அணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை
அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் அணிலாடும் முன்றில் வரிகளை வாசிக்கும் போதே தமிழை அள்ளிக்கொடுத்து நுகரக் கொடுத்தாற்போல உணர்வு நமக்கு – anilaadum mundril puthaga vimarsanam
தந்தை மகனுக்கு இப்படியொரு படைப்பை சிறப்பாக தந்தது பெரும் சிறப்பு. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப் பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என்று குடும்ப உறவுகள்.. இரத்த பந்தங்கள் குறித்தான நினைவுத் தடங்களை உரசிப் பார்க்கும் வரிகளில் கொள்ளை கொள்ளுகிறது.
வாசிப்பின் போது பிடித்த வரிகளுக்கு அடிக்கோடு இழுப்பதற்கான காரணத்தை…
“எங்கோ இருக்கும்
இதையெழிய எழுத்தாளனுக்கு…
நான் இங்கிருந்தே
கை குலுக்குகிறேன்”
என்று தன் தந்தை சொல்லியதாகக் கூறும் வரிகளில் அந்தத் தந்தையோடு கை குலுக்கத் தவறவில்லை நமது கைகள்.
தமிழாசிரியராக சொற்ப சம்பளத்திலும் கூட, வீடு நிறைய புத்தகம் சேகரிக்கும் தன் அப்பாவின் இயல்புகளை அருமையாக கூறும் வரிகளில்
“என் அப்பா
ஒரு மூட்டை புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார்”
வரிகளாக எடுத்துரைக்கிறார்….
கல்லூரி காலத்தில் வகுப்பைப் புறக்கணித்து விட்டு நண்பர்களோடு “அவளோட ராவுகள்” சென்று வந்ததைக் கவனித்தும் அது பற்றி எதுவுமே கேட்காமல் அடுத்த நாள் எப்போதும் கைச் செலவுக்குத் தரும் 5 ரூபாயை 10 ரூபாயாக்கி “சினிமா கினிமா பாக்கத் தேவைப்படும்” என்று திணித்ததைப் பகிரும் வரிகளில் அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான புரிதலின் ஆழம் தட்டுப்பட்டு நெகிழ்த்துகிறது.
” நீங்கள் பிடித்துக்
கொண்டிருப்பதாக நினைத்து
சைக்கிள் ஓட்டியது போலத்தான்
இப்போதும்…
நீங்கள் பிடித்துக் கொண்டிருப்பதாக
நினைத்தே ஓட்டிக்கொண்டிருக்கிறேன்”
விடாது பற்றிக் கொண்டிருக்கும் அப்பாவின் நினைவுத் துளிகளை இப்படி முடித்து… அவரவரின் அப்பாவையும் நினைவில் நிறைத்து நெகிழ்வில் ஆழ்த்துகிறார் முத்துக்குமார். மேலும் அக்கா, ஆயா, தாய்மாமன், மனைவி என பல கவிதைகளில் நம்மை கட்டிபோடுகிறார்.
மகனே
” மகனே! ஓ மகனே!
என் வித்திட்ட விதையே!
செடியே! மரமே! காடே!
மறுபிறப்பே!
மரண செளகர்யமே! வாழ்!…
கமல்ஹாசனின் வரிகளை மேற்கோளிட்டு தன் மகனுக்கான கடிதத்தை… அன்புள்ள மகனுக்கு என்று தொடங்குகிறார்.
” என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சி கொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான். கற்றுப் பார்.. உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப் பார்.
கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச் செய். உறவுகளிடம் நெருங்கியும் விலகியும் இரு, எங்கும் எதிலும் எப்போதும் அன்பாய் இரு. உன் பேரன்பினால் இப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டேயிரு.அன்பை விட உயர்ந்தது என்று இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை – anilaadum mundril puthaga vimarsanam.
உன்னில் என் தகப்பனைக் கண்டேன் நான். நாளைக்கும் நாளை… உன் மகனில் நீ என்னைக் காணலாம்.அப்போது இந்தக் கடிதத்தை படித்துப் பார். நான் தெரியலாம் உனக்கு” என்றெல்லாம் விரியும் கடிதத்தில் கிடைக்கப் பெறும் வரிகளெல்லாம்… ஒரு தகப்பன் தன் மகனுக்குத் தந்து செல்லும் மிகப்பெரிய சொத்தாக… ஆகச்சிறந்த ஊன்றுகோலாக இதுவன்றி வேறொன்றுமில்லை
என்பதை… வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் மகனும் உணர்வார்கள்.
ஒவ்வொரு உறவையும் இவர் எடுத்தாளும் விதத்தில்…
பால்யத்தின் பாதைகளில்… நாம் ஒவ்வொருவரும் கடந்ததும் இழந்ததுமென
தொலைந்துபோன அத்தனை அன்பின் முகவரிகளும் நம்
கண்முன்னே ஒரு கணம் நிழலாடிச் செல்வதை அனுபவித்து உணரலாம்.
வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்து அனுபவிக்க வேண்டிய அற்புதமானதொரு அணிலாடும் முன்றில்…
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்