்டோ ஓட்டுனரை அணுக மனது தடைகொண்டது. அங்கு ஒரு சிறிய குடிசை பார்வையில் பட்டது, வெளிச்சம் இருப்பதை அறிந்தனர். வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுனரிடம் வழி கேட்டனர்.

தென்பட்டது ஒரு காட்சி

அவன் பிதற்றிக்கொண்டே வழி சொன்னான். புரிந்து கொண்டார்கள் அவன் குடி போதையில் இருப்பதை. அங்கு அவனை தவிர வேறு யாரும் இல்லை. அந்த குடிசையை பார்த்தனர், எந்த சப்தமும் கேட்கவில்லை. ஆனால் கண்டிப்பாக யாராவது இந்த ஆட்டோவில் வந்திருப்பார்கள், அவர்கள் அந்த குடிசையில்தான் இருக்கக்கூடும். அவர்களும் சுற்றும்முற்றி பார்த்தனர். யாருமில்லாத இந்த இடத்தில எதற்காக இந்த ஆட்டோ. யார் அவர்கள், அங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள், மனதில் அச்சம் பெருகியது. இருமனத்தோடும் குழப்பத்தோடும் அவன் கூறிய பாதையில் சென்றார்கள். அது பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்லும் ஒரு ஒற்றை சாலையாக இருந்தது

செல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம், ஆனால் நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒரு தைரியத்தில் அந்த ஒற்றைச்சாலையில் பயணித்தனர் . அப்போது அங்கு தென்பட்டது ஒரு காட்சி…

நீர்நிறைந்த பெரிய அகலமான குளம், அதன் அக்கறைமுழுவதும் உயர்ந்த மரங்கள் அடர்த்தியாக நிற்கிறது, பௌர்ணமி நிலவின் வெளிச்சம் நீரின் மீது படர்ந்து கிடந்தது. சலனமின்றி வெள்ளி தட்டுபோல் நிலவின் பிம்பம் நீரில். அதற்கு மீண்டும் அழகுசேர்ப்பதுபோல் அந்த மௌனமான இரவுவேளை. ஏதோ படத்தில் காட்சிகொள்ளும் காதல் பாட்டின் சூழலைபோல் பிரமிப்பூட்டியது. கண்கொள்ளா அந்த அழகும்! கரைபுரண்டு ஓடும் பீதியும்!
ஒரே காட்சியில், ஒரே கணத்தில், ஒரே சூழலில். அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

எதனால் இந்த பீதி.

அவர்கள் மாலையில் செல்லும்போது, வழியில் எந்த ஒரு குளமும் இருக்கவில்லை. உறுதியானது! தாங்கள் தவரான பாதையில் வந்துசேர்த்துள்ளோம் என்று.
அந்த பௌர்ணமி வெளிச்சம் அவர்களுக்கு மட்டும் இருளாக இருந்தது.
இதயம் மிகவேகமாக துடிக்க தொடங்கியது
எதற்கு அந்த குடிபோதையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் இந்த ஒற்றை சாலையை கைகாட்டினான்.
அது அவன் நமக்கு போட்ட சதியோ?
எப்படி பார்த்தாலும், மீண்டும் அவர்கள் அந்த ஒற்றை பாதையில்தான் திரும்பி வரவேண்டும்
வரும் நேரம் அவன் அவனது கூட்டாளிகளோடு காத்திருப்பானோ?
இல்லை அவர்கள் நம்மை பின் தொடர்ந்து வந்திருப்பார்களோ?
அங்கேயே நிற்கவும் மனமில்லை மீண்டும் அந்த பாதையில் வெளியேறவும் நடுக்கம். மெதுவாக வண்டியை இயக்கி ஒருவழியாக பிரதான சாலையை அடைந்தனர்.
வேறு பாதையில்லை, அதே ஆட்டோ ஓட்டுனரை கடந்தே அடுத்த பாதையை அடையவேண்டும்
இருக்க பிடித்து கொண்டு வேகமாக அந்த முச்சந்தியை கடந்து சரியான பாதையில் வந்து சேர்ந்தனர்
இன்னும் தூரமும் பயமும் துரத்திக்கொண்டே வந்தது அவர்களை.

ஒவொரு சாலை சந்திப்பிலும், செல்லும் வழி எதுவென்று தங்களை தாங்களே கேட்டு கொண்டும், தாங்கள் வந்தபோது கண்ட காட்சிகளை நினைவு கொண்டும் பாதைகளை தேர்வு செய்து முன்னேறினர். முழுமையான காட்டுப்பகுதி என்பதால் விலங்குகள் வழியில் தென்படுவதற்கான சூழலும் எதிர்பார்க்கப்பட்டதே. புதர்களில் ஏற்படும் அசைவு, கருமையாக காணும் உருவ பிம்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தது. ஏதோ காட்டு விலங்கு அவர்களது வழியில் குறிக்கிடுவதுபோன்று. அவள் மெல்லிய குரலில் கேட்டால், ஏதேனும் விலங்கு நம்மை எதிர்கொண்டால் என்ன செய்வது என்று, அவனுக்கு மௌனத்தைத்தவிர எந்த பதிலையும் அளிக்க முடியவில்லை.

அவனது கண்கள் வாகனத்தின் எரிபொருளின் அளவை காட்டும் கருவியை நோக்கியது. முறையான பாதையென்றால் நிற்காமல் சென்று விடலாம், மிகவும் சுற்றி அலைந்தால் பின்பு வண்டியை இயக்குவதற்கான எரிபொருளும் தீர்ந்துவிடும் என்ற அச்சம். ஆனால் அவளிடம் அதை தெரியப்படுத்தவில்லை . அவனது பார்வை, வழியின் நீண்ட தூரத்தை கண்காணித்துக்கொண்டு சென்றது. அவளோ தனது பின்பக்கமாக யாராவது தங்கள் பின்னால் வருகிறார்களா என்று உறுதிப்பார்த்துக்கொண்டிருந்தது. அவர்களது மவுனத்தில் எண்ணற்ற வார்த்தைகள் ஒன்றோடு ஓன்று மோதிக்கொண்டன.

சிறிது வேதனையோடு சேர்ந்த பயதை ஏற்படுத்தியது

எப்படியோ இரவு 9 மணியளவில் வந்து அடைந்தனர் சின்ன திருப்பதியை.
அப்போதுதான் மூச்சு காற்றில் சிறிது சூடு தளர்ந்தது.
பயத்தில் களைத்துப்போன அவர்கள் கையில் தாகத்தை தீர்க்க தண்ணீர் குப்பியில்லாததால் அருகே இருந்த சிறு கடையில் நின்று வாங்கினர்.
எதார்த்தமாக அந்த கடைக்காரர் இந்த நேரத்தில் இங்கு இருக்குறீர்களே எங்கே பெங்களூர் செல்கிறீர்களா என்று கேட்டார்.
இல்லை என்று சொல்வதற்கான வாய்ப்பும் இல்லை. அங்கிருந்து செல்வதற்கான அடுத்த இடம் அது மட்டும்தான்.
இரவுகளைப்பு கொள்ள எதேர்ச்சியாக சில இளைஞர்கள் அங்கு அமர்ந்திருந்தனர் – krishna priya kathaigal.
அவர்களது நாட்டுப்புற தோற்றமும், பார்வையில் இருந்த பாவனையும் இவர்களுக்கு சிறிது வேதனையோடு சேர்ந்த பயதை ஏற்படுத்தியது.
அந்த கடைக்கார முதியவர் அனைத்தையும் புரிந்தாற்போல் அவர்களை நோக்கி பயம்கொள்ளாமல் பாதுகாப்பாக செல்லுங்கள் என்றார்.

ஒரு நிமிடம்! என்று கூறி, அந்த பெண் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துச்செல்லுமாறு கூறினார். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கிருந்த இளைஞர்களில் இருவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் பாதையில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்றபோது , இவர்களுக்கு பெரியதொரு பயத்தை உண்டாக்கியது. அவர்கள் தங்களது யாத்திரையை அறிந்து கொண்டுதான், நாம் செல்லுமுன்னே அதே பாதையில் செல்கிறீர்களா என்று. தைரியத்தையும் நம்பிக்கையும் வளர்த்துக்கொண்டு சிறிது வேகமாக வண்டியை ஓட்ட துவங்கினர் – krishna priya kathaigal.

அவர்களுக்கு நன்றாக தெரிந்தது அவர்களுக்கு பின்னால் இன்னொரு இரு சக்கர வாகனமும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது. ஒரு சிறு தூரத்திற்கு பின்பு ஒரு பாதை சந்திப்பு இருப்பது புலப்பட்டது. அவர்களுக்கு முன்பாக சென்ற அந்த இளைஞர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி இருந்தனர். வாகனத்தின் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது . பின்னால் வந்துகொண்டிருக்கும் வாகனத்தின் இரைச்சலும் மிக அருகாமையில் கேட்கத்துவங்கியது. அவளுக்கு அப்படியே கத்தி கூச்சல் இட வேண்டும் என்பதுபோல் இருந்தது. வேர்வையில் உடல் நனைத்தது. அவனுக்கோ செய்வதறியாது திகைத்தான். வண்டியின் வேகத்தை குறைத்தான்.

படங்களில் வரும் நாயகனைப்போல் அந்த இளைஞர்களை சண்டையிட்டு வெல்லும் அளவிற்கான தெம்பு தன்னிடம் இல்லை என்று நன்றாக தெறியும். தன் காதலிக்கு ஏதாவது நேர்ந்திடுமோ என்று நினைக்கின்ற கணம், அவனது உடல் ஆட்டம்கொண்டது. விரைந்து செல்லலாம் என்றால் எதிரே நிற்கும் இளைஞர்கள் சாலையை மறித்தவாரு வாகனத்தை நிறுத்தி இருந்தனர். அவர்களது பார்வையும் இவர்களது வழிநோக்கியே இருந்தது. இவை அனைத்தும் அவர்களது மிச்சம் இருந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டிருந்த போதே , பின்னால் விரைந்து வந்து கொண்டிருந்த அந்த வாகனம் அவர்களது வாகனத்தோடு மிக அருகில் சேர்ந்தார் போல் வந்து நின்றது. அவள் ஒரு கணம் அவனது முதுகோடு இறுக்கமாக அனைத்துக்கொண்டு கண்களை மூடினாள். அவளது நீர்த்துளி கழுத்தை வந்தடைந்திருந்தது.

அவன் சிறிது சுதாரித்துக்கொண்டு அவளது கைகளை தட்டி தைரியமாக இரு என்று முனங்கினான். இங்கே பார் என்றான், அவள் மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தபோது அவளது நடுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. அந்த வாகனத்தில் வந்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அந்த இளைஞர்கள் அல்ல, ஒரு நடுத்தர வயது இளைஞன் மற்றும் அவரது தந்தையும் என்று உருவம்கொண்டு புரிந்தாள். அந்த முதியவர் தனிவான குரலில் கேட்டார், நீங்கள் பெங்களூர்தானே செல்குறீர்கள், நாங்களும் அங்கேதான் செல்கிறோம் வாருங்கள் செல்லலாம் என்றார். சில நேரம் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்போம் என்பார்களே, அதுபோல் அவர்கள் அன்று கடவுளாக தென்பட்டனர்.

இப்பொழுது அந்த எதிர்நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயமின்றி கடந்தனர். கடந்த பின்பு மீண்டும் திரும்பிப்பார்த்தால் , அந்த இளைஞர்கள் இப்பொழுதும் அதேபோல் தான் நின்றுகொண்டிருந்தார்கள்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே…
ஒரு வழியாக பெங்களூர் தெரு விளக்குகளின் வெளிச்சம் கண்ணில் தென்பட்டது. அந்த முதியவரின் வாகனம் வேறு ஒரு சிறு பாதையில் பயணித்து சென்றது….

– கிருஷ்ண பிரியா மயில்சாமி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *