ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 4
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam4
பாடல் – 16
“காசிக்குஓ டில்வினை போமோ? – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுன்டாமோ?
பேசமுன் கன்மங்கள் சாமோ? – பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ?”
விளக்கம்
மனிதா! நீ மற்றவர்களைப் பார்த்து காசிக்குச் சென்று கங்கையாற்றில் குளித்தால் உனது தீவினை தீருமென்று கருதுகிறாய். நல்வாழ்வு கிடைக்குமென்று நம்புகிறாய் இன்னும், நீ முற்பிறவிகளில் தீவினை செய்து ஈட்டி வைத்த பழவினைகள் தீருமென்றும் நினைக்கிறாய். அவையெல்லாம் எப்படி தீரும்? தீராது என்றே கருதுக. நீயோ மேலும் பல
வேற்றுமைகளை மக்களிடம் உருவாக்கி துயரம் தருகின்றாயே.
பாடல் – 17
“பொய்யாக பாராட்டும் கோலம் – எல்லாம்
போகவே வாய்த்திடும்
யாவர்க்கும்போம் காலம்
மெய்யாக வேதசுத்த சாலம் – பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்”
விளக்கம்
மனிதா! கற்றவர்கள் தங்களை பிறர் பாராட்டும்படி, ஒப்பனை கோலங்களைப் புனைந்து கொண்டு பெருமையடைவர். ஆனால் இந்த புனைவுகளெல்லாம் இறுதிக் காலம் வரும் போது போய் விடுமே! இவ்வுண்மை தெரியாதா? – kaduveli siddhar padalgal vilakkam-pagam4
பாடல் – 18
“சந்தேகம் இல்லாத தங்கம் – அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கல்!
அந்தமில்லா தவோர் துங்கம் – எங்கும்
ஆனந்த மாகநிரம்பிய புங்கம்!”
விளக்கம்
மனிதா! கடவுள் என்பவன் ஐய்யப்படக் கூடாத மாற்றுயர்ந்த பொன்னானவன்: அவன் முடிவில்லாத ஒப்பற்ற உயர்நிலையுடையவன்; அவனே குறைவில்லாத நிறையுடையவன். அவனை ஒவ்வொருவரும் அன்பால் சார்ந்து தழுவிக் கொண்டால் வாழ்க்கையில் தாழ்வு ஏற்படாது! முன்னேற்றமும் புகழுமே உண்டாகும் என்பதை நீ அறிவாயாக
பாடல் – 19
“பாரில் உயர்ந்தது பத்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரில் உயரட்ட சித்தி – யார்க்கும்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி”
விளக்கம்
மனித மனமே! நன்கு தெரிந்து கொள்க! உலகில் நீ காட்டும் அன்பிற் சிறந்தது இறையன்பே ஆகும் அது வளர்ந்து கொண்டே போகும் இயல்புடையது. அவ்வன்பை வாழ்வில் கடை பிடிப்பவர்க்கே பிறவியிலிருந்து விடுதலை உண்டு. மேலும் சிவக் கடவுளுக்கு தொண்டு செய்யும் நெறிமுறையாலே மிகச்சிறந்து அருமையாய் வாய்க்கின்ற உய ஃந்த செயல் வெற்றியான “அணிமா” முதலான எட்டு வகை வெற்றிகளும் வாய்க்கும் என்பது உறுதி
பாடல் – 20
“அன்பெனும் நன்மலர் தூவிப் – பர
மானந்தத் தேவின்அடியினை மேவி
இன்பொடும் உன்னுடல் ஆவி – நாளும்
ஈடேறத் தேடாய்நீ இங்கே குலாவி”
விளக்கம்
மனிதா! உனது பிறவியானது வெற்றி பெற நாள்தோறும் நீ உடலிலும் உயிரிலும் உள்ளேயே, பேரின்ப வடிவமான இறைவனைத் தேட வேண்டும். உள்ளேயே இறைவனின் திருவடியைக் கண்டு குலாவி, அன்பெனும் உண்மையான வாடாத மலரை தூவி வழிபட்டு வரவேண்டும். இது மனிதனுக்கு பிறவி வாய்ப்பாகும்.
– கோமகன், சென்னை