நாலடியார் (31) இரவச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-31

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – துன்பவியல்

31. இரவச்சம்

செய்யுள் – 01

“நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இரரென்று – தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்”
விளக்கம்: இவ் வறியவர்கள் நம்மால் தான் வாழ்கிறார்கள் எப்போதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள் என்று தங்களை மேலாக மதித்து மயங்கும் மனமுடையோர் பின்னே அறிவுடையார் ஏதேனும் இரந்து கேட்டு செல்வார்களா? செல்ல மாட்டார்கள்.

செய்யுள் – 02

“இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தஙறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்து பிறக்கும் பிறப்பு”
விளக்கம்: தாழ்வதற்கு காரணமான இரத்தலை மேற்கொண்டு ஒருவன் வயிரார உண்பதற்கு பதிலாக, பழிக்க தக்க அந்த இரத்தலை மேற் கொள்ளாது பசியோடு இருத்து இறப்பதே மேலாகும். ஏனெனில் ஒருவன் இறந்த பின் பிறக்கிற பிறப்பு கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்ல.

செய்யுள் – 03

“இல்லாமை கந்தா இரஙு துணிந்தொருவர்
செல்லாரும்லஅல்லர் சிறுதெறி – புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
விளக்கம்: வறுமையால் யாசிக்க சென்றாலும் கண்ட இடத்திற்கு செல்லாமல், அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர். ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்பிற்கு அஞ்ச வேண்டும்.

செய்யுள் – 04

“திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்”
விளக்கம்: செல்வம் தம்மை விட்டு விலகினாலும், தெய்வம் சினந்து வருத்தினாலும் மேலோர்கள் ஊக்கம் குன்றாமல் உயர் நெறியை கருதுவார்களே அல்லாமல், பொருளை புதைத்து வைத்து பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று, ‘என்னிடம் ஒன்றும் இல்லை, ஏதேனும் தாருங்கள்?’ என்று கூறி நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.

செய்யுள் – 05

“கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு”
விளக்கம்: தன்னுடைய பொருளை ஒழிக்காது கொடுக்கும் திடமான அன்புடைய, கண் போன்ற இனியவரிடத்தே இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை. ஏனெனில் சென்று யாசிப்போம் என இரத்தலை நினைக்கும் போதே நெஞ்சு வெந்து உருகுகிறது. அவ்வாறிருக்க, ஒருவரிடம் பொருளை யாசித்து பெறும் போது, பெறுவோர் மனம் எப்படி இருக்குமோ?

செய்யுள் – 06

“இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு”
விளக்கம்: துன்பங்கள் நம்மிடம் வந்து சேரட்டும். இன்பங்கள் நம்மை விட்டு விலகட்டும், அஞ்சாதே! அமைதியாய் இரு என வேண்டி மனதை நிறைவு செய்வதால் தீரும் தன்மையது வறுமை. அப்படியிருக்க, பொருளாசை துன்புறுத்தும் மனதுடன், அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்.

செய்யுள் – 07

“என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் – குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்”
விளக்கம்: குன்றுகளின் பரந்த இடங்களில் எல்லாம் அருவிகளை உடைய மலை நாட்டு வேந்தனே! இவ்வுலகில் புதிய மனிதர்கள் பிறந்து கொண்டேயிருந்தாலும், என்றும் பிறவாதவன் ஒருவன் உளன். அவன் இரப்பாரை இகழாது ஆதரிப்பவனே!

செய்யுள் – 08

“புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்”
விளக்கம்: தனது வறுமையானது புறமாகிய உடலை வருத்த, அதற்காக தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை முன்னிருத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, இரப்பானாகில், அச்செல்வன் இல்லை என மறுக்க, அதை கேட்ட போதே அவ்வறுமையாளன் உயிர் விடுவான்.

செய்யுள் – 09

“ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் – பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?”
விளக்கம்: வறியவர் ஒருவர், செல்வர் ஒருவரை சார்ந்து அவர் சொன்னபடி செய்தி வணங்கி தாழ்ந்து வாழ்தல் உலக முறைமை ஆகும். அப்படியின்றி பிறரிடம் யாசித்து வாழ்வது அதைவிட துன்பம் தரும்.

செய்யுள் – 10

“பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ”
விளக்கம்: நெடுநாள் பழகிய நட்புரிமையே பற்றுக் கோடாக உதவி நாடி வந்தவர்க்கு, அதே நட்புரிமையால் ஒன்றை கொடுப்பாராக. அப்படி கொடுக்காத மன நிறைவின்மையால், வந்தவர் ஏற்க மறுப்பின், அது கொடுத்தவர் மனதில் நீங்காது நிலைத்து நின்று சுடும் தீயாகும்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...