தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 04

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-04

tharaiyil vizhuntha meengal

வெளியே போய்விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வந்த தியாகுவும், வேதாவும் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள்.

“இந்த நந்தினியை பாருங்க… கதவை தாள் போட்டுகிட்டு உள்ளே இருன்னு சொன்னா.. இவ பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு கீழே விளையாட போயிட்டாப் போல… கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை” என்று திட்டியவாரே உள்ளே நுழைந்தாள் வேதா.

“சரி விடுடி..சின்ன பிள்ளை தானே…ஆள் தான் உயரமாக வளர்ந்திருக்காளேயொழிய வயசு 9 தானே ஆகுது .வளரவளர பொறுப்பாயிடுவா” என்றார் தியாகு.

பைகளை வைத்து விட்டு, கையை கழுவிவிட்டு, ரூமுக்கு வந்த வேதா திடுக்கிட்டாள். மகள் இருந்த கோலத்தைப் பார்த்ததும் விஷயத்தைப் புரிந்து கொண்டு அதிர்ந்தவள் .வேகமாக பெட்சீட்டை எடுத்து நந்தினிக்கு போர்த்திவிட்டு…அலறினாள்…

“என்னங்க… சீக்கிரம் இங்கே வாங்க….ஐய்யோ.. நாம மோசம் போயிட்டோமோ.. எந்த பாவியோ என் குழந்தைக்கு இப்படி ஒரு கொடுமையை பண்ணிட்டானே…” என்று தலையிலடித்துக்கொண்டு அழுதாள். தியாகு உறைந்து போய் நின்றார். வானம் இடிந்து தலையில் விழுந்தது போல இருந்தது இருவருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து,அதிர்ந்து போய் நின்றார்கள்.

“விஜய் அண்ணா.. என்ன விடு… என்ன விடு…”

என்று நந்தினி முனங்க ..இருவருக்கும் விஷயம் விளங்கியது.

“ஐயோ நான் பயந்தது நடந்து விட்டதே. இந்த பயல நெனச்சு தான் நான் பயந்துகிட்டு இருந்தேன். பெத்த பொண்ண பொத்தி பொத்தி வச்சேன். கடைசியில் அந்த பாவிப்பய இப்படி பண்ணிட்டானே… அவன் விளங்காமத் தான் போவான். என் குழந்தைக்கு இப்படி ஒரு அநியாயத்தை பண்ணிட்டானே..” என்று தலையிலடித்துக்கொண்டு அழுதாள் வேதா.

“என் குழந்தையை நாசம் பண்ண அந்த பாவி பயல கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறேன்…” என்று கதறியபடி தியாகு கதவை நோக்கி ஓடினார்.

அதற்குள் வெளியே இருந்து வந்த ரஞ்சினி, இவர்கள் அழுகை சத்தத்தை கேட்டதும் உள்ளே ஓடி வந்தாள். நந்தினியை பார்த்ததும்..” அய்யோ வேதா.. யார் இப்படி பண்ணினது… நந்தினிக்கு என்ன ஆச்சு?” என்று கதறினாள்.

“இந்தப் பாவி பய விஜய் தான் இப்படி பண்ணிட்டான். ரஞ்சினி கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வர்றதுக்குள்ள… அந்த பாவி என்னத்த சொல்லி கதவை திறக்க வச்சானோ…” என்று ரஞ்சினியின் கையை பிடித்துக்கொண்டு கதறினாள் – tharaiyil vizhuntha meengal-04.

“அந்த பாவியை என்ன பண்றேன் பாரு..” என்று ஆத்திரத்தோடு வெளியே போக முயன்ற தியாகுவை, ரஞ்சினி,” அண்ணா அவசரப்படாதீங்க.. கொஞ்சம் நிதானமாக இருங்க.. தயவு செய்து ஆத்திரத்தில் எதுவும் பண்ணிடாதீங்க… அது நம்ம நந்தினி வாழ்க்கைய கெடுத்திடும். இந்த விஷயம் வெளியே பரவக்கூடாது ” என்றாள்.

வேதாவும் ஒரு முடிவுக்கு வந்தவளாக,” ரஞ்சினி சொல்றது சரிதாங்க…அந்த பைய எப்படியோ போகட்டும் நாம நம்ம பொண்ண கவனிப்போம்.. நந்தினி ரொம்ப பயந்து போயிருப்பா. அவ இந்த அதிர்ச்சியை எப்படி தாங்கப் போறான்னு தெரியல. நம்ம பதட்டத்தை பார்த்தா அவளும்..பயந்திடுவா. நாங்க பாத்துக்குறோம். தயவு செய்து அவளிடம் எதுவும் கேட்காதீங்க. முதல்ல கதவை தாள் போட்டுட்டு வாங்க” என்றாள்.

ரஞ்சினி உள்ளே போய் தண்ணி எடுத்து வந்து நந்தினியை மெதுவாக அணைத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தாள்.

அம்மாவை பார்த்ததும் இறுக அம்மாவை அணைத்துக் கொண்ட நந்தினி…” அம்மா.. இந்த விஜய் அண்ணா ரொம்ப மோசம்… அவன் என்ன ரொம்ப…”என்று ஆரம்பித்த அவளை மெல்ல அணைத்தபடி…” ஒன்னும் ஆகலடா கண்ணு… பயப்படாத நானும், அப்பாவும், ரஞ்சனி அத்தையும் இருக்கோம்.”

நந்தினி உடல் நடுங்கி கொண்டு இருந்தது.

“அம்மா இந்த விஜய் அண்ணன் ரொம்ப மோசம் குவிஸ் புக்ல கொஸ்டின் கேட்கறேன்னு சொல்லிட்டு என்ன என்னென்னமோ பண்ணுனான்…”

“கண்ணா! அவன பத்தி பயப்படாத.. அவன போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம். அவங்க நல்ல அடிச்சு, உதைச்சு ஜெயில்ல போட்டுருவாங்க” என்றாள் ரஞ்சனி.

பின் ரஞ்சனியும் வேதாவும் நந்தினியின் உடைகளை சரி பண்ண….ரத்தகறை படிந்த அந்த ஆடைகளைப் பார்க்கும்போது வேதாவுக்கும் ரஞ்சனிக்கும் மனம் பதறியது . அவளை மெல்ல பாத்ரூம் கூட்டிக் கொண்டு போய் வெந்நீர் வைத்து தலைக்கு குளிக்க வைத்தார்கள்… பின் தலையை நன்றாகத் துவட்டி விட்டு வேறு உடையை அணிவித்த பிறகும், நந்தினியும் உடல் நடுங்கி கொண்டுதான் இருந்தது.

அதைக் கவனித்த வேதா மகளை அணைத்துக்கொண்டு “நந்தினி கண்ணு இப்போ ஒன்னும் இல்லடா.. நீ கிளீன் ஆயாச்சு… எல்லாத்தையும் மறந்துடு..” என்றாள் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.

அவள் என்னதான் மகளைத் தேற்றினாலும்.. நந்தினியின் மனதை ஒரு பெரிய அதிர்ச்சி ஆக்கிரமித்துக் கொண்டது நிஜமாகிப்போனது. அன்று இரவே நந்தினிக்கு காய்ச்சல் அதிகமாக, மருத்துவமனையில் சேர்த்தனர். நந்தினியை கூடவே இருந்து ரஞ்சினி கவனித்துக்கொள்ள… வேதா ஒரு பெண் மருத்துவரை அணுகி நடந்ததை எல்லாம் கூறி ஆலோசனை வாங்கிக் கொண்டாள்.

மறுநாள் காம்பவுண்ட் முழுக்க விஷயம் கசிய… கூடிக்கூடி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தும் கவனிக்காதது போல வேதாவும் தியாகுவும் நடந்து கொண்டனர்.சரண்யாவின் பெற்றோர் தியாகுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினர். விஜய் எங்கேயோ ஓடிப் போய்விட்டதாக சொன்னார்கள் – tharaiyil vizhuntha meengal-04.

“நீங்க என்ன ஆறுதல் சொன்னாலும், மன்னிப்பு கேட்டாலும், என் மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பாதிப்புதான். இதிலிருந்து அவளை நான் மீட்டுக் கொண்டு வரவேண்டும். உங்க மகனுக்கு தண்டனை ஆண்டவன் கொடுப்பான்,” என்றாள் வேதா கசப்பாக…

மருத்துவமனையில் இரண்டு நாள் இருந்த பிறகு ,நந்தினியின் உடல் சற்று சரியாக வீட்டுக்கு வந்தனர்.வந்தவள் நந்தினியை வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை கோழி தன் குஞ்சை தன் இறக்கைக்குள் வைத்து பாதுகாப்பது போல வேதா அவளை மிக கவனமாக பார்த்துக் கொண்டாள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நடந்த சம்பவத்தை பற்றிய பேச்சை எடுக்காமல் தவிர்த்தாள்.

நந்தினி அதைப்பற்றி பேச ஆரம்பித்தாலும், மெதுவாக அவளை திசை திருப்பிவிடுவாள். ..நந்தினியை எவ்வளவு கலகலப்பாக வைக்க முயன்றாலும் அதில் அவளுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. அவ்வப்போது நந்தினி பேச்சில்லாமல் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருப்பாள் …இனி அந்த ஊரில் அந்த இடத்தில் இருப்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்தனர் வேதமும் தியாகுவும்….

தொடரும் …

தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

1 Response

  1. Priyaprabhu says:

    கதையைப் படிக்கையில் மனம் வலித்தது… அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..