நாலடியார் (10) ஈகை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10
அறத்துப்பால் – இல்லறவியல்
10. ஈகை
செய்யுள் – 01
“இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாளம் ஆண்டைக் கதவு”
விளக்கம்
பொருள் இல்லாத போதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழந்து இயல்பாக கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலக கதவுகள் எப்போதும் திறத்தே இருக்கும்.
செய்யுள் – 02
“முன்னரே சாம் நாள் முனித்தக்க மூப்பு உள
பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள – கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும்
கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து”
விளக்கம்
எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்க தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகி இருக்கின்றன.ஆதலால், பொருள் உள்ள காலத்தில் மேலும் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக் கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!
செய்யுள் – 03
“நடுக்குற்று நற் சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினை உலந்தக்கால்”
விளக்கம்
பிறருக்கு கொடுத்து தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும். காலத்தில் சேரும் பொருளை சேர்த்து நல்வினை தொலைந்த போது, அப்பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கி விடும்.
செய்யுள் – 04
“இம்மி அரிசி துணையானும் வைகலும்
தும்மில் இயைவ கொடுத்து உண்மின் – நும்மைக்
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து
அடாஅ அடும்பினவர்”
விளக்கம்
ஒரு சிறிய அரிசியின் அளவாவது நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்கு கொடுத்து பின் உண்ணுங்கள். ஏனென்றால் ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்கள், முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.
செய்யுள் – 05
“மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும்”
விளக்கம்
மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் தோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும் பிறரிடம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதை விட இரண்டு மடங்கு நல்லது.
செய்யுள் – 06
“நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடி கொளுத்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஒற்றைப் பனை”
விளக்கம்
ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றி திண்ணையும் இருந்தால் பலரும் வந்து பழத்தைப் பறித்து திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோல செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வமு பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்.
செய்யுள் – 07
“பெயர் பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம்
செயற்பால செய்யாவிடினும் – கயல் புலால்
புன்னைக் கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப
என்னை உலகு உய்யும் ஆறு”
விளக்கம்
கயல் மீனின் புலால் நாற்றத்தை புன்னை மலர்கள் போக்கும் அலைமோதும் குளிர்ந்த கடற்கரையை உடைய அரசனே! பருவ மழை தவறிய போதும் உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளை பிறருக்கு செய்யா விட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்
செய்யுள் – 08
“ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது
ஆற்றத்தார்க்கு ஈவது ஆம் ஆண் கடல் ஆற்றின்
மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல்
பொலி கடன் என்னும் பெயர்த்து
விளக்கம்
வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையை உடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது எதையாவது இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது திருப்பி தர முடியாத வறியவர்க்கு ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பி கொடுப்பவர்க்கு ஓன்றை ஈதல் யாவரும் அறிந்த கடன் என்னும் பெயருடையது.
செய்யுள் – 09
“இறப்பச் சிறிது என்னாது இல் என்னாது என்றும்
அறப்பயன் யார் மாட்டும் செய்க – முறைப் புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்துவிடும்”
விளக்கம்
தாம் தருவது சிறியது என்று கருதாது இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்க. அது வாயில் தோறும் பிச்சைக்கு செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் போல மெல்ல மெல்ல. புண்ணிய பலனை பூரணமாக்கும் – naladiyar seiyul vilakkam-10.
செய்யுள் – 10
“கடிப்பு இல் கண் முரசம்காதத்தோர் கேட்ப
இடித்து முழங்கியது ஒர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூஉலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல்”
விளக்கம்
குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் இருப்போர் மட்டுமே கேட்பர். மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்பவர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர் கொடுத்தார் என்ற புகழ்ச் சொல்லை ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர்.
– கோமகன்