என் மின்மினி தொடர்கதை (பாகம் – 71)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-71
En minmini thodar kadhai
அதே வேளையில் அவளும் அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து தனது முயற்சியில் தோற்று போய்.,
தனக்கிருந்த களைப்பில் அடிபட்ட கை வலியும் இன்னுமின்னும் அதிகமாகி தூங்கினால் போதும் என்ற எண்ணம் மேலோங்க தன்னையும் அறியாமல் அயர்ந்து தூங்கி போக.,
அங்கே அவனும் தூங்கி போனான்….
அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் அதிகாலையில் அனுதினமும் டேப் ரெக்கார்டரில் பாடல் போடுவது இயல்பு…அந்த ஊர் மக்கள் அந்த பாடலின் ஒலியை கேட்டு வைகறையில் கண்விழித்து அன்றாட வேலைகளை கவனிப்பது வழக்கம்…
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக்கேட்டு என்ற பாடல் ஒலி அவன் காதில் விழ தூக்கத்தில் இருந்தவன் மெதுவாக கண்களை திறந்து.,விடிஞ்சு போச்சா…மணி எத்தனை ஆச்சு என்று தனக்குள் கேட்டுக்கொண்ட படி தனது மொபைலினை எடுத்து மணியைப்பார்த்தான்.நேரம் சரியாக காலை 5.02AM என்று காட்டி கொண்டிருக்க,
சரி எழுந்து எக்ஸர்சைஸ் பண்ணலாம் என்று படுக்கையை விட்டு மெதுவாக எழுந்தான்…
நேரம் விறுவிறுவென ஓடி கடிகாரம் எட்டினை தாண்டி சுற்றி கொண்டிருந்தது…
வெளியில் வேறு மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை.லேசான சாரலுடன் பூமியை குளிர்வித்து கொண்டே இருந்தது.
ஆஃபிஸுக்கு கிளம்ப தயாரானவன் ஒரு நிமிடம் நின்று யோசித்து குளிர் தாங்கும் வகையில் தன்னிடமிருந்த ஒரு ஜெர்கினை எடுத்து அணிந்து கொண்டு,ஒரு கையால் ஹெல்மெட்டினையும் எடுத்து தலையில் மாட்டியபடி அவசர அவசரமாக வண்டியில் ஏறி முறுக்கியபடி ஆபீஸினை நோக்கி பயணத்தை தொடர்ந்தான் பிரஜின்…
சென்று கொண்டிருக்கும் போதே அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்…
நேற்று குழந்தைப்பேறு பற்றி அவள் சொன்ன வார்த்தைகள் ஒரு புறம்,அவளுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை ஒரு புறம்,இந்த நிலையை நான் எப்படி சமாளித்து கடந்து வர போகிறேன் என்ற எண்ணங்கள் ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க…
நான் அவளை ஏற்றுக்கொண்டு வாழ்வது உறுதி.ஆனால் எனக்கும் ஒரு குழந்தை வேண்டுமே!இந்த நிலையில் நான் என்ன முடிவெடுப்பது.,
இவளை கைவிட்டு வேறு ஒருத்தியை நான் திருமணம் செய்தால் என் மனசாட்சியே என்னை கொன்று விடுமே என்று பலவிதமாக எண்ணிக்கொண்டே தனது கவனத்தை தனது டூவீலர் பயணத்தில் இருந்து ரொம்ப தூரத்துக்கு கொண்டு சென்று தனது கட்டுப்பாட்டை இழந்து வண்டியினை ஓட்டினான்…
(கவனமில்லா சில வினாடி பொழுதுகள் வாழ்வில் பெரிய கோர சம்பவங்களை நிகழ்த்துவது போலே அவனது கவனமின்மை
அவனது வாழ்விலும்,இன்னும் சிலரின் வாழ்க்கையிலும் மாற்றி அமைக்க முடியாத அளவுக்கு ஒரு கோரத்தை ஏற்படுத்தியது…)
கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்த தனது டூவீலர் வேகமாக சென்று எதிரில் வந்த பள்ளிப்பேருந்தின் மீது மோத., மோதிய வேகத்தில் அவனது தலையில் சரியாக மாட்டப்படாத ஹெல்மெட் கழன்று விழுக,பேருந்தின் பக்கவாட்டில் இருந்த கம்பி ஒன்று நழுவி அவனது ஜெர்கினில் நன்றாக துளைத்து மாட்டி கொள்ள டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டான் பிரஜின்…
அவனது நிலையை கண்ட பள்ளிப்பேருந்து டிரைவர் பயத்தில் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்று எதிரில் வந்த பெண்மணி மீது மோதிவிட்டு தப்பியோடிவிட்டான்…
சாலையில் ஆள் அரவம் ஏதும் இல்லை…ஒரு புறம் குருதி கொப்பளிக்க அந்த பெண்மணி இறந்து கிடக்கிறாள்.மறுபுறம் இரத்த ஆறு ஓட இவன் உயிருக்கு போராடி விழுந்து கிடக்கிறான்…
சிறிது நேரத்துக்கு பின்னர் லேசாக நினைவு அவனுக்குள் வர தன் அருகில் நடந்திருப்பதை பார்க்க முயற்சி செய்கிறான்.
தெளிவாக பார்வை புலப்படவில்லை என்றாலும் கொஞ்சம் தூரத்தில் ஒரு பெண்மணி விழுந்து கிடப்பது மட்டும் அவனுக்கு புரிந்தது… அவள் இறந்து தான் கிடக்கிறாள் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை
எப்படியாவது அவளையும் காப்பாற்றி,தன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க தனது மொபைலை தேட முயற்சி செய்தான்.எங்கும் கிடைக்கவில்லை…
சரி… அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது விழுந்து கிடக்கும் அந்த பெண்மணி அருகில் ஒரு சிறிய மொபைல் போன் கிடப்பதை பார்த்து, வலியையும் பொருட்படுத்தாமல் அதை எடுக்க மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து சென்று அவளருகில் வருகிறான் பிரஜின்…
வந்தவனுக்கு கொஞ்சம் பேரதிர்ச்சி.அவள் காது,மூக்கு துவாரங்கள் வழியே இரத்தம் வழிய அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைத்து நிலை குலைந்து கிடந்தாள் அந்த பெண்மணி…
உடனே தனது கண்களை மூடியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அவன்.இருந்தாலும் அவள் சிதைந்த முகம் அவனுக்கு ஒரு விதமான குமட்டலை ஏற்படுத்தி வாந்தியை வர செய்தது…
என்ன செய்வது என்று தெரியாமல் அவளருகில் கிடந்த போனை எடுத்து அவளது குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்…
ஆனால் அவளுடைய மொபைலில் இரண்டு நபர்களின் பெயர் மட்டுமே பதிவு செய்ய பட்டிருந்தது.
ஒரு பெயர் என்னுயிர் முகில் என்றிருந்தது…
மற்றொரு பெயர் ஷீலா மிஸ் என்றிருந்தது…
எந்த நம்பருக்கு தகவல் சொல்வது என்று யோசித்தான்.சில வினாடிகளில் தனது கை தவறி முகில் என்ற பெயருக்கு அழைப்பு சென்றது…
மறுமுனையில் தொடர்பு இணைக்கப்பட்டு ஹலோ அம்மா…எங்கம்மா இருக்க…ஸ்கூலுக்கு நேரமாகுதும்மா,சீக்கிரம் வாம்மா என்ற குரல் கேட்க… – என் மின்மினி தொடர்கதை பாகம்-71
எதுவும் பதில் சொல்லாதவனாக இணைப்பை துண்டித்தான் பிரஜின்
பாகம் 72-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)