ஐங்குறுநூறு பகுதி 5
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5
மருதத்திணை
05 புலவி பத்து
41
“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு
வெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்
தன்சொ லுணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யு மூர்கிழ வோனே”
துறை: தூதுவராக வந்த வாயிலர்களிடம் தலைவி தலைவனையும் அவன் பக்கத்தாரையும் இகழ்ந்து கூறியது.
விளக்கம்: தனது பார்ப்பை தின்னுகிற அன்பில்லாத முதலையோடு வெள்ளிய பூவையுடைய பொய்கையை உடையது அவனது ஊரென்று கூறுவர்; அதனாலே தனது சொல்லை உண்மையென்று நம்பியவரது மேனியைப் பொன் போல செய்யும் ஊரன்.
42
“மகிழ்மிகச் சிறக்க மயங்கினள் கொல்லோ
யாண ரூரநின் மாணிழை யரிவை
காவிரி மலிர் நிறை யன்னநின்
மார்புநனி விலக்க றொடங்கியோளே”
துறை: தலைவன் பிற பரத்தையருடன் சேர்ந்தான் என ஒரு பரத்தை வெறுத்துக் கூற தலைவி அவன் தன் இல்லத்தில் இருப்பதையறிந்த தலைவி கூறியது.
விளக்கம்: வளமை நிறைந்த ஊரனே! நினது மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை அடைந்த அரிவையானவள் மிகுந்த மகிழ்ச்சியால் மயக்கமுற்றாள். காவிரி ஆற்று நீரை ஒத்த நினது மார்பை தடுத்தற்குத் தொடங்கினாள்.
43
“அம்பணத் தன்ன யாமை யேறி
செம்பி னன்ன பார்ப்புபல துஞ்சும்
யாண ரூர நின்னினும்
பாணன் பொய்யான் பலசூ ளினனே”
துறை: பாணன் வாயிலாக தன் நிலையினை கூற எண்ணிய தலைவனை பற்றி தலைவி கூறியது.
விளக்கம்: மரக்காலை ஒத்த ஆமையினது முதுகில் செம்பை ஒத்த பார்ப்புகள் ஏறித் துயில் கின்ற அழகிய ஊரனே! நின்னினும் பாணனோ பொய்யன் அல்லன் அவன் பல சாபம் உடையவன்.
44
“தீம்பெரும் பொய்கை யாமை யிளம்பார்ப்புத்
தாய்முக நோக்கி வளர்ந்திசி னாஅங்
கதுவே யையநின் மார்பே
யறிந்தனை யொழுகுமதி யறனுமா ரதுவே”
துறை: பரத்தையர் மனையில் பன்னாள் தங்கிய தலைவன் தலைவியை தேடி வந்ததறிந்த தோழி கூறியது.
விளக்கம்: இனிய நீரையுடைய பெரிய பொய்கையின் கண் உள்ள ஆமையின் பார்ப்பு தாயின் முகத்தை நோக்கி வளரும் தன்மை போல ஐயனே! நின் மார்பு அத்தன்மையதே அதனை நீ அறிந்தனையாய் ஒழுங்கு மிக நிறைந்த தருமம் அதுவேயாம்.
45
“கூமி ராயிற் றண்கலிழு தந்து
வேனி லாயின் மணிநிறங் கொள்ளும்
யாறணிந் தன்றுநின் னூரே
பசப்பணிந் தனவான் மகழ்நவென் கண்ணே”
துறை: பரத்தையரிடம் நெடுநாள் தங்கிய தலைவன் வீடு திரும்பிய போது தோழி சொல்லியது.
விளக்கம்: கூதிர் காலமானால் கலங்கி வேனிற் காலமாயின் தெளிதலை கொள்ளும் ஆற்றை அணிந்தது நின் ஊர். மகிழ்ந! என்னுடைய கண்கள் எக்காலத்தும் பசப்படைந்தனவாய் இருந்தன.
46
“நினக்கே யன்றஃ தெமக்குமா ரினிதே
நின்மார்பு நயந்த நன்னுத லரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
யீண்டுநீ யருளா தாண்டுறை தல்லே”
துறை: பரத்தை விலக்க விலகி உலகியல் பற்றி அறிந்து திரும்பிய தலைவனுக்கு தோழி அறிவுரை சொல்லியது.
விளக்கம்: மகிழ்ந! நின்னுடைய மார்பு விரும்பிய அழகிய நுதலையுடைய பெண்ணானவள் (தலைவி), விரும்பிய குறிப்பினை உடையாயாகி ஈண்டு வருதலாகிய அருளைச் செய்யும் தன்மை அல்லையாய் இருத்தல் நினக்கே அல்லாமல் அது எமக்கும் இனிதாதலை உடையது.
47
“முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறு சொரிந்த
வகன்பெரு வட்டி நிறைய மனையோ
ளரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூர
மாணிழை யாய மறியுநின்
பாணன் போலப் பலபெய்த் தல்லே”
துறை: பாணற்கு வாயில் மறித்த தலைவி பின் பாணனோடு தலைமகன் புகுந்து தன் காதலைச் சொல்லியது
விளக்கம்: கூறிய பற்களையுடைய வலைப்பாண் மகள் இனிமை உடைத்தெற்று கொள்ளப்படும் கெடிற்று மீனைச் சொரிந்த அகன்ற பெட்டி நிறைய பண்ட மாற்றாக மனையோள் இருவியஞ்செய்யின் விளைந்த பெரும் பயற்றை நிறைக்கும் ஊர! அழகிய ஆபரணத்தை உடைய ஆயத்தார் நின் பாணன் போல நீயும் பலவாக பொய்த்தலை அறிவர். ஆதலின் யான் இதனை மெய் என்று கொள்ளினும் அவர் பொறார்.
48
“வலைவல் பாண்மகள் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள்
யாண்டுகழி வெண்ணெ னிறைக்கு மூர
வேண்டேம் பெருமநின் பரத்தை
யாண்டுச்செய் குறியோ டீண்டுநீ வரவே”
துறை: பரத்தை மான்டு ஒழுகா நின்று தன் மனைகட் சென்ற. தலைவனுக்கு தலைவி சொல்லியது
விளக்கம்: வலையை உடைய வலிய பாண்மகனது மடமகளானவள் வாரன் மீன் சொரிந்த பெட்டியுள் மனையோள் ஆனவள் ஓர் ஆண்டு கழிந்த வெண்ணெல்லை சொரிந்து நிறைகின்ற ஊரனே! பெரும! நினது பரத்தையானவள் அவ்விடத்திற்கு செய்குறியோடு நீ ஈண்டு வருதலை விரும்ப மாட்டாள்
49
“அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
யாண ரூரநின் பாண்மகன்
யார்நலஞ் சிதையப் பொய்க்குமோ வினியே”
துறை: தலைவன் பாணன் வாயிலாக பரத்தையோடு கூடினானென்பது கேட்ட தலைமகள் பாணனுக்கும் சொல்லியது.
விளக்கம்: அழகிய சிலவாகிய ஒதியை உடைய அசைந்த நடையை உடைய பாண்மகள் சில மீனைக் கொடுத்து பல நெல்லைப் பெறும் அழகிய ஊரனே! நினது பாணன் இனி எவரிடத்தினது அழகு கெடும் வண்ணம் பொய்த்து விடுவானோ?
50
“துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சியோங்கிய யாண ரூர
தஞ்ச மருளாய் நீயேநின்
னெஞ்சம் பெற்ற விவளுமா ரழுமே”
துறை: மனையிலிருந்து நீங்கி பரத்தையிடம் பன்னாள் அடங்கி வந்த தலைவனுக்கு தோழி கூறியது.
விளக்கம்: வஞ்சி மரம் செரிந்த அழகிய ஊரனே! துணையோர் செல்வமும் யாங்களும் வருந்துகின்றோம்; நின் மார்பை தன் பற்றுக் கோடாக பெற்ற இவளும் அதை பெறாமையால் அழுகின்றாள். நீயே அவற்றுக்கெல்லாம் காரணம் ஆகையால் அவற்றை மீண்டும் பெற அருள்வாயாக.
– மா கோமகன்