என் மின்மினி தொடர்கதை (பாகம் – 72)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-72
En minmini thodar kadhai
அவனையும் அறியாமல் கண்கள் நிறைய,இதயம் பதைபதைக்க ரோட்டில் அமர்ந்த படி கதறி அழ தொடங்கினான்…
ஒரு நிலையில் அழுது எந்த பயனும் இல்லை என்று மனதில் நினைத்தவன்,வழியும் கண்ணீரை துடைத்தபடி கையிலிருந்த மொபைலில் இருந்து இரண்டாவதாக பதியபட்டிருந்த பெயரான ஷீலா மிஸ்க்கு தொடர்பு கொள்ள முயற்சித்தான்…
மறுமுனையில் ட்ரிங்,ட்ரிங் என சத்தம் மட்டும் சென்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.மீண்டும் அழைத்து பார்க்கலாம் என்று அவன் நினைக்கும் முன்னரே மீண்டும் அவனுக்கு மயக்கம் வருவது போன்ற நிலை ஏற்பட சாலையிலேயே சரிந்து கீழே விழுந்தான்…
கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மழை மீண்டும் லேசான தூறலாக பொழிய தொடங்கியது.முகம் கை கால் என்று வழிந்திருந்த இரத்தம் மழையின் நீரால் கொஞ்சம் கழுவபட்டு மயக்கத்தில் இருந்து மீண்டும் லேசாக மீளத்தொடங்கி கண்களை அகல விரித்து வான் நோக்கி கிடந்தான்…
சில வினாடிகளில் கொஞ்சம் நன்றாகவே மயக்கம் தெளிந்திருந்தது…மெதுவாக மீண்டும் எழுந்து அமர்ந்தான்…அவன் எழுந்து அமரவும் அவனருகில் கிடந்த அந்த பெண்மணியின் மொபைலின் அழைப்பு சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது…வேக வேகமாக அந்த மொபைலை எடுத்து வந்த அழைப்பை ஏற்று பேச முயற்சி செய்தான்…ஆனால் வந்த அழைப்பை கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கு மொபைல் முழுவதும் மழை நீரில் தொப்பலாக நனைந்து போயிருந்தது…
ச்சே…என்று எரிச்சலுடன் அந்த மொபைலை தூக்கி தரையில் பொத்தென்று ஒரு அடி அடித்தான்…சற்றும் எதிர்பாராத விதமாக அவன் அடித்த அடியில் அழைப்பு ஏற்கப்பட்டு மறுமுனையில் ஒரு பெண் குரல்…..
ம்ம் சொல்லுங்க பாரதி…காலையிலேயே கூப்பிட்டிருக்கீங்க.முகில் ஸ்கூலுக்கு எதும் வர மாட்டேன்னு அடம் பிடிக்குறானா என்று கேள்விக்கணைகளை அடுக்கி கொண்டே போக….
இடையில் குறுக்கிட்டு பதில் சொல்ல ஆரம்பித்தான் அவன்…
ஹலோ மேடம்,என் பெயர் பிரஜின்.நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்…காலையிலே எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு கொஞ்சம் பலமாக அடி.இந்த மொபைலை வெச்சிருந்த ஒரு பெண்ணும் அதே விபத்துல அடிபட்டு முகம்,கை,கால் எல்லாம் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்துப்போயிட்டாங்க…என்ன செய்றதுன்னு தெரியாம அவங்க மொபைலில் இருந்து முகில்ன்னு ஒரு பெயருக்கு தொடர்பு கொண்டு பேச முடியாமல் துண்டித்து விட்டேன்.
நீங்க யாரு மேடம்.நான் இப்போ என்ன செய்வதுன்னு கூட தெரியல.எனக்கும் பலத்த அடிபட்டு சாலையில் விழுந்து கிடக்கிறேன்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க மேடம் என்று கிட்டதட்ட கெஞ்சவே ஆரம்பித்தான் பிரஜின்…
நான் ஷீலா.ஸ்கூல் டீச்சரா இருக்கேன்.இப்போ எங்க இருக்கீங்க,பக்கத்துல இருக்குற லேண்ட்மார்க் ஏதாச்சும் சொல்லுங்க என்று பதறி போயி விசாரித்தாள் ஷீலா டீச்சர்…
டீச்சர் என்று விம்மியபடியே நான் இப்போ இங்கே என்று சுற்றிமுற்றி பார்த்துவிட்டு.,கவர்மெண்ட் ஸ்கூல் ஒன்று தூரமாக தெரிகிறது.பக்கத்தில் ஒரு சின்ன குடிசை ஒன்று தெரிகிறது என்று பதிலளித்தான் பிரஜின்…
இதோ இரண்டே நிமிடத்தில் வரேன் என்று கூறிய ஷீலா டீச்சர் தனது மொபைல் இணைப்பை துண்டித்து விட்டு வேகமாக அந்த இடத்துக்கு விரைந்தாள்…
நேரம் கடந்து கொண்டிருந்தது.சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடியே ஷீலா டீச்சரின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.யாரும் வருவதாக தெரியவில்லை.கையில் இருந்த ஒரு மொபைலும் தண்ணீர் புகுந்து முற்றிலும் செயல் இழந்தே போனது.செய்வதறியாமல் திகைத்து கண்கள் முழுவதும் கண்ணீர் மல்கி கூடவே மன அழுத்தமும் அதிகமாகி மீண்டும் அரைமயக்கத்தில் விழுந்தான்.அப்போது அவனது மூக்கில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது…
ஆனாலும் அவன் கண்கள் யாராவது உதவ வருவார்களா என்று எதிர்பார்த்தபடி வழியினை பார்த்தபடி திறந்தே இருந்தது.
மெதுவாக முயன்று இறந்த பெண்மணியின் மீது தனது கவனத்தை திருப்பினான்…
அவளை சுற்றிலும் சில காகங்கள் அமர்ந்து கொண்டு கா….கா….என்று கரைந்தபடி மற்ற காகங்களையும் அவளருகே வரவைக்க முயற்சித்து கொண்டிருந்தன…இன்னும் சில காகங்கள் அவளது முகத்தினருகில் வந்து அமர்ந்து சிதைந்த பாகங்களை கொத்தி கொத்தி தின்ன ஆரம்பித்தன…
ச்சே…என்று தனக்குள் சலித்து கொண்டவன்.,
இறக்கும் வரை தான் நீ பெரிது நான் பெரிது என்று மனிதன் கூக்குரலிடுகிரான்.இறந்து விழுந்தால் கழுகுகளுக்கும்,காகங்களுக்கும் இரைதான் என்று நினைத்தபடியே முற்றிலும் மயங்கிபோனான் பிரஜின்…
அந்த இடம் சுற்றிலும் மையான அமைதி நிறைந்தாலும்.,காகங்களின் சத்தம் மட்டும் வானை கிழித்து கொண்டிருந்தது…
சற்று நேரத்தில் இறந்தவளை சுற்றி அமர்ந்து கொண்டு அவளது சதைகளை கிழித்து கொத்தி கொண்டிருந்த காக்கைகள் அனைத்தும் தூரத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டு கூட்டமாக பறக்க தொடங்கின…
டுர்….. என்ற ஒரு சத்தம்…..
தூரத்தில் இருந்த பள்ளியின் அருகே ஒரு ஆட்டோ வந்துகொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு பெண் எட்டி பார்த்துக்கொண்டே வந்தாள்…
வேகமாக வந்த ஆட்டோ.,இவர்கள் விழுந்து கிடக்கும் இடத்தினருகில் வந்ததும் சட்டென நின்றது… எட்டிபார்த்தபடி வந்த அந்த பெண் ஆட்டோ நின்றவுடன் வேகமாக இறங்கி இறந்து கிடந்த அவளருகில் சென்று
பாரதி…..ஐயோ நான் என்ன பண்ணுவேன்.உன் முகிலுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.அவனுக்கு உன்னை விட்டா யாரும்மா இருக்காங்க.நான் ஷீலா டீச்சர் வந்துருக்கேன்.ஒரு முறை பாரு பாரதி என்று கதறி அழுதாள்…
கண்களை துடைத்தபடி பாரதி பக்கம் இருந்த தன் கவனத்தை பிரஜின் பக்கம் திருப்பினாள் ஷீலா டீச்சர்…. – என் மின்மினி தொடர்கதை பாகம்-72
அண்ணே எனக்கு ஒரு உதவி…கொஞ்சம் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க அண்ணே என்று ஆட்டோ காரரிடம் கேட்டு கொண்டே தலையில் கை வைத்து இறந்து கிடந்த பாரதி அருகில் சென்று அமர்ந்தாள் ஷீலா டீச்சர்…
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவே இல்லை…
பாகம் 73-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)