அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam

ammavin kangal puthaga vimarsanam

கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை பார்த்ததுமே எனக்கு ஒரு ஈர்ப்பு.

புத்தகத்தின் அட்டைப்படத்தில் அன்னை ஒருவரின் முகம் தென்படுகிறது. அது கவிஞரின் அன்னையாகத்தான் இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

கவிஞர் தாமரைச்செல்வன் அவர்கள் தன் துணைவி திருமதி.சாந்திக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளார். மேலும் மனதில் நின்ற மதுரக் கவிஞர் என்று அணிந்துரையை அணிகலன்களாய் தந்துள்ளார் கு.மா.பா.கபிலன் அவர்கள்.

புத்தகம் எல்லைச்சாமி என்ற தலைப்பில் தொடங்கி புனிதப் பயணம் என்ற கவிதையோடு முற்று பெறுகிறது. கிட்டத்தட்ட 80 கவிதைகள் இருக்கும். அனைத்துமே நீள் கவிதைகள்.

இயற்கை, கேள்வி, நீதி, சமூகப்பொறுப்பு, நம் பார்வை எனக் கவிதைகள் பரவிய தொகுப்பாகவே இத்தொகுப்பை நான் காண்கிறேன். ஒரே மேடையில் வெளியிட்ட இரு தொகுப்பில் இது இரண்டாம் தொகுப்பு என்பதை நான் அறிவேன்.

கவிஞரின் சொல்வளம்,சொல்நயம் கவிதைகளின் அணிகலன்களாய் இங்கே மினுமினுக்கிறது . அதில் அடியேன் ரசித்த சில கவிதைகளை இங்கே பதிவிட்டு உங்களையும் வாசிக்க வைக்கலாம் என விரும்புகிறேன்.

எல்லைச்சாமி கவிதையில்

“உள்ளிருக்கும் நாதனை
வெள்ளந்தி மக்கள்
நம்பிக்கை கண்கொண்டு
நட்ட கல்லில் காண்கிறார்

ஊரோரக்குட்டை
குட்டையோரம் சில மரங்கள்

அதிலோர் மரத்தனடி
எங்களூர் எல்லைச்சாமி”

எனக் கவிஞர் எல்லைச்சாமியை சொல்லும்போது எனக்கு பங்குனி உத்திரம் குலதெய்வங்கள் கண்முன்னே வந்து சென்றன.

அர்த்தநாரிகளை வாசிக்கும் போது
கண்கள் கண்ணீரை கொட்டித் தீர்த்தன …

“வாழ்வது வரம் எனில்
பிறந்தது சாபம்
பிறந்தது வரமெனில்
வாழ்தல் பாவம்”

என்ன அற்புதமான வரிகள்…

கலையாத மௌனம்

என்ற தலைப்பின்கீழ் எழுதிய கவிதை கவிதையே அல்ல.. கவிதைச்சிறுகதை…
கவிதைச் சிறுகதையின் நடுவே

“உடலெல்லாம் காயங்கள்
உள்காயம் வெளிக்காயம்
உள்ளுறுப்பும் வன்புணர்வால்”

என சொல்லிவிட்டு

“பாஞ்சாலி என்றால் மட்டுந்தான்
பகவான் வருவாரோ”
என கேள்வி கேட்டு

கள்ள மௌனம் கலைந்தெழு மனிதமே…

எனக் கவிஞர் கவிதையை முடிக்கும்போது கண்ணீரோடு எழுகிறது மனமும் மௌனமும்…

நக்கணும் நாகம் கவிதையில்

“ஆணும் பெண்ணுமாய்
நீலகண்டர்கள்

அவரவர் அளவில்
விடத்தின் அளவும்

நாக்கே நாகமாய்
நாகமே நாக்காய்”

என உண்மையை கவிஞர் உரக்கச் சொல்கிறார்.

கலாபமயிலை அவர் அழகாய் எழுதுகிறார்.

“தோகை விரித்தாடல்
ஆனந்தக் களிப்பா
ஒவ்வாமைச் சிலிர்ப்பா

எதுவாயின் என்ன
கண்களுக்கு களிப்பு “

என யதார்த்தம் சொல்லும்போது
கவிஞர் மனதில் நிலைக்கிறார்.

கோபமும் அழகு என்பதை

“பாலது பொங்கிடின்
பாத்திரம் தாண்டிடும்

கோபம் தங்கிடின்
விடமென தீண்டிடும்”

“சமூகஅவலம்
கண்முன் காண்கின்
கோபம் கொள்க

பாரதி பாட்டனின்
ரௌத்ரம் பழகு

கோபமும் அழகு”

என நியாயமான கோபமும் அழகு என்கிறார்.கோபப்படவும் சொல்கிறார்.

அந்த காலம் போல் வருமா என்ற கவிதையில்

பிறர்மனை கவர்ந்தனன்
பிறந்தது காதை
இராமகாதை…

அண்ணன் மனைவியின்
ஆடைதொட்டு
அரங்குநிறை பெரியோர்
அனைவரின் முன்னும்
தம்பி இழுத்தனன்
பாரதம் முகிழ்த்தது…

தனிநபர் கொள்ளை
தண்டனைக்குரியது
மன்னர்கள் செய்யின்
மதிப்பிற்குரியது

ஆனாலும்
எல்லோரும் சொல்கிறார்
அந்த காலம் போல் வருமா”

எனக்கேள்வி கேட்டு நம்மையும் சிந்திக்க வைக்கிறார். சிலிர்க்கவும் வைக்கிறார் கவிஞர் கி. தாமரைச்செல்வன்.

அம்மாவின் கண்களை நேசித்த அவருக்கு
அம்மாவின் கண்களும் வரமாய் கவிதையாய்…

“உயிர் இழைந்த அந்நாளில்
கண்மூடிக்கிடந்த அன்னை
உயிரிழந்த இந்நாளில்
அரைக்கண் திறந்தபடி

அவன் கண்கள் கரைந்தொழுக
அவள் கண்கள்
பேசாதனவெல்லாம் பேசின”

இந்த அற்புத வரிகளால் அம்மாவின் கண்களில் நீங்களும் உங்களின் கண்களில் அம்மாவும் நிறைகிறீர்கள்..நிலைக்கிறீர்கள்.

இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு சோகத்தையும், ஒரு நெகிழ்வினையும், ஒரு நினைவினையும், ஒரு யதார்த்தத்தையும், ஒரு கேள்வியினையும் கேட்பதாக அமைந்துள்ளது.

நல்ல கவிதைகளின் தொகுப்பு என்பதைவிட நல்ல நல்ல கவிதைகளின் தொகுப்பு இது என்பதை உள்ளுணர்வோடு சொல்லிக்கொள்கிறேன்.

ஒரு கவிதை படித்து முடித்தவுடன் ஏதோ ஒரு தாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்தினால் அது சிறந்த கவிதையாகிறது. இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே ஏதோ ஒரு தாக்கத்தை மனதுள் உண்டு செய்துவிட்டது.

கவிஞர் தாமரை செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிஞரின் தொலைநோக்குப் பார்வையாகவே அமைந்துள்ளது – ammavin kangal puthaga vimarsanam.

எல்லாம் அருமையாக வந்திருக்கும் இத்தொகுப்பில் என்னுரை என்பதை காணோமே என்று தேடிப் பார்த்து முடிக்கையில் பின்அட்டைப்படத்தில் கவிஞரின் புகைப்படமும் சில வார்த்தைகளும் அமைந்திருந்தது.

அது என்னுரை என்னும் பகுதியாக அமைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து.

தோழரே தொடரட்டும்
உங்கள் கவிப்பயணம்..
திக்கெட்டும் புகழ் பரவட்டும்…

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    விமர்சனம் அருமை. நூலின் பெருமையை எடுத்துரைத்தது கவிஞரின் விமர்சனம் .நட்ட கல்லில் நாதனை காணும் வெள்ளந்தி மக்கள் ..மனதில் நின்ற வரிகள். படிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்.நூலாசிரியருக்கு விமர்சன ஆசிரியருக்கும் வாழ்த்துக்களும் ..பாராட்டுக்களும் ..