தடாக மீன்கள் – சிறுகதை
கதாசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களின் சித்திக்க வைக்கும் சிறுகதை – thadaaga meengal sirukathai
சலனமற்று இருந்தது அந்த தெப்பக்குளம்..அது கோவிலின் அழகை மேலும் அழகு செய்யும் விதமாக இருந்தது.தெளிந்த நீர்ப்பரப்பில் படிக்கட்டுகள் முழுதும் சிறியதும் பெரியதுமான மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. மேல் படிகளில் சிதறிக் கிடந்த பொரிகள் காற்றில் பறந்து குளத்திற்குள் விழுந்தது. பொரிகளைப் பிடிக்க மீன்களுக்குள் நடந்த போட்டியைப் பார்க்கையில் மெல்லிய புன்னகை மலர்ந்தது வசுமதிக்கு.
எவ்வளவு கவலைகள், வருத்தங்கள் இருந்தாலும் இங்கே வந்து தனிமையாய் கொஞ்ச நேரம் இருந்தால் மனம் சற்று அமைதியடைவது போல் இருக்கும் அவளுக்கு. இப்போதும் அப்படித்தான் இங்கே வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கும் ஆனால் வீட்டுக்கு போக மனம் வரவில்லை. மனம் மிகவும் வருத்தமாக இருந்தது.போதும்..போதும் எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்தது. தனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது எல்லாப்பெண்களுக்கும் இப்படியேதானா.. தெரியவில்லை. – thadaaga meengal sirukathai
என்ன படித்து என்ன? எந்த பதவியில் இருந்தும்தான் என்ன?
ச்சே.. ஒரு முடிவுகூட சுயமாக எடுக்க முடியவில்லை.கோபமும் வருத்தமும் ஒருசேர போட்டியிட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பிறர் பார்க்கா வண்ணம் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள்.தன் திறமைக்கு பரிசாக கிடைத்த பதவிஉயர்வும் அதோடான இடமாறுதலும் குறித்து மகிழ முடியவில்லை.மாறாக கணவன் ஆனந்தின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ப்ளீஸ் டா.. வசு..இப்போ எப்படி எல்லாத்தையும் விட்டுட்டு அங்கே போக முடியும். மதுரையும், ஈரோடும் பக்கத்துப்பக்கத்திலா இருக்கு.. தினம் போய்ட்டு வர முடியுற தூரமா அது. புரிஞ்சிக்கடா..அதோட பவிக்குட்டி ஸ்கூல்.. அம்மான்னு எவ்வளவோ பிரச்சனை இருக்கு.. அதான் சொல்றேன்..
விஷயம் இதுதான் வசுமதிக்கு கூட்டுறவு வங்கியில் கேஷியர் பணி, இப்போது பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம். ஆனந்தும் அரசாங்க வேலையில் இருப்பதால் நினைத்தவுடன் ஊர் மாற்றிப் போக முடியாது. மாமியார் வேறு தன் கடைசி காலம்.. தான் பிறந்த ஊரான மதுரையிலேயேதான் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட..அதனால் அவளின் பதவிஉயர்வு இப்போது பிரச்சனையாகவும் கேள்விக்குறியாகவும் ஆகிவிட்டிருந்தது.
கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இப்படி ஏற்க முடியாமல் கைநழுவுவது கண்டு மனம் குமுறியது.
பேச தோன்றவில்லை
மேனேஜர் பேசியது மறுபடியும் நினைவில் வந்து போனது.. “என்னம்மா.. வசுமதி எவ்வளவு நல்ல வாய்ப்பு.. உனக்கு கிடைச்சிருக்கு இப்படி வேணான்னு சொல்றியே.. இந்த சின்ன வயசிலேயே மேனேஜர் ஆகறது ரொம்ப பெரிய விஷயம்.. உன் சின்சியாரிட்டிக்கு கிடைச்ச ரிவார்ட்..ஏன் வேணாம்னு அவொய்ட் பண்ற..” பேமிலி சிச்சுவேஷன் சார்.. அவரிடம் சொல்லும்போதே அழுகை குமுறிக்கொண்டு வந்தது. என்னவோம்மா.. நல்லா யோசிச்சிக்கோ.. இந்த சான்ஸ் விட்டேன்னா அடுத்து மூணு வருஷம் கழிச்சுத்தான் பார்த்துக்கோ ‘ என்றவாறு அவர் பங்கிற்கு அங்கலாய்த்தார்.
ச்சே.. இப்படி ஆகி விட்டதே.. மனம் சத்தமாய் ஓலமிட்டது.
பேக்கினுள் இருந்த மொபைல் ஒலித்தது..எடுத்துப் பார்த்தாள். கணவன் ஆனந்துதான்.. எடுக்கவில்லை.. சலிப்பாக இருந்தது. பேசவும் பிடிக்கவில்லை.. எல்லோரும் சுயநலம்.. இதே அவனின் பதவிஉயர்வுடன் இடமாறுதல் நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை தனியாய் மகளையும்.. மாமியாரையும் கவனித்துக் கொண்டவள்.. அவன் வார விடுமுறை நாட்களில் மட்டுமே வருவான். ஆனால் இப்போது இப்படி பேசுகிறான்.போன் எடுத்துப் பேச தோன்றவில்லை.
குதூகலமாய்
மீண்டும் போன் ஒலித்தது.. அவனின் மதிம்மா.. மதிக்குட்டி என்ற கொஞ்சல் மொழிகளைக் கேட்க விருப்பம் இல்லை.. எல்லாம் போதும் .. வாழ்க்கை வெறுத்தாற் போல் இருந்தது. அவரவருக்கான நியாயம் வேறு வேறாகத்தான் இருக்கிறது. உழைப்பு என்பது பொதுவானதுதானே.. அது ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை. கிடைக்கும் பலன்தான் ஆணுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்ணுக்கு ஒரு மாதிரியாகவும் கிடைக்கிறது.
வீட்டுக்கு போக மனம் வரவில்லை.கொஞ்ச நேரம் அவர்கள் என்னைத் தேடட்டும், அப்போதாவது என் வலி புரியட்டும். மீண்டும் குளத்தைப் பார்த்தாள். நீர் நிறைந்த மேல்படியில் பெரிய மீனும் அதைச்சுற்றிலும் சிறிய மீன்களுமாய் ஒரு குடும்பமாய் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. எஞ்சிய பொரிகளை குதூகலமாய் பங்கிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்க்கையில் மனம் கொஞ்சம் அமைதியடைந்தாற் போல் தோன்றியது.பாதத்தை மெல்ல அந்த மேல் படியில் வைத்தாள். சட்டென்று கூட்டமாய் மீன்கள் வந்து பாதங்களை முத்தமிடுவது போல் வருடியது. அது தன்னையறியாமல் சிலிர்ப்பை உண்டாக்கியது.
விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்
பாதங்களை நீரில் அமிழ்த்துவதும் எடுப்பதுமாய் மீன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
இப்போது மீண்டும் போன் ஒலித்தது..
ச்சே ஏன்தான் இப்படி தொல்லை செய்கிறாரோ.. ஒன்னும் பேச வேண்டாம் என்று தனக்குள் சொல்லியவாறு பேக்கை திறந்து போனை எடுத்துப் பார்த்தாள். அழைப்பு.. வீட்டு நம்பரிலிருந்து.
சட்டென்று மனம் மாறி போனை எடுத்து ஆன் செய்தாள்.
ஹலோ என்றாள் சன்னமான குரலில்..
‘அம்ம்மா’.. அழுகை கசிந்த மழலைக் குரல் பவியினுடையது.
‘பவி.. பவி.. என்னாச்சுடா.. ஏண்டா அழற.’. பதறினாள்.
‘அம்மா எங்க இருக்க.. பசிக்குதும்மா..நான் இன்னும் சாப்பிடவே இல்லைம்மா..’ என்றாள்.
ஐயோ.. மனம் பதறித் துடித்தது. இதோ.. இதோ வந்துட்டேண்டா செல்லம்.. அழாதே.. அம்மா இப்போ வந்துருவேன்.. – thadaaga meengal sirukathai
என்று எழுந்தவள் வேறு எதையும் யோசியாதவளாய்.. என் பிள்ள பசிக்குதுன்னு அழுற வரைக்கும் விட்டுட்டு அவர் எங்கேதான் போனாரோ.. ச்சே என்னதான் பண்றாரு இவரு.. நான் வேற ஒருத்தி.. நேரம் போறது தெரியாம இவ்வளவு நேரம் இங்க இருந்திட்டேன்.. என்றவாறு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள் வீடு நோக்கி.
– ப்ரியா பிரபு, நெல்லை
மிக அருமையான, நெகிழ்ச்சியான, கதை .தாய்மையின் சிறப்பை இதைவிட அழகாக எடுத்துக் கூற முடியாது. எந்த பதவி உயர் பதவியில் இருந்தாலும் தாய்மை என்பது அதைவிட உயர்ந்த பதவி என்பது கஅழகாகக் கூறும் கதை
Apt title, very superb my dr
Good
The flow of writing is good
அருமை…வாழ்த்துகள்..எழுத்துலகில் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
ஒவ்வொரு பெண்களின் நிலை
யதார்த்தம். இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாய் பலர். அழகான அழுத்தமான எழுத்து.
வாழ்த்துகள்
சமூகத்தில் நடக்கும் உண்மையை உணர்த்தியது இக்கதை மூலம் … . மிகவும் அருமையாக இருந்தது அக்கா.. வாழ்த்துக்கள் அக்கா
அழகான கதை…. வாழ்த்துக்கள்
உணர்ச்சிகளை அப்படியே தத்ரூபமாய்
கொண்டு வந்துள்ளீர்கள்.பிரச்சனை-
மனம் கனக்குது.தாய்ப்பாசம்-மனதுருகுது.
Story super man.
தெப்பக்குளத்தில் மீனுக்கு பொறி போடுற நிகழ்வுக்குள் பெண்களின் நிலையை தெளிவாக தன் எழுத்து நடையில் காட்டியுள்ளார் கவிஞர் பிரியா பிரபு. எளிமையான ஆனால் அழுத்தத்தமான எழுத்து நடை. சிறப்பு. 👌