நாலடியார் (32) அவையறிதல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-32

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – துன்பவியல்

32. அவையறிதல்

செய்யுள் – 01

“மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல்”
விளக்கம்: ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றை தெரிந்து கொள்வதை விட்டு, அறிவற்ற பேச்சை பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்றிலையில், தமது அறிவார்ந்த சொல்லை சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தை கைவிடுக.

செய்யுள் – 02

“நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார் செறிவுடையார் – தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்”
விளக்கம்: தன் வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, உட்கருத்தை உணர்ந்தவன் போல தன்னைக் கருதிக் கொண்டு, அவையை கூட்டும் தீய புலவனை, நற்புலவர்கள் சேர மாட்டார்கள். அந்நற்புலவர்கள் வருகையால், அத் தீய புலவனின் பேச்சு தாழ்வதால், நற்புலவர்கள் குலத்தை பழித்து பேசுவான் அல்லது தோளை தட்டி ஆர்பரித்து சண்டைக்கு இழுப்பான்.

செய்யுள் – 03

“சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார் – கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்”
விளக்கம்: பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாக கொண்டு, விரைந்து சொல்ல ஆசைப்படுபவர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறிய மாட்டார். தாம் கற்றவற்றை பிறர் விரும்பி கேட்புமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார். ஆயினும் விடாமல் பலவற்றை பேசிக்கொண்டே இருப்பார்.

செய்யுள் – 04

“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பெதையோர் சூத்திரம் – மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்”
விளக்கம்: ஒர் அறிவற்றவன் ஆசிரியரை வழிபட்டு கற்காமல், பள்ளியில் பிறருக்கு சொல்லுங்கால், தற்செயலாக தெரிந்து கொண்ட ஒரு பாட்டினை கற்றோர் அவையில் நாணாமல் கூறி தன் புல்லறிவினை வெளிப் படுத்துவான்.

செய்யுள் – 05

“வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல்”
விளக்கம்: வெற்றி பெற வேண்டுமென்ற ஒரே காரணத்தால், விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி தம் சொல்லாற்றலை காட்ட முயல்வார் செயல், தம் பல் ஆனது தமது கையிலே விழக் காண்பார்.

செய்யுள் – 06

“பாடமே ஓதிப் பயனறெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரந்து”
விளக்கம்: ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள், வெறுக்க தக்கவற்றை கூறும் போது, மேன்மையுடைய சான்றோர் அந்த மூடரை பெற்ற தாய்க்காக மனம் வருந்தி தலைகுனிந்து நிற்பர்.

செய்யுள் – 07

“பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல் மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்”
விளக்கம்: பெறத்தக்க பொருளை பெற்றுக் கொள்கிற பொதுமகளிர் தோள் போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி கற்போருக்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியுடைய அந்த பொது மகளிரின் மனதை போன்று, நூலின் நுண்பொருளை அறிவதற்கு அரிதாகும்.

செய்யுள் – 08

“புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் – மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”
விளக்கம்: புத்தகங்களை மிகுதியாக சேர்த்து அவற்றின் பொருள் அறியாது வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும், அப்புலவர்கள் வேறு. அவற்றினை படித்து பொருளுணர்ந்து மற்றவர்களுக்கு தெரிவிக்கிற புலவர்கள் வேறு.

செய்யுள் – 09

“பொழிப்பகழ நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட
உரையாமோ நூலிற்கு நன்கு?”
விளக்கம்: காட்டுப் பசுக்களை தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளை உடைய வேந்தே! ஒரு நூலின் பொருளை திரட்டி சுருங்க கூறும் பொழிப்புரை, விரித்து கூறும் அகல உரை, சாரங்களை மட்டும் கூறும் நுட்ப உரை, குறிப்பாக பொருள் கூறும் விசேட உரை இந்த நான்கு வழிகளிலும் பொருள் கூறாத சொற்கள் நூலிற்கு உரையாகாது

செய்யுள் – 10

“இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ – இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்”
விளக்கம்: உயர்குடி பிறப்பு இல்லாதவர், எவ்வளவுதான் நல்ல நூல்களை கற்றிருந்தாலும் இன்னொருவரது சொல்லில் உள்ள குற்றங்களை பிறர் அறியாதவாறு காத்தற்கு உரியவர் அல்லர். நற்குடி பிறந்த நல்லறிவாளர், நூற் பொருளை தெளிவாக உணராதவாறு அறிந்தாலும் அறியாதவர் போல இருப்பர்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...