தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-05

tharaiyil vizhuntha meengal

வேதாவும்,தியாகுவும் இனி அந்த ஊரில் இருப்பது நந்தினிக்கு நல்லதல்ல என்று நினைக்க ஆரம்பித்தனர். காம்பவுண்டிலும் அரசல்புரசலாக பேசுவதும்.. அவர்களை கண்டதும் நிறுத்துவதும்…அவர்கள் மனதை மேலும் புண் படுத்தியது. நந்தினியும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது அவர்களுக்கு மன வேதனையை அளித்தது .

ரஞ்சினி ,”வேதா நீங்க நினைப்பது சரிதான்.இனி இந்த ஊர்ல இந்த வீட்ல இருக்கிறது சரி கிடையாது… நந்தினி பழையபடி ஆகணும்னா அவ கலகலப்பா இருக்கணும்னா அவளுக்கு வேறு ஒரு சூழ்நிலையை நாம அமைச்சு கொடுக்கணும்…நீங்க பேசாம சென்னைக்குப் போயிடுங்க.. இப்போதைக்கு அம்மா வீட்டில மாடி போர்ஷன்ல தங்கிக்கோங்க .பிறகு நிதானமா ஒரு வீடு பாத்துக்கலாம். இங்க ஸ்கூல்ல சொல்லி டீ.சி(T.C.) வாங்கிடலாம் என் பொண்ணுக படிக்கிற ஸ்கூல்லயே நந்தினியையும் சேர்த்துவிடலாம் .அவங்களும் இவளுக்கு நல்ல தோழிகளா இருப்பாங்க.

மனோதத்துவ ஆலோசகரிடம் கவுன்சிலிங் கொடுத்தார்கள்

வேதாவும்,தியாகுவும் ரஞ்சனி சொல்வதை ஒத்துக்கொள்ள… மளமளவென காரியங்கள் நடந்தன.தியாகு சென்னைக்கு மாற்றல் கேட்டு வாங்கி கொண்டார். அதற்கு முன்னரே வேதா, நந்தினியை கூட்டிக்கொண்டு சென்னையில் ரஞ்சனியின் அம்மா வீட்டு மாடிக்கு குடி போனாள். நந்தினியையும் அங்கே உள்ள பள்ளியில் சேர்த்தார்கள். புது சூழ்நிலை ,புது நண்பர்கள், புது பள்ளி என நந்தினியும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பினாள்.

ஓரளவு தேறி வந்தாலும், அவளால் நடந்த அதிர்ச்சியிலிருந்து முழுதாக மீள முடியவில்லை. சில சமயம் அதிர்ச்சியில் பிட்ஸ் வந்தது. வேதாவும், தியாகுவும் அசராமல் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவருடைய ஆலோசனைப்படி அவளை பலதடவை மனோதத்துவ ஆலோசகரிடம் கூட்டிப்போய், பலதடவை கவுன்சிலிங் கொடுத்தார்கள்.

பறவை தன் குஞ்சை இறக்கைக்குள் வைத்து பாதுகாப்பது போல வேதா அவளை கவனமாக பார்த்துக் கொண்டாள். ஒவ்வொரு விஷயத்திலும் பழைய கசப்பான ஞாபகங்கள் வராதபடி கவனமாக வளர்த்தாள். அதுவும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி. அவளை திசை திருப்ப பேட்மிட்டன், ஷர்ட்டில் என விளையாட்டு ஆர்வத்தை வளர்த்தாள் – தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05.

பாட்டில் ஆர்வமாக இருந்த நந்தினி அதன்பின் பாடவே முயற்சிக்காதது அவர்களுக்கு ஒரு மன கலக்கத்தை கொடுத்தது. இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து படிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்கள். ஓய்வு நேரங்களில் வெளியே கூட்டிப் போகவும் மறக்கவில்லை. அவளை எந்த அளவு சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவு சந்தோஷமாக வைத்துக் கொண்டார்கள், மறந்தும் திருச்சியை பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டார்கள்.

நந்தினி கொஞ்சம்,கொஞ்சமாக வளர, அவளுடைய கவனம் அவளை ஒத்த பிள்ளைகளிடம் திரும்பியது. பிட்ஸ் வருவதும் குறைந்தது.அதுவே நல்ல ஆரோக்கியமான மாற்றமாக வேதாவுக்கும், தியாகுவுக்கும் தோன்றியது. விளையாட்டில் ஆர்வம் அவளுக்கு இயல்பாக இருக்க, பள்ளியில் வாலிபால் டீம்… டென்னிஸ் டீம் என்று எல்லாவற்றிலும் சேர்ந்தாள்.

முழுக்க, முழுக்க பெண்கள் பள்ளி

விளையாட்டு அவள் மனதையும் உடம்பையும் ஓரளவு பக்குவப்படுத்தியது. அத்தோடு படிப்பிலும் அவள் முதலாவதாக வர, ஆசிரியைகளுக்குமே அவளை பிடித்துப் போனது.அதனால் அவள் பள்ளி வாழ்க்கை சந்தோஷமானதாகவும்…

அவளுக்கு மேலும் எந்த மன கஷ்டத்தையும் கொடுக்காததாகவும் இருந்ததால் ஓரளவு அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது. எப்போதாவது ஏற்படும் மனச்சோர்வு தவிர ஓரளவு மற்ற பிள்ளைகளைப் போல இயல்பாகவே வாழ்ந்தாள். பள்ளி முடியும் வரை அது முழுக்க, முழுக்க பெண்கள் பள்ளி என்பதால் அவளுக்கு எந்தவித பிரச்சனையும் தோன்றவில்லை.

பள்ளி முடித்த பின், இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர… முதல் முதலாக அவளுக்கு ஆண்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் வாய்த்தது. ஏனோ ஆண்களைக் கண்டாலே ஒருவித அச்சம் ஏற்பட ஆரம்பித்தது. ஆண் நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்தாள். அவளை ஒத்த மற்ற பிள்ளைகள் எல்லாம் ஆண் நண்பர்களுடன் சகஜமாக பேச, இவள் மட்டும் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்.

அவள் வகுப்பில், அவள் பாடப்பிரிவில் படித்த வினோத் என்ற மாணவன் மிகவும் சகஜமாக எல்லா பெண்களிடம் பழகுவது போல நந்தினியிடம் பேச முன் வருவான். ஆனால் நந்தினி தவிர்த்துவிடுவாள். அவனுக்கு நந்தினியின் குணமும், படிப்பிலும், விளையாட்டிலும், மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதால் அவள் பெயரில் ஒரு தனி மரியாதையும் வர ,அவளுடைய நட்பு கிடைக்காதா என்று ஏங்கினான்.

ஒருமுறை நந்தினி மரத்தடியில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருக்க… வினோத் அவள் அருகில் போய் அமர்ந்தான். உடனே சடாரென்று எழுந்து கொண்ட நந்தினி,

“என்ன வேணும் வினோத் ” என்றாள்.

“ஏன் நந்தினி என்னை பார்த்து விலகி விலகி போற ..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன் பிரெண்ட்ஷிப் கிடைக்காதான்னு ஏங்குறேன்.நீ என்ன உன் பிரண்டா ஏத்துக்க மாட்டியா?”

“ப்ளீஸ் வினோத்! உன் மேல நான் நிறைய மரியாதை வைச்சிருக்கேன். தயவு செய்து அத கெடுத்துக்காதே. எனக்கு எந்த ஆண் நண்பர்களுடனும் நட்பு வேண்டாம். தயவு செய்து என்கிட்ட இந்த மாதிரி பேச்செல்லாம் வேண்டாம்” என்றவள், படபடப்பாய் எழுந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

தயவு செய்து இங்கே வராதே

வினோத் ஒருமுறை அவள் மறந்து வைத்துவிட்டு போன அவள் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுக்க வீட்டிற்கு வர, நந்தினி டென்ஷனாகி கத்த ஆரம்பித்தாள்… – tharaiyil vizhuntha meengal-05

“என்னுடைய வேலையை எனக்கு பாத்துக்க தெரியும். நீ நல்லவன் மாதிரி புத்தகத்தை எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுக்க தேவையில்லை .எனக்கு உங்க யாரையுமே பிடிக்கல…. தயவு செய்து இங்கே வராதே.. என்கிட்ட பேசாத… போயிடு… போயிடு…” என்று கூறியவாரே மயங்கி விழுந்தாள்.

வேதமும் தியாகுவும் திகைத்துப் போயினர். அவள் முழுக்க வெளிவந்து விட்டாள்… என்று நினைத்த விஷயம் அவள் மனதிற்குள் ஆழமாக இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆண்களைக் கண்டாலே.. அவர்கள் நெருக்கமே அவளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துவது புரிய என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போயினர். …

தொடரும்….

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...