மின்னிதழ் அக்டோபர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh october 2022

சமீபத்தில் வெளியான நீரோடை மகேசின் கவிதை நூல் “மௌனம் திறந்த நாற்காலி” மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகஸ்ட் மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள் ( பெரும்பாலானோர் சிறப்பான கவிதை ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தாலும் இருவரை மட்டுமே வெற்றயாளர்களாக தேர்ந்தெடுக்க இயலும் )
ரேவதி மகேஸ்
சனவ் குணசேகரன்


கவிதை தொகுப்பு

இந்த மாத மின்னிதழில் கவிஞர் திருப்பூர் சாந்தி அவர்களை அறிமுகம் செய்வதோடு அவர்களின் கவிதைகளை வெளியிடுகிறோம்.

முயற்சி

உதிர்கின்ற சருகுகள் கூட
உரமாகி வளம் சேர்க்கிறது …
மனிதா நீ மட்டும் ஏன்
ஒற்றை தோல்வியில்
உதிர்ந்து போகிறாய் …
தோல்வி முடிவல்ல நீ
எழுத போகும் வெற்றி
சரித்திரத்தின் முதல் புள்ளி …
கூட்டு புழுவாகவே இருந்துவிட்டால்
உன்னை கொண்டாட யாரும்
வர போவதில்லை ….
முயற்ச்சி சிறகுகளை விரித்து
வண்ணத்துப்பூச்சியாய் பறந்துவா
உன்னை ஆர்ப்பரித்து
கொண்டாட ஆயிரம் பேர் …
முடியாது என்கிற வார்த்தைக்குள்
முடங்கி போகாதே …
முடியும் என்கிற நம்பிக்கையில்
முதல் அடியை எடுத்துவை

உன்னை வரவேற்க சிரம்
தாழ்ந்து காத்திருக்கிறது
ஒரு சிகரம் ….

சிறை

மதிப்பெண் கொண்டே
நிர்ணயிக்கப்படும்
மாணவனின் திறன்
சிந்தனைகளுக்கு சிறை ….
அழகு என்பது புறம் சார்ந்தது
என்ற புரிதல் அழகிய
ஆன்மாக்களுக்கு சிறை …
கற்பு என்பது உடல் சார்ந்தது
என்ற புரிதல் பெண்மையின்
உணர்வுகளுக்கு சிறை …
அதிகார வர்கத்தின் அடக்குமுறை
சாதிக்க துடிக்கும்
சாமானியனுக்கு சிறை …
நேரமே சரியில்லை
என்கிற மூட நம்பிக்கை
முன்னேற்றத்தின்முதல் சிறை …
சொல்லிக்கொண்டே போகலாம்
சிறைகள் ஆயிரம் அத்தனையும்
திறக்கும் ஒற்றை திறவுகோல்
நம் கையில் அது நம்மால்
முடியும் என்கிற நம்பிக்கை ….


தலையணை

உணர்வுகள் மரத்துப்போன
ஊமை குயில்களின் கானம்
உன்னோடு மட்டும்தான் ….
கருகிப்போன கனவுகளை
இதயத்தில் புதைத்துவிட்டு
இதழ்களில் புன்னகை சிந்தி
வாழும் இதயங்களின்
சுமைதாங்கி நீயேதான் ….
உன்னில் முகம்புதைத்து
கண்ணீரில் நனையும்போது
இதயத்தின் வலிகளெல்லாம்
கரைந்து போனதாய் ஒரு பிரம்மை…
ஆயிரம் வலிகளையும் தாண்டி
அடியெடுத்து வைத்து முன்னேற
முயலும்போது இயலாமையும்
சோர்வும் எதிரே நிற்கையில்
உன்னில் முகம்புதைத்தே
ஆறுதல் தேடுகிறேன் …
ஒரு கோடி வலிகளை
உன்னிடம் கொட்டி தீர்த்தபோதும்

என் சுமைகளை இறக்கி வைக்கும்
சுமைதாங்கியாய் நீயே இருந்தபோதும்
ஆறுதலை மட்டுமே நீ தந்தாய் …
நீ மட்டுமே உன்னிடம் பகிர்ந்ததை
யாரிடமும் சொல்வதில்லை ….

– சாந்தி, திருப்பூர்


ஆரோக்கிய சமையல் – அரசாணி (பரங்கிக்காய்) இலைப் பொரியல்

தேவையான பொருட்கள்

அரசாணி இலை – 6
சிறிய வெங்காயம் – 100 கிராம்
தேங்காய் எண்ணை – தாளிப்பதற்கு
உப்பு –  தேவைக்கு ஏற்ப
மிளகு -10-15 
அரிசி- 1 தேக்கரண்டி

செய்முறை

அரசாணி இலையின் பின்பக்கம் உள்ள நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியையும், மிளகையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடி செய்து கொள்ளவும். தேங்காய் எண்ணெய் கடாயில் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்ந்து நன்றாக வதங்கிய பின்பு அரசாணி இலை உப்பு சேர்த்து வதக்கி சிறிய தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக மூடி வைக்கவும். பின்பு பொடி செய்து வைத்துள்ள உப்பு, மிளகைத்தூவி சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி விட்டு இறக்கி வைக்கவும். இப்போது சுவையான அரசாணி இலைப்பொரியல் தயார். 

குறிப்பு:- அரசாணி காய் காம்பு பகுதியை தோசை ஊற்றும் போது எண்ணெய் உற்றவும், தோசைகல்லில் எண்ணெய் தடவவும் பயன்படுத்தலாம்.

– சூலூர் ஆனந்தி


சிறுகதை – ஜமீன் பங்களா

எதிரே வருபவர் யார் என்று தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. அமாவாசை இரவு… மார்கழி மாத குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது.அந்த இரவின் மௌனத்தில் இலைகள் சலசலவென காற்றில் அசையும் ஓசையே ஒருவித அமானுஷ்யத்தை கொடுத்தது.

இரவு மணி பன்னிரண்டு. கும்மிருட்டை கிழித்துக்கொண்டு இந்த சிவப்பு நிற படகுகார் ஜமீன் பங்களா எதிரிலுள்ள மரத்தடியில் வந்து நின்றது.காரிலிருந்து இறங்கிய ஆனந்த் மாளிகையை பார்த்தான்.

இந்த இருட்டும், மாளிகை தோற்றமும் அவன் மனதில் ஒரு திகிலை உண்டாக்கியது .சே..சே.. பேயும் இல்லை… பிசாசும் இல்லை. .என எண்ணிக் கொண்டான். அவன் அந்த பங்களாவை வாங்க நினைத்த போது, அதில் பேய்,பிசாசு நடமாட்டம் இருக்கிறது, அமானுஷ்ய குரல் கேட்கிறது என்று கணக்குப்பிள்ளை பயமுறுத்தியது நினைவிற்கு வந்தது. நேரில் போய் பரிசோதித்து விடுவது என்ற முடிவிலேயே அன்றிரவு அவன் மட்டும் தனியாக வந்திருந்தான்.மிகப் பெரிய பங்களா… பர்மா தேக்கால் இழைத்த மரவேலைபாடுகள்… பெரிய பெரிய லாந்தர் விளக்குகள்… குறைவான விலை… இவையெல்லாம் அவனை அந்த பங்களாவை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளியிருந்தது.

பெரிய ஜமீன்ந்தாருக்கு இரண்டு வாரிசுகள்… ராஜரத்தினம் கனகரத்தினம் என இரு மகன்கள்.ஜமீன்தார் மனைவி இறந்தபின்… இரண்டாவதாக ஒரு நாட்டியக்காரியை மணந்து கொண்டதாகவும், அதனால் மகன்கள் இருவரும் கோபித்துக்கொண்டு விலக… ஜமீன்ந்தார் இறந்த பிறகு, அந்த நாட்டியக்காரியும் சில வருடங்களில் இறந்துவிட…. அவளுடைய ஆவி மட்டும் அங்கு உலவுவதாக கணக்கப்பிள்ளை சொல்லியிருந்தார். அந்த ஜமீன் பங்களா பெரிய மகன் ராஜரத்தினத்தின் பொறுப்பில் இருந்தது. அவர் அதை வந்த விலைக்கு விற்று விட்டு வெளிநாட்டில் போய் மகனுடன் குடியேறுவதாக திட்டம்.

பேய் உலவுவதாக வெளியே செய்தி பரவியதால்… இதை வாங்க ஒருவரும் முன்வரவில்லை. பல பேர் வந்து பார்த்துவிட்டு வேணாம்னு சொல்லிவிட்டுப் போக, இப்போது கடைசியாக ஆனந்த் அதை வாங்க விரும்பினான். அவனுக்கு இயல்பாகவே பழங்காலத்து பொருட்கள் மீது ஒரு பெரிய அபிமானம் உண்டு என்பதால் அந்த ஜமீன் பங்களாவை எப்படியாவது வாங்கிவிட துடித்தான்.

அவன் பார்த்துக்கொண்டிருந்த அதேவேளையில் திடீரென மாளிகை மேன்மாடியில் விளக்குகள் பளீரென்று எரிய, ஆனந்துக்கு திக்கென்றது… ஜன்னல்கள் படபடவென அடித்துக் கொண்டன… அதை தொடர்ந்து தடதடவென யாரோ ஓடும் சப்தம் கேட்டது. மாளிகையின் கீழ்ப்பகுதியில் மெல்லிய விளக்கொளியில் யாரோ நடமாடுவது நிழல் உருவமாக தெரிந்தது. பின் ஆளை நடுங்க வைப்பது போன்ற அமானுஷ்ய குரலில் ”கீச்சென’ ஒரு சப்தம் …..கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது…உள்ளே போய் தைரியமாக பார்க்கலாமா என்ற எண்ணம் ஆனந்திற்கு லேசாக எழுந்தது பின் திடீரென யாரோ அழுவது போல சத்தம் கேட்டது . அழுகை சத்தம் நிற்க….. யாரோ நடனமாடுவது போல சலங்கை சத்தம் கேட்டது .ஆனந்த் அச்சத்தின் உச்சிக்கே போனான். ”லப்டப்’ என்ற அவனுடைய இருதயத்தின் சப்தம் அவனுக்கு கேட்க ஆரம்பிக்க… அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.

வியர்வையில் தெப்பமாக நனைய, அவசரமாக காரில் ஏறி, காரை கிளப்பிக் கொண்டு விரைந்தான்.கணக்குப்பிள்ளை கூறியதில் தவறில்லை இது உண்மையிலேயே அமானுஷ்ய பங்களாதான். இதை வாங்குவது தவறு…என்று பங்களாவை வாங்கும் நினைப்பை உதறியவனாக…

ஆனந்த் போனதும் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தனர் கணக்கப்பிள்ளையும், ராஜரத்தினத்தின் தம்பி கனகரத்தினமும்.

“ரொம்ப நன்றி கணக்கப்பிள்ளை… இந்த பங்களா நியாயமா எனக்கு சேர வேண்டியது. என் அண்ணனுக்கும் எனக்கும் ஜமீன் சொத்துக்களை பிரிச்சு எழுதி வைச்ச போது என்அப்பா பெரிய ஜமீன்தார் எனக்கு எழுதிக் கொடுத்தது இந்த பங்களா .ஆனா என் அண்ணன் என்னை ஏமாற்றி அதை விற்க முயற்சிக்கிறான். அதை தடுக்கவே இந்த பேய் நாடகம் உங்க உதவியும், தோட்டக்காரன் குப்பன் உதவியும் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை.

“ஐயா! நன்றியெல்லாம் சொல்லாதீங்க! நீங்க இந்த பங்களா ஜமீன்னோட இளையவாரிசு. இத நீங்க அனுபவிக்கிறது தான் முறை. எங்களுக்கும் அதுதான் சந்தோஷம். இனிமே நீங்க நிம்மதியா இந்த பங்களாவில இருக்கலாம். உங்க அண்ணனும் அமெரிக்கா போறாரு.போறதுக்குள்ள இதை வித்துட்டு காசை எடுத்துட்டு போக பார்த்தாரு அதனால் விக்கமுடியாமல் நாம செஞ்சிட்டோம்.இனி நீங்க போய் கேட்டீங்கன்னா….இங்க பேய் இருக்குது… நீங்க நல்லா வாழக் கூடாதுன்னு நினைச்சு உங்களுக்கு எழுதிக் கொடுத்துடுவார்.நீங்களும் நிம்மதியா இருக்கலாம் என்று சொல்ல…” நன்றியுடன் கை கூப்பினார் கனகரத்தினம்.

– தி.வள்ளி, திருநெல்வேலி


செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேசம்
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். சொத்து பிரச்சனை நல்ல முடிவுக்கு வரும். வீட்டில் ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் உயர் பதவி பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்காது. கலைஞர்களுக்கு குடும்ப தேவைகள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்தவும். விவசாயம் செழிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.

ரிசபம்
இந்த மாதம் சனி பகவான் நன்மையே செய்வார். பிரயாணத்தின் போது கவனமாக செயல்படவும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வரலாம். வீட்டில் பொன் பொருள் சேரும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் பணியில் கவனமாக செயல்படவும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் மாநாடு பயிர்கள் மூலம் வருவாய் உயரும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். சுப செய்தி ஒன்று வீடு தேடி வரலாம். பண வரவு சுமாராகவே அமையும். எதிரிகள் உங்கள் வசம் சரணடைவார்கள். சொத்து பிரச்சனை குழப்பத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் அதிக நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனி பகவான் வழிபாடு செய்து வரவும்

கடகம்
இந்த மாதம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் குழப்பம் அடைய வாய்ப்புகள் உள்ளன. சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அதிகப்படியாக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு உள்ளது. விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் குடும்ப வருமானம் உயரும்.
பரிகாரம்: காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். பண வரவு தேவைக்கேற்ப அமையும். எதிரிகள் தொல்லை இருக்காது. உறவினர் வருகை நன்மை பயக்காது. புதிய செய்தி ஒன்று தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் வாழ்க்கை சிறப்படையும். வியாபாரம் புதிய நவீன வகை வியாபாரம் நடைபெறும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் மகசூல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரம்: தினம் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.

கன்னி
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வரவு செலவு சம்பந்தப்பட்டவை நல்ல கவனம் செலுத்தவும். எதையும் யோசித்து செயல்படவும். கடந்த கால அனுபவம் நன்மை பயக்கும். பணியாளர்கள் வருவாய் உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் குடும்பத்தில் நன்மதிப்பை பெறுவார்கள். மாணவர்கள் எதிலும் பொறுமை காக்கவும். விவசாயம் லாபம் அடையாது.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

துலாம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உறவினர் வருகை நன்மை பயக்கும். சுப நிகழ்ச்சி ஒன்று வீட்டில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. பணவரவு சுமாராக இருக்கும். எதிரிகள் உங்கள் வசம் சரணடைவார்கள். பணியாளர்கள் வரவு செலவு நன்கு கவனமாக செயல்படவும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் நன்கு உயர்வடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

விருச்சிகம்
இந்த மாதம் சனி பகவான் நன்மையை செய்வார். பண வரவு சீராக இருக்கும், ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. உடல் நலம் நல்ல முன்னேற்றம் அடையும். உறவினர் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் கூட்டு தொழில் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.

தனுசு
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையை செய்வார். உறவினர் வருகை நன்மை அடையாது. பணவரவு தேவைக்கேற்ப இருக்கும். பிரயாணம் செய்யும்போது கவனம் தேவை. வெளியூர் பயணம் தனியாக செல்ல வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் பணியில் நல்ல கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கலாம். கலைஞர்கள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. விவசாயம் சுமாராகவே இருக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.

மகரம்
இந்த மாதம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். எதை செய்தாலும் நன்கு யோசித்து செயல்படவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சுப நிகழ்வு ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் உச்சம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கலைஞர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்ப குழப்பங்கள் நீங்கும். எதிரியை உங்கள் வசம் சரணடைவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் உயர் பதவி அடைவார்கள். வியாபாரம் ஒரே சீராக இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
பரிகாரம் சனிக்கிழமை அன்று சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.

மீனம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். சுப நிகழ்வு ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளன. பண வரவு சுமாராகவே அமையும். பிரயாணத்தின் போது கவனமாக செயல்படவும். எதையும் வெளிப்படையாக செய்யவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் குறைந்த லாபமே கிடைக்கலாம். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    பல்சுவை விருந்து எல்லா பகுதிகளும் சிறப்பாகவும் தரமாகவும் ரசிக்கும் வண்ணம் இருந்தது வாழ்த்துக்கள்

  2. பிரகாஷ்.கி says:

    சாந்தி அக்காவின் கவிதை அருமை… வாழ்த்துக்கள் சாகோ