ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021

aadi matha ithazh 2021

மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம்

2021 ஜூலை 2″‘-ஆம் வாரத்தில் ஒரு நாள் வட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இரவில் மழை பெய்தது. பொழிந்தது கனமழை ஆனதால், வானில் மின்னல் வெட்டும் அதைத்தொடர்ந்து இடியும் இடித்தன வெட்டிய மின்னலால் வானில் ஒளிக்கீற்றுக்கள் தோன்றின. இவற்றைக் கண்ட இளைஞர்கள் சிலர் பலவந்தமாக தோன்றிய மின்னொளி அலைபேசியில் படமாக பிடிக்க முயன்றனர். அவர்கள் அவ்வூரின் உயரமான கட்டிடத்தின் மேல் ஏறினர். ஆனால் அவர்களை மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். மழை மேகங்களில் எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உண்டு . இவை ஒன்றின் அருகே இன்னொன்று வந்தால் , மின்னல் தோன்றும் அதைத் தொடர்ந்து இடி இடிக்கும். மின்வெட்டின் வீச்சு அதிகம் ஆனால், அதிலிருந்து வெளியாகும் மின்சாரம், புவியின் மேல் புறத்தில் வரும் பொழுது, அங்குள்ள பொருள் எதுவாயினும் மின்வெட்டால்; அதிர்வுக்கு உட்பட்டு தாக்கப்படும் .

மழை பெய்யும் பொழுது இடி மின்னல் தோன்றும். அப்போது, விலங்குகள் அனைத்தும் பதுங்குமிடத்தைத் தேடும். வனவிலங்குகள் மலை குகைக்குள் சென்று பதுங்கும். ஆதிமனிதன் , இயற்கையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, பாறைகளின் ஊடாகவும், மலைகளுக்குகையுள்ளும், சென்று தன்னைத் தானே காத்துக் கொண்டான். அறிவு வளர்ச்சி யால் மனிதன் இயற்கை மாற்றங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள, வீடுகளைக் கட்டி அதைத் தன் உறைவிடம் ஆக்கிக் கொண்டான். இதுவே மனித இனம் தோன்றி வளர்ந்த வரலாறு. இயற்கையிலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்கள் ,மனிதன் வளர்த்த அறிவியலுக்கு அடித்தளம் ஆகியது. அது, பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் காரணமானது.

அலைபேசி என்ற தொழில் நுட்பக் கருவி தன் கையிலே இருப்பதனால், அது மின்னலையும், இடிபயையும்ஃதன்பால் ஈர்க்கும்; என்ற அறிவியலை மறந்ததால் ஏற்பட்ட விபத்து தான், மீளாத்துன்பத்தில் அந்த இளைஞர்களை கொண்டு போய் நிறுத்தியது. அறிவை வளர்க்காத தொழில்நுட்பம், அழிவைத்தரும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்

– இலட்சுமி பாரதி


சிறுவர் கதைகள் – ஏழையின் கனவு

சர்ர்ர்ரென்று…நுழைந்த அந்த வெள்ளை நிற ஆடி கார் பங்களா போர்ட்டிகோவில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய கல்யாணி தேவி, வெளியே, சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தோட்டக்காரன் மாதய்யனை அழைத்தார்.

“மாதய்யா! நான் குற்றாலத்திலிருந்து நிறைய ரோஜா கன்றுகள் வாங்கி வந்திருக்கிறேன்.கார் டிக்கியிலிருந்து எடுத்து அதை பவுண்டனை சுற்றி உள்ள மண்ணில் வரிசையாக நடு” என்றார். மாதய்யனும், அவர் கூறியபடி வரிசையாக ரோஜா கன்றுகளை நட, ஒரேயொரு கன்று மீதமாகியது. “மாதய்யா… இங்கே இது போதும் .பின்னே கொண்டு போய் எங்கேயாவது இதை நட்டு விடு!” என்றார்

மாதய்யன் பங்களாவின் பின்னால் இருந்த அவன் வீட்டிற்கு அந்தக் கன்றை எடுத்துவர, அவன் 7 வயது மகள் வசந்தி ஆர்வமாக ஓடிவந்தாள்.” அப்பா! அப்பா! இந்த ரோஜா கன்று எனக்கு வேணும்ப்பா. நானே வளர்க்கிறேன்.” என்று கையில் வாங்கிக் கொண்டு ஓடினாள்.

குடிசைக்கு பின்னால் இருந்த உரக்குழிக்குப் பக்கத்தில் மண்ணில் தன் சின்னஞ்சிறு கைகளால் நட்டு வைத்தாள். மாதையன் பங்களா செடிகளை கவனமாக உரமி ட்டு வளர்த்து வர, வசந்தி தினமும் காலை எழுந்ததும் ரோஜா கன்றை பார்க்க ஓடுவாள். தன் பிஞ்சு கைகளால் அதற்கு தண்ணீர் ஊற்றுவாள். அம்மா தினம் தரும் காய்கறி கழிவுகளை அதற்கு உரமிடுவாள். வசந்தியின் ரோஜா கன்று துளிர்த்து வளர்ந்தது. ” அப்பா! அப்பா!” என்ற மகள் குரல் கேட்டு மாதயயன் பின்புறம் ஓடினான்.

வசந்தியின் ரோஜா கன்று மொட்டு விட்டிருந்தது. தினமும் ஒரு சிவப்பு ரோஜா அதில் பூக்க வசந்தி அதை சந்தோஷமாக தலையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகலானாள்.

“மாதய்யா” கல்யாணி அம்மாள் கூப்பிட மாதய்யன் ஓடி வந்து நின்றான். “உன் பொண்ணு வசந்தி தினமும் தலையில் ரோஜா பூ வைத்துக் கொண்டு போறாளே அது ஏது?” என்று கேட்க மாதையன் விபரமாகக் கூறினான்.

“மாதய்யா என் பேத்தி சம்யுக்தாவுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப இஷ்டம். அதனால்தான் நான் விதவிதமான நிறத்தில் நிறைய ரோஜா செடி வாங்கிட்டு வந்தேன். ஆனால் நம் இங்க வச்ச செடிகள் ஒன்னும் இன்னும் பூக்கல.. அதனால நீ தினமும் வரும்போது உன் வீட்டு செடியில் பூக்கும் பூவை பறிச்சிட்டு வா!’ என்றாள் கல்யாணியம்மாள்.

மாதையன் ரோஜாவை பறித்துக்கொண்டு பங்களாவிற்கு கொண்டுபோக… வசந்தி அழுதாள்.” அம்மா… ஏழைகளுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். அதனால் வருத்தப்படாதே!” என்று மகளைத் தேற்றிவிட்டு பங்களாவுக்குள் நுழைந்தான் – aadi maatha ithazh 2021.

உள்ளே நுழையும்போது சம்யுக்தா தன் பாட்டியிடம் “பாட்டி! எனக்கு ரோஜா பூவுன்னா ரொம்ப இஷ்டம் தான். நான் ஆசைப்பட்டா நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாவது நீங்க வாங்கி கொடுத்திடுவீங்க . ஆனால் வசந்தி பாவம்… அவங்கப்பா அவளுக்கு ரோஜாபூவெல்லாம் காசு கொடுத்து வாங்கி கொடுக்க முடியாது.. அதனால அவ வீட்ல. பூக்கற பூவைப்போய் கொண்டு வர சொல்லாதீங்க. அதை அவளே வைச்சுகிடட்டும்” என்று சொல்லிக்
கொண்டிருந்தாள்.

தன் மகள் வசந்தியின் அழுத முகம் கண்ணில் நிற்க… மனக் கஷ்டத்துடன் உள்ளே வந்த மாதய்யனுக்கு சம்யுக்தா கூறிய வார்த்தைகள் அமுதமாய் காதில் விழுந்தது. அவன் கண்முன் அவள் சிறு குழந்தையாக அல்ல தான் தொழவேண்டிய தேவதையாகவே உயர்ந்து நின்றாள்.

– தி.வள்ளி, திருநெல்வேலி


அன்பென்று கொட்டு முரசே!!!!

பல நிகழ்வுகளை தன்னுள் சுமந்தபடி அழகான விடியல் மலர்ந்தது.பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது மாதாபுரம் பேருந்து நிலையம். பலரை ஏற்றி,இறக்கி தன் பணியை சலிப்பின்றி செய்து கொண்டிருந்தன பேருந்துகள்.

பாரதியாகிய நானும் அதே காலை பரபரப்புடன் எனது பணியை மேற்கொள்ள அலுவலக பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன்.பி.ஏ. டிகிரி முடித்து அரசு பணிக்காக வெற்றி பெற்று தற்போது அரசு பணியில் உதவியாளராக கடந்த ஒருவருடமாக பணிபுரிகிறேன்.

என்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்தேன். எனை வளர்க்க தாய் பட்ட பாட்டை நன்குணர்ந்து படித்தேன்.தேர்ச்சி பெற்றேன். வேலையும் கிடைத்தது. இனி அடுத்ததென்ன டும் டும் தான். பேருந்து நிறுத்தத்தில் என்னுடைய வண்டி வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன். நல்ல கூட்டம் இருப்பினும் இருக்கைக் கிடைத்தது.

பொதுவாக எல்லோருக்கும் சன்னலோர இருக்கை பிடிக்கும். ஆனால் எனக்கு எல்லா வித மக்களையும் பேருந்துக்குள் நடக்கும் பலதரப்பட்ட நிகழ்வுகளையும் பார்த்து ரசிப்பது பிடிக்கும்.சில நல்ல பாடங்களையும் அவ்வபோது கற்றிருக்கிறேன். அத்தனை கூட்டத்திலும் என் கண்ணில் அனைவரும் தென்பட்டனர்.

கல்லூரி கவிதைகள் ஒருபுறம், அவர்களை தொடரும் காளைகள்,சில பல உரசல்கள், பல விதமான சம்பாஷனைகள், அலுவலகம் செல்லும் பெண்கள் , வயதான பாட்டிகள், சிறு பள்ளி குழந்தைகள்,முதியவர்கள்,எனை போன்ற சில அலுவலக சகாக்கள்,அவர்களுக்குள் நித்தமும் நடக்கும் பேச்சுகள் என ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்தது பேருந்து. நடு நடுவே நடத்துனரின டிக்கெட் கூச்சல் வேறு….

அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் ஏறி இறங்கிய பின்னர் சில வினாடிகளில் பின் இருக்கையைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தபடியே பலரும் பேசியது கண்டு நானும் சற்று திரும்பி பார்த்தேன்.பின்னால் இருக்கும் கடைசி இருக்கையில் தான் அவள் அமர்ந்திருந்தாள் . நல்ல தோற்றம்,பார்ப்பதற்கு குறைகூற முடியாதமுகம். ஆனால் சில செயல்களால் அவள் மற்றவரை போல அல்லாது தனித்து காணப்பட்டாள்.

அவளருகே அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் எழுந்து நிற்க தொடங்க அவள் கூனி குருகிஅமர்ந்திருந்தாள். தனித்து தன்னை ஒதுக்குவதைக் கண்டு அவள் எழுந்துகொண்டு மற்றவர்களை அமரச் சொன்னாள். பின் அவரவர் இருக்கையில் சென்றமர்ந்தனர். அதன்பின் வந்த அடுத்த நிறுத்தத்தில் அவள் இறங்கிவிட்டாள். சாதாரண நிகழ்வெனினும் என்னை பாதித்தது. .உலகளாவிலும் நாடுகளிலும் ஏற்றுகொள்ள பட்டாலும் இன்னும் மக்கள் மனதில்
இடம்பெறவில்லை மனிதர்களை சமமாக என்னும் உன்னதமான்பு. பேருந்து முன்னேறி செல்ல,என் மனம் பின்னோக்கி சென்றது,சிறு வயதில் நான் கண்ட சில ஞாபகங்கள் என்னுள் எனக்கு ஆசானாக கற்பித்த பல பாடங்கள்.அன்று புரியாத அர்த்தங்கள் இப்போது புலப்படும் விந்தை வாழ்வுக்கே உரியதுதானே.

எனக்கு பதினோறுவயதிருக்கும் அப்போது, கடைத்தெருவுக்கு சென்றுவரும்படிஅம்மா கூற, கைப்பையொன்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.போகும்வழியில் கடைவீதியில் கூட்டம் தென்பட என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தில் கூட்டத்துக்குள் நுழைந்தேன்.அங்குபெண்ணும் ஆணும் ஒன்றிணைந்த சாயலில் புதிய மனிதர் ரோட்டில் அடிபட்டு மயங்கி கிடப்பதைக் கண்டேன்.அந்த மனிதரை சுற்றி பலரும்.வேடிக்கை பார்த்துக் கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனரே தவிர யாருமே காப்பாற்ற முன்வரவில்லை…ஓர் உயிர் வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்க ஏன் மனிதநேயமின்றி மக்கள் இருக்கின்றனர். காரணம் புரியாது நானும் நடப்பதை வேடிக்கை பார்த்தேன்… என்ன செய்ய அந்நாளில் நானும் வேடிக்கை மனிதன் தானே…

அடிபட்ட மனிதரோடு வந்தவரும் அந்த மனிதரை போலவே வித்தியாச தோற்றமுடையவர்.அவர் 108 ஐ அழைத்திருந்தார் போலும் வாகனம் வந்ததும் அடிபட்டவரை ஏற்றிவிட்டு அழுதுகொண்டே கூட்டத்தை பார்த்து “உயிரின் மதிப்பு தெரியாத உயிரற்ற மரப்பாவைகளா நீங்கள்.?? அன்பே கடவுள் என்பர்.இக்கூட்டத்தில் ஒரு கடவுளைக்கூடகாணவில்லை…. உயிர்கள் மீது அன்பு செய்ய பழகுங்கள்” என்று ஓலமிட்டு கூறிவிட்டு சென்றுவிட்டார். கூட்டமும் மெல்ல கலைந்தது. நானும் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டை வந்தடேந்தேன்.அன்றிரவு தூக்கம் வரவில்லை.கண்களுக்கு முன்னால் அப்பெண்மணியின்அழுகையும் அவள் கூறிய வார்த்தைகளும் வந்து வந்து சென்றன….யாரவர்கள்? அவர்கள் கூறிய வார்த்தைகளின் பொருளென்ன? அந்த வயதில் புரியாத புதிராகவேயிருந்தது.ஆனால் அடுத்தடுத்து என்னை கடந்த வருடங்களில் அதன் அர்த்தம் புரிந்தது.அந்த நிகழ்வு மட்டும் நீங்காது நெஞ்சினில்……

“ஆணின் வீரமும் பெண்மையின் பொறுமையும் ஒருங்கே அமையபெற்ற கடவுளின் அற்புத படைப்பு திருநங்கைகள். அவர்கள் தெய்வ நங்கைகள்…. உடன்பிறவா தங்கைகள்”……. என்று மாறும் இந்நிலை ….? அன்போடு அனைவரையும் அணுக வேண்டும். அதுவே நிலையானதாகும். அன்பென்று கொண்டு முரசு அகிலன் முழுதும்……… என்று எண்ணம் மனதில் தோன்ற என் பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கி அலுவலகம் நோக்கி பயணித்தேன். மனம் மட்டும் (அவள் உணர்ந்த வலியின் ) அவ்விடத்தை விட்டு நகராமல்…….

– கவி தேவிகா,தென்காசி


சுத்தமானது

அழகான வைகறைப் பொழுது.. இன்னும் கதிரவன் முழுதாய் தன் முகம் காட்டவில்லை.விடியல் தன் வெட்கப் போர்வையைக் களையாமல் ஒளிந்து கொண்டிருந்தது.இருள் பிரிந்து ஒளி பெருகும்போது வானம் மிகவும் அழகாய் இருப்பதாய் தோன்றும் தாரணிக்கு.. எப்போதும் அவளுக்கு அதிகாலை நேரப் பயணம் மிகவும் பிடிக்கும்.ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான சாலை, வாகனங்களின் நெருக்கடியில்லாமல் தெளிந்த நீரோடைபோல் இருந்தது.அதுவும் அவளின் கணவன் கார்த்திக் உடன் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியானதாய் இருக்கும். அவன் காரை ஒட்டும் அழகே அழகு..சில நேரங்களில் தூளியிலிட்டு தாலாட்டுவது போலவும்.. சில நேரங்களில் ஊஞ்சலில் உற்சாகமாய் ஆடுவது போலவும் இருக்கும்..காரில் ஒலிக்கும் வயலின் இசை பயணத்தை இன்னும் இனிதாக்கும்.. – aadi maatha ithazh 2021

இன்று பௌர்ணமி.. குலதெய்வம் கோவிலுக்குதான் சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லாம் அவர்களின் குடும்ப ஜோதிடர் சொன்னதாலும்… மாமியாரின் வற்புறுத்தலாலும் இந்த வழிபாடு. திருமணமாகி இரண்டு வருடம் முடிந்துவிட்டது. இன்னும் மழலைச் செல்வம் மட்டும் கைவரவில்லை. மருத்துவ பரிசோதனையில் இருவரிடமும் எந்த பிரச்சனையும் இல்லை.. அதனால் இனி கடவுளை சரணடைவது என முடிவானது. ஜோதிடர் சொன்னது போல் பதினோரு மாதம் பௌர்ணமியன்று குலதெய்வம் கோவிலில் பால் அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வேண்டுதல். இன்றைய பௌர்ணமி. எட்டாவது பௌர்ணமி..

நினைக்கையில் கொஞ்சம் கன்னம் சிவந்தது தாரணிக்கு.. பத்து நாள் தள்ளிபோயிருக்கிறது.. அதை இன்னும் ஒருவரிடமும் சொல்லவில்லை.. கார்த்திக்கிடம்கூட..நன்றாக உறுதியான பின் சொல்லலாமே என்று தோன்றியதால்
மேலும் ஒரு பத்து நாள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறாள். கோவிலுக்கு செல்லும் கிளைப்பாதை தொடங்கப் போகிறது. அழகியபாண்டியபுரம் வரை மெயின் ரோடுதான்.. அதன் பின் ஊருக்குள்ளிருந்து பிரியும் ஒற்றையடிப்பாதையில் ஐந்து கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். இருபுறமும் வயல்வெளிகள் பச்சைப் பசேலென கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கும். இன்னும் பத்து நிமிடங்களுக்குள்ளாக போய்விடலாம்தான்..
ஆனால் கார்த்திக் அந்த திருப்பத்தின் ஆரம்பத்தில் காரை நிறுத்தாமல் இருந்திருந்தால்.. நினைக்கும்போதே காரை பிரேக்கிட்டு நிறுத்தினான் கார்த்திக்.. “தரு..தரும்மா..”என்றான்.

“சொல்லுங்க ” “இந்த கடையில் டீ குடிச்சிட்டு போவோமா..” ‘ நினைச்சேன்..நீங்க இதைத்தான் சொல்லப்போறீங்கன்னு.. “என்று கோபமாகக் கூறினாள் தாரணி.
‘ஏன் இப்படி பண்றீங்க..வீட்டிலேயே குடிங்கன்னு சொன்னேன் அங்க வேணாம் வேணாம்னுட்டு.. இங்க இந்த ரோட்டுக் கடையில்தான் குடிக்கணுமா..அவ்வளவு டேஸ்டா இருக்கா..”என்று படபடவென பொரிந்தாள் தாரணி.

‘தரு.. ப்ளீஸ் மா.. கோபப்படாதே இப்போ என்ன உனக்கு வேண்டான்னா நீ இங்கேயே இரு நான் போய் குடிச்சிட்டு வரேன்..’என்றவாறே காரின் கதவைத் திறந்து இறங்கினான்.

‘ஓஹோ..அய்யா இறங்கியாச்சா.. நீங்க பொறுமையா குடிச்சிட்டு வாங்க நான் நடந்தே கோயிலுக்கு போறேன்..’ ‘ஒரு அஞ்சு நிமிடம்தான்டா இப்போ வந்துருவேன்.. கூல் பேபி…’ என்றவாறு விருட்டென இறங்கிப் போனான்.
எரிச்சலாக வந்தது தாரணிக்கு.. என்னைவிட.. இந்தக்கடை டீ ரொம்ப முக்கியமா போச்சுல்ல.. மனம் குமுறியது.

இதோடு நான்காவது முறை..மறுத்த பின்னரும் இந்த மாதிரி செய்வது.. அந்தக் கடையைப் பார்த்தாள் தாரணி. அது ஒரு சாலையோர டீக்கடை.. பெரும்பாலும் இந்த மாதிரி சாலையோரக் கடைகளில் டீக்குடிப்பது என்பது தாரணிக்கு அறவே பிடிக்காத விஷயம். சுவையாக இல்லையென்றாலும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மாதிரி கடைகளில் எந்தளவுக்கு சுத்தத்தை எதிர்பார்க்க முடியும். எல்லோரையும் ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரமுடியாதுதான் என்றாலும் இது என்ன பழக்கமோ இவருக்கு.. எரிச்சலாக வந்தது.

கடையை ஏறிட்டுப் பார்த்தாள். நான்கு சேர்களும் ஒரு பெஞ்ச்சும் போடப்பட்டிருந்தது. வாசலில் நன்றாக சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது.. அது பார்ப்பதற்கு பச்சையும் அல்லாத மஞ்சளும் அல்லாத கலரில் இருந்தது. அங்கே இடப்பட்டிருந்த.. நேர்த்தியான கோலம்.. இந்த இருள் பிரியாத வேளையில் பார்ப்பதற்கு நட்சத்திரங்களை தரையில் சிதறவிட்டாற் போல பளிச்சென்று இருந்தது. கடைக்குள் ரெகார்டரில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. கடை பார்ப்பதற்கென்னவோ சுத்தமாகத்தான் இருந்தது.

அங்கே பாய்லரில் சுடுதண்ணீர் கொதித்து ஆவியாய் வந்து கொண்டிருந்தது. பக்கவாட்டில் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த டபரா செட்டுக்கள். உள்ளே இருப்பவன் உயரமான பெஞ்ச் போட்டு அமர்ந்திருக்கிறான் போல அவன் முட்டியை மடக்கி அமர்ந்திருப்பது போல தெரிந்தது. பார்ப்பதற்கே மிகவும் எரிச்சல் வந்தது. துரை.. நின்றுகொண்டு டீ போட்டுத் தரமாட்டார் போல.. என்னவொரு அலட்சியம்.. இந்த நான்கு முறையும் பார்த்தாச்சு அவன் அசால்ட்டாக உட்கார்ந்துகொண்டே டீ ஆற்றித் தருவதும் இவர் ஏதோ பவ்யமாய் வாங்கிக் குடிப்பதுமாய்.. ச்சே.. சகிக்கவில்லை. வெறுப்புடன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் தாரணி.

சுற்றுப்புறம் தூய்மையாகத்தான் இருக்கிறது. அவனின் திமிர்த்தனமான செயல்தான் கோபமூட்டுகிறது.இப்போது மீண்டும் திரும்பிப் பார்த்தாள். அவன் அமர்ந்தவாறே காசை வாங்கிக் கொண்டிருந்தான். முகம் சிவந்து போனது தாரணிக்கு. கார்த்திக் வந்து விட்டான். ‘போலாமா டியர்..’ என்றான்.

“ஆமா.. உங்களுக்கு என்னைவிட இங்க டீ குடிக்கறதுதானே ரொம்ப முக்கியம்.. போங்க.. என்கூட பேசாதீங்க..” என்றாள். ” ஏண்டா இவ்ளோ கோபம்.. நான் இந்த ரோட்டுக் கடையில் டீ குடிச்சது கோபமா.. இல்லன்னா.. நீ வேண்டாம்னு சொன்னப்புறமும் நான் அங்க போனது கோபமா.. சொல்லு.. ” ” ரெண்டும்தான்.. ” ” ஹே.. டீ நிஜமாவே ரொம்ப நல்லாருக்கு.. பிரெஷ் ஆன பசும்பாலில் போடறாங்க அதனால் டேஸ்டா இருக்கு நீ வேணும்னாலும் குடிச்சு பாரு.. வாங்கிட்டு வரவா.. ” என்று சிரித்தான். ” நீங்களும் உங்க டீக்கடை புராணமும்.. வேணா இங்க இருந்து இன்னும் நாலு டீ குடிச்சிட்டு வாங்க.. நான் கோயிலுக்கு நடந்தே போயிக்கறேன்.. “
“தரு.. எதுக்கு இவ்வளவு கோபம்..”

“ஆமா அந்த ஆளு உட்கார்ந்துகிட்டே டீ போட்டுத் தர்றதும்.. நீங்க பக்கத்தில் போய் வாங்கிக் குடிக்கறதும் பார்க்கவே நல்லாயில்லை. எல்லோருக்கும் அப்படித்தான் பண்றான்.. ரொம்ப திமிர் பிடிச்சவன் போல..” குரலில் எரிச்சல் வழிந்தது. “தரும்மா..நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.. அந்த கடைக்காரர் திமிரினால் உட்கார்ந்துகிட்டே எல்லாம் பண்ணல..

அவரால நிற்க முடியாது.” அதிர்ச்சியாய் பார்த்தாள் தாரணி. ” எஸ் டியர்.. அவர் ஒரு ஆக்சிடென்ட்டில் தனது ஒரு காலை இழந்துட்டாரு. வேலையும் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்ட போதுதான் இந்த மாதிரி டீக்கடை வைக்கிற ஐடியா வந்திருக்கு. அவர் மனைவியின் சப்போர்ட்டோட இப்போ இந்தக் கடைய நடத்திட்டு வர்றாரு.. அவர் மனைவியும் வீட்டு வேலை நேரம்போக மற்ற நேரம் இங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்களாம். கடையையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைச்சிருக்காங்க.. அதோட இப்போ கடையும் நல்லாவே போய்ட்டு இருக்குன்னார். முதல்முறை கடைக்கு போனப்பவே இதை தெரிஞ்சிக்கிட்டேன். அதான் இந்த பக்கம் வர்றப்போ எல்லாம் டீ குடிக்கிறேன் …

அதுமட்டுமில்ல…நம்ம குலதெய்வம் கோவிலில் வெள்ளிக்கிழமைதோறும் ஒரு ஐம்பது பேர் குடிக்கிற மாதிரி டீ கேன் கொடுக்கச் சொல்லியிருக்கேன். சாமிகும்பிட வர்றவங்க டீயும் குடிச்சிட்டு போகட்டும். சாமிக்கு பால் அபிஷேகம் பண்றோம்தான்.. ஆனால் இந்த மாதிரி பண்ணினா இவருக்கும் வியாபாரம் ஆன மாதிரி இருக்கும்.. கோவிலுக்கு வர்றவங்க களைப்பா இருந்தா டீ குடிச்சிச்ச மாதிரியும் இருக்கும். நாம அவங்க நிலைமைய பார்த்து வெறும் பணமா குடுக்காம அவங்க உழைப்புக்கு ஊதியமா குடுத்தா.. அது அவங்க தன்னம்பிக்கையை இன்னும் உயர்த்தும் அதான்.. ” என்றான்.

கண்களில் பெருமை மின்ன கணவனைப் பார்த்தவள்.. சட்டென்று காரின் கதவைத் திறந்து இறங்கலானாள்… குழப்பமாய் அவளைப் பார்த்தவன்.. ” என்னாச்சு.. இப்போவும் நடந்து போறேன்னுதான் சொல்லப் போறியா.. ” என்றான். ” ம்ம்.. நான் எதுக்கு நடக்கணும்.. நான்.. டீ குடிக்கப் போறேன்.. ” என்றவாறு..தலையை அசைத்து அழகாய் புன்னகைத்தாள் தாரணி.

– ப்ரியா பிரபு, நெல்லை


மரபாய் வழங்கியவை வழுவாய் வழங்குபவை எவையென காணலாம் முதலில் வழு சொற்கள் அதாவது தவறான சொற்கள் அடுத்து வருவது மரபு சொற்கள் என அறிக

 1. ஆட்டுபாகன் – ஆட்டிடையன்
 2. யானையிடையன் – யானைபாகன்
 3. குதிரைக்கன்று – குதிரைக் குட்டி
 4. பசுவின் குட்டி – பசுவின் கன்று
 5. தென்னங்கன்று – தென்னம்பிள்ளை
 6. வேப்பம்பிள்ளை – வேப்பங்கன்று
 7. பனம்பிஞ்சு – பனங்குரும்பை
 8. புளியங்குரும்பை – புளியங்கன்று
 9. மா ஓலை – மா இலை
 10. பனையிலை – பனையோலை
 11. குருவிக்குட்டி – குருவிக் குஞ்சு
 12. கீரிக்குஞ்சு – கீரிப்பிள்ளை
 13. நாய்க்குஞ்சு – நாய்க் குட்டி
 14. யானை சாணம் – யானை இலத்தி
 15. எருமை இலத்தி – எருமை சாணம்
 16. ஆட்டுச் சாணம் – ஆட்டுப் புழுக்கை
 17. கழுதை சாணம் – கழுதை விட்டை

– கோமகன்


சிறகடிக்குது மனசு !! (குட்டிக்கதை)

நாளை புதன்கிழமை மாமா, அத்தை ஊருக்குப் போறாங்க… சின்ன சந்தோஷம் எட்டிப்பார்த்தது கவிதாவின் மனதில். – aadi maatha ithazh 2021

இத்தனைக்கும் கவிதாவின் மாமனார் ராகவனும்,மாமியார் பார்வதியும், அன்பானவர்கள்தான்.கவிதாவுக்கும் அவர்களுடன் நல்ல புரிதல் இருந்தது.

புதன்கிழமை மாலை, கால் டாக்ஸி புக் பண்ணி,ரயில் நிலையத்திற்கு அத்தை, மாமாவை ஊருக்கு அனுப்பிவிட்டு ,வீட்டுக்குள் வந்த கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது.

எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும், அவர்கள் இருப்பது தனது சுதந்திரத்திற்கு குறைவாகவே கவிதாவுக்கு தோன்றியது. விருப்பப்படி இருக்க முடியாத உணர்வு. அவர்கள் கிளம்பிப் போனதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கணவனின் சோகமான முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது.

மறுநாள் காலை தங்கள் ஊர் வந்து சேர்ந்ததும் ,வீட்டை திறந்த ராகவன், “பார்வதி! நம்ம வீடு.. நம்ம வீடு தான் என்னதான் பிள்ளைங்க அன்பா, வசதியாக, வச்சிருந்தாலும்,நம்ம வீடு கொடுக்கிற சந்தோஷம், நிம்மதி, எங்கேயும் கிடைக்குமா?” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

– தி. வள்ளி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *