என் மின்மினி தொடர்கதை (பாகம் – 69)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-69
En minmini thodar kadhai
அவளுடைய நிலை அவனுக்கு மாளாத சோகத்தை மனதுக்குள் தந்தாலும் அதை வெளிக்காட்ட விரும்பாதவனாய் அவள் தலையினை மெதுவாக தடவியவாறே சரி…அழாதே…வருத்தப்படாதே…இது பத்தி முன்னாடியே நீ சொல்லியிருக்கலாம் இல்லையா. ஏன் சொல்லாம மறைச்சுட்டே.சொன்னால் நான் உன்னை விட்டுட்டு பிரிந்து போயிருவேன்னு நினச்சு தானே இதை மறச்சுறுக்கே.எப்படி உனக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தது என்று மெதுவாக அவளிடம் கேட்டான் பிரஜின்…
அவன் ஒவ்வொன்றாய் கேட்க அவன் முன்னே குறுகி அமர்ந்திருந்தாள் அவள்… நான் உன்னைப்பற்றி முழுசும் தெரிஞ்சுக்கணும்ன்னு தான் கேட்குறேன்.மத்தபடி உன்னை காயப்படுத்தி அதுல சந்தோஷப்பட கேட்கவில்லை.தயவுசெய்து நடந்ததை மறைக்காமல் என்கிட்டே நம்பி சொல்லு என்றவாறே அவள் முதுகை தட்டிக்கொடுத்தான் அவன்…
கொஞ்சம் தைரியம் வந்தது போல இருந்தது அவளுக்கு.நான் முன்னாடியே சொல்ல நிறைய முறை முயற்சி செய்து அந்த முயற்சியில் தோற்றுப்போயிருக்கேன்.என்னால என்னுடைய இந்த பிரச்சனையை நீ எப்படி எடுத்துக்கொள்வாய்,அது,இதுன்னு நிறைய முறை யோசிச்சு பயந்து தான் நான் சொல்லல…
நீ என்கிட்டே உன்னுடைய காதலை சொல்லும் போது எனக்கு அத்தனை மகிழ்ச்சி தான்.ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் பட்ட அவஸ்தை இருக்கே.,அதை வார்த்தையால் சொல்ல முடியாது என்று தேம்பியவாறே மேலும் சொல்வதை தொடர்ந்தாள்…
அப்பா,அம்மா,தம்பி இறந்து போகும் போதே நானும் போயி சேர்ந்து இருந்தால் இந்த நிலை எனக்கு வந்தேயிருக்காது.
அவர்கள் உயிரை எல்லாம் எடுத்து எனக்கு மட்டும் உயிர் வாழும் பாக்கியத்தை கொடுத்த அந்த கடவுள் ஒரு உயிரை சுமக்கும் அந்த முக்கியமான பாக்கியத்தை எடுத்து விட்டு என்னை ஒரு நடமாடும் பிணமாக செய்து விட்டானே…அன்றைக்கு என் குடும்பமே அந்த விஷத்தால் சாகும் போது நான் மட்டும் ஏன் உயிர் பிழைக்கணும்,என்னையும் அன்னிக்கே அந்த ஆண்டவன் கூப்பிட்டு போயிருக்க மாட்டானா என்று கலங்கி நின்றாள் ஏஞ்சலின்…
அவள் சொல்வதை கேட்க மனதில் தெம்பு இல்லாமல் இருந்தாலும் அவள் முன்னால் அழுது அவளையும் இன்னும் துயரில் தள்ள அவன் துளியும் விரும்பாமல் தன் பேச்சை தொடர்ந்தான் பிரஜின்… சரி நடந்து முடிந்தது முடிந்து போனதாகவே இருக்கட்டும்.இனி நடப்பதை பார்ப்போம்.என்ன ஆனாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்.
உனக்கும் யாரும் இல்லை.எனக்கும் அப்பா,அம்மான்னு யாரும் இல்லை.நான் சின்ன வயசா இருக்கும் போது கந்து வட்டி கொடுமையால் ரொம்ப அசிங்கப்பட்டு, தலைகுனிந்து அப்போ அவங்க இருந்த மனநிலையில் என்னைப்பத்தி கூட யோசிக்காமல் தூக்குல தொங்கிட்டாங்க.அவங்க இறந்து போன பிறகு என் அப்பாவோட நண்பரும்,அவங்க மனைவியும் தான் என்னை தத்தெடுத்து வளர்த்தாங்க.அவங்களுக்கும் குழந்தைகள்ன்னு யாரும் இல்லை.இப்போ ஒரு மூணு வருடத்துக்கு முன்னாடி தான் ஒரு ஆக்சிடென்ட்ல அவங்களும் இறந்துட்டாங்க.அவங்க எனக்குன்னு விட்டுட்டு போனது அவங்க வாழ்ந்த இந்த வீடும்,அவங்க காசிலே வளர்ந்த என்னோட உடம்பும் தான் மிச்சம்…
எதுவுமே இங்கே நிரந்தரம் இல்லைன்னு எனக்கு புரியவைத்து விட்டு பறந்து போயிட்டாங்க… இப்போ நானும் தனி, நீயும் தனி…
அன்பு காட்டவும் ஆளு இல்லை.அக்கறை காட்டவும் உறவு இல்லைன்னு சொல்லியவாறே அவளது கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி,தன்னையும் நினைத்து சலித்தபடி.,
வா உன்னை கொண்டுபோய் ஹாஸ்டலில் விட்டுவிட்டு வருகிறேன்.எதைப்பற்றியும் நினைக்காமல் கொஞ்சம் நிம்மதியாக தூங்கு.எல்லாம் சரியாகும் என்ற நினைப்பில் காலையிலே எழும்பு என்று அவளுக்கு ஆறுதல் சொல்லியவாறே அவளை ஹாஸ்டலில் கொண்டு விட வண்டியை ஸ்டார்ட் செய்தான் பிரஜின்…
அவன் சொல்வதற்கெல்லாம் பதில் ஏதும் பேசாமல்,தலையை மட்டும் ஆட்டியவாறே என்று சைகையால் பதில் சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள் ஏஞ்சலின்…
மீண்டும் பயணம் இனிதே தொடங்க,
எதிர்வரும் காற்று அழுது அழுது சிவந்த அவள் முகத்தில் பட்டு,அவளை கொஞ்சம் பரவசமாக்கி,தன்னையே தான் மறக்க செய்து,சோகத்தை கொஞ்சம் குறைத்து குளிரூட்டி கொண்டிருந்த வேளையில்
ம்ம் வந்தாச்சு… ஹாஸ்டலுக்கு வந்துட்டோம் இறங்கு…என்றான் பிரஜின்…
அவள் மனதில் மீண்டும் அமைதி.லேசான மென் சிரிப்பு மட்டும் கொடுத்தவாறு.,சரி நான் உள்ளே போறேன் என்கிற பாணியில் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்று ஹாஸ்டல் வாசலினை நோக்கி நடந்து உள்ளே நுழைந்தாள் ஏஞ்சலின்…
அவள் உள்ளே செல்வதற்குள் ஒரு முறையாவது திரும்பி பார்ப்பாளா என்ற ஏக்கத்தில் அவளையே பார்த்துகொண்டு ஏமாற்றத்துடன் மீண்டும் வீட்டை நோக்கி பயணப்பட்டான் பிரஜின்…
பாகம் 70-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)