ஐங்குறுநூறு பகுதி 6
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 6
மருதத்திணை
05 தோழி கூற்று பத்து
51
“நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅ மூர
புளிக்காய் வேட்கை தன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே”
துறை: மனை விட்டு நீங்கி புறத்தொழுக்கம் ஒழுகி மீண்டும் வாயில் வேண்டும் தலைவனுக்கு தோழி கூறியது.
விளக்கம்: நீரினிடத்தில் தங்கும் கோழி, சேவலின் கூரிய நகத்தை உடைய பேடையானது நினைந்து தனது வேட்கை நோய் தீரும் ஊரனே! நினது விரிந்த மார்பு இவள் வேட்கை நோய்க்கு புளியங்காயின் தன்மையாயிருக்கும்.
52
“வயலைச் செங்கொடி பிணைய றைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைகட்
செவ்வாய் குறுமக ளினைய
வெவ்வாய் முன்னின்று மகிழ்நநின் றேரே”
துறை: பரத்தை மனையில் பலநாள் தங்கி மீண்டு வந்த தலைவனிடம் தோழி நகையாடி கூறியது.
விளக்கம்: பசலையது சிவந்த கொடியாலான மாலையை தொடுத்தலால் சிவந்த விரல்கள் மிகவும் சிவப்படைந்த வரிகளையுடைய சிவந்ததான சிறிய இப்பெண் பெண் வருந்த எந்த வாயின் முன்னர் நின்றது மகிழ்ந! நினது தேரானது?
53
“துறையெவ னணங்கு யாமுற்ற நோயே
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன வூர நீயுற்ற சூளே”
துறை: தலைவியுடன் புனலாடிய போது பரத்தை நினைவு வர தலைவன் வினாவியதற்கு தோழி சொல்லியது.
விளக்கம்: காவலை அழித்து செல்லும் புதுப்புனல் பாய்ந்து கலங்கி காட்டுத் தாமரை மலரும் நிலத்தை உடைய ஊரனே! துறைதான் எவ்வாறாயினும் வருந்துவதில்லை. பின்னை யாமுற்ற நோய் யாது எனில் நீ பிறரோடு ஆடேன் என்று கூறிய வார்த்தையால் உண்டானது.
54
“திண்டேர்த் தென்னவ னன்னாட் டுள்ளதை
வேனி லாயினுந் தண்புன லொழுகுந்
தேனூ ரன்னவிவ டெரிவளை நெகிழ
வூரி னூரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்
கஞ்சுவ லம்ம வம்முறை வரினே”
துறை: வாயில் வேண்டி வந்த தலைவனுக்கு தலைவி குறிப்பறிந்த தோழி அவன் கொடுமை கூறி வாயில் மறுத்தது.
விளக்கம்: வலிய தேரினையுடைய பாண்டியனின் நல்ல நாட்டின் கண் வேனிற் காலம் ஆயினும் குளிர்ந்த நீரை சொரிய நிற்கும் தேனூரை ஒத்த இவளுடைய ஆராய்ந்து அணிந்த வளையல் கழலச் சென்ற ஊரானாக உள்ளாய், நின்னால் கொடுக்கப்பட்ட தண்டான் கோரையாலாகிய மாலையை உடைய மகளிருக்கு பயப்படுவேன் நீ அவர்களுக்கு செய்த முறையோடு
இவ்விடத்திற்கு வருவதாக இருப்பதானால்.
55
“கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றுந்
தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவ
ணல்லணி நயந்துநீ துறத்தலிற்
பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே”
துறை: புறதொழுக்கம் ஒழுகி தலைவியுடன் சேர வந்து தன் மெலிவு கூறிய தலைவனுக்கு தோழி நெருக்கிச் சொல்லியது.
விளக்கம்: கரும்பை நெரிக்கும் ஆலையானது யானைக்கு எதிராக பிளிற்றுகின்ற தேர் வளத்தையுடைய பாண்டியது தேனூரை ஒத்த இவளது நல்ல அழகை நீ விரும்பி பின் துறந்ததால் பலருமறிய பசந்தது இவள் நுதல்.
56
“பகல்கொள் விளக்கோ டிராநா ளறியா
வெல்போர்ச் சோழ னாமூ ரன்னவிவ
ணலம்பெறு சுடர்நுத றேம்ப
வெவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே”
துறை: தலைவனது புறத்தொழுக்கம் அறிந்து தலைவி மெலிய ‘அஃதில்லை’ என தன்னேயே தேற்றுந் தலைவிக்கு தோழி சொல்லியது.
விளக்கம்: ஒளி பொருந்திய விளக்கோடு இரவை அறியாத பகைவரை வெல்லுகின்ற போரையுடைய சோழனது ஆமுரை ஒத்த இவள் இன்பம் பெறுவதற்கு ஏதுவாகிய ஒளியை உடைய நுதல் வாட, நீ தெளித்த சொல்லானது யாதோர் பயனையும் செய்யமாட்டாது.
57
“பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயி
னாம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன
விவணலம் புலம்பப் பிரிய
வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே”
துறை: தலைவனுக்கு புறத்தொழுக்கம் உண்டாயிற்று எனக் கேள்விப்பட்ட தோழி அவனை வினாவியது
விளக்கம்: பகல் போல விளங்கும் பல ஒளியை உடைய தீயினையும் ஆம்பல் பொருந்திய வயலை உடைய தேனூரை ஒத்த இவளுடைய அழகு கெடும்படியாக நீ பிரிய அத்தன்மையாகிய அழகை உடையவளோ மகிழ்நனே! நினது பெண்ணானவள் (உனக்கு சொந்தமானவள்)
58
“விண்டு வன்ன வெண்ணெற் போர்விற்
கைவண் விராஅ னிருப்பை யன்ன
விவளணங் குற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே”
துறை: தலைவியின் ஊடல் தீர்ந்த பின்னும் வாரது ஊடல் கொண்ட தலைவனுக்கு தோழி கூறியது
விளக்கம்: மலையை ஒத்த வெண் நெற் போரையுடைய கொடைத் தொழிலால் சிறப்புற்ற விரான் என்பவனது இருப்பை என்னும் ஊரை ஒத்த இவளை துன்பமடைய செய்தவனை போல் ஆகின்றாய். நீ பிறருக்கும் அவ்வாறு தன்மை உடையவனாக வாழ்வாயாக.
59
“கேட்டிசின் வாழியோ மகழ்ந வாற்றுற
மைய னெஞ்சிற் கெவ்வந் தீர
நினக்குமருந் தாகிய யானினி
யிவட்கு மருந்தன்மை நோமென் னெஞ்சே”
துறை: தலைவி வருந்திய வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைவன் புறத்தொழுக்கம் கொள்கிறான் என அறிந்த தோழி சொல்லியது.
விளக்கம்: கேட்பாய் மகிழ்நனே! உன் மயக்கம் பொருந்திய மனதிற்கு வருத்தம் தீர மருத்தாய் இருந்த நான் இப்பொழுது இவளது மனதின் நோயை ஆற்றுவதற்கு மருந்து இல்லாமையால் என் மனம் வருந்துகின்றது.
60
“பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லொன்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிய டந்தைகை வேலே”
துறை: அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தலைவன் பகலில் வராது இரவுக்குறி வந்தபோது தோழி தலைவனுக்கு சொல்லியது
விளக்கம்: வயலிலுள்ள சம்பங்கோழிச் சேவலானது ஒருவித ஒலியால் தனது பெடையை அழைக்கும் கழனி ஊரனே! நினக்கு ஒன்றனைக் கூறுவேன். எந்நாளும் மனையிலுள்ளோர் நித்திரை செய்யும் காலத்தில் வருகிறாய். இவளது தந்தையின் வேளுக்கு அஞ்சாயோ! யாம் அஞ்சுகிறோம்.
– மா கோமகன்