ஆன்மா – சிறுகதை (கலங்கடித்த கொரோனா)

சுமை தாங்கி கதைகள் வாயிலாக நீரோடையில் கால் பதித்த அனுமாலா அவர்களின் மற்றுமொரு மனம் கவர்ந்த சிறுகதை தான் ஆன்மா.. – anma sirukathai

anma sirukathai

கட்டில் அருகே நிற்கிறார்கள்

நேற்று வரை சரியாக மூச்சு விட முடியாமல், வென்டிலேட்டருடன் படுத்திருந்த எனக்கு கண்ணைக்கூட திறக்கமுடியாமல் இருந்தது நினைவுமட்டும் தான் இருந்தது. அந்த நினைவலையில் கூட அவரை பற்றியும், என் குழந்தைகளைப் பற்றியுமே நினைவு. எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை தவிர வேறொன்றும் முடியாமல் படுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று நான் நன்றாக நடக்கிறேன். உடல் வலி குறைந்தாற்போல் இருக்கிறது. அதெப்படி? நான் நன்றாக குணமடைந்து விட்டேன் என்கிற நல்ல சேதியை உடனே அவரிடம் சொல்லவேண்டும். அவர் எங்கு படுத்திருக்கிறார்? என்று பார்வதி மனதில் நினைத்துக்கொண்டார். அந்த வார்டிலிருந்து வெளியே வந்து நர்ஸுகள் இருக்கும் இடம் நோக்கி நடக்க தொடங்கினார்.

எதிரில் வருவது யார்? நர்ஸ் தேவியா? சின்னப்பெண். என்ன அழகாக முகம் சுளிக்காமல் வேலை செய்கிறாள்? அவளுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்கவேண்டும். என்று நினைத்துக்கொண்டே “தேவி” என்று கூப்பிட்ட
பார்வதிக்கு ஆச்சரியம். நான் கூப்பிடுவதை கூட லட்சியம் செய்யாமல் எங்கே அவசரமாக செல்கிறாள்? டாக்டர் வேறு வேகமாக வருகிறார்களே. யாருக்கு என்ன? என்று யோசித்தாள் பார்வதி. தான் படுத்திருந்த வார்டுக்குள் சென்ற அவர்களை பார்வதியும் பின் தொடர்ந்தாள். நான் படுத்திருந்த கட்டில் அருகே நிற்கிறார்களே, என்ன செய்கிறார்கள்? – பார்வதி

“என்னம்மா, எப்போ பார்த்தீங்க? – டாக்டர்.”

“இப்போதான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பு பார்த்தேன். பல்ஸ் இருந்தது ஆனால் ரொம்ப மைல்டு ஆக இருந்தது. இப்போ திடீர்னு…..நான் ரிவைவ் பண்ண முயற்சி செய்தேன். முடியலை. உடனே உங்களை கூப்பிட வந்தேன் ” என்றாள் நர்ஸ் தேவி. டாக்டரும் பார்வதியின் பல்ஸ் பார்த்தார். வைக்கப்பட்டிருந்த வெண்டிலெட்டரில் ரீடிங் ஒரு கோடு மாத்திரம் சென்று கொண்டிருந்தது. டாக்டர் செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி அம்மாளுக்கு ஒரே ஆச்சரியம். தான் அங்கு கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தார்.

இருவரும் இறந்துவிட்டனர்

பார்வதியம்மாளுக்கு அப்பொழுதுதான் நிலைமை புரிந்தது. அவருக்கு அழவேண்டும் போல இருந்தது. அதே ஆஸ்பத்திரியில் இருந்த தன் கணவனை தேடிச்சென்றார். அவர் எங்கேயும் இல்லை. வெளி நாட்டில் இருக்கும் தன
மகனையும் மகளையும் நினைத்து வருந்தினார். திரும்பவும் தான் படுத்திருந்த கட்டில் அருகே வந்தார். அங்கே, “இவர்களுடைய உறவினர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்தி விடுங்கள்’ என்று கூறிக்கொண்டே டாக்டர் வெளியே சென்றார் – anma sirukathai.

உடனே நர்ஸ் தேவியும் தன் இருப்பிடம் நோக்கி வேகமாக சென்றாள். அங்கே அவள் தனது சக ஊழியர்களிடம் “ஐந்தாம் எண் படுக்கையில் இருந்த பார்வதி அம்மாவும் இறந்துட்டாங்க. நேற்றைக்குத்தான் அவங்க கணவர் ஐ. சி. யூவில் இறந்தார். அந்த விஷயத்தை கூட அந்த அம்மாவிடம் சொல்லவில்லை. சொல்லும் நிலையில் அவங்க இல்லை. அதற்குள் இப்படி” என்று கூறிக்கொண்டே பார்வதியின் பைலை எடுத்து அதில் இருந்த பெயர்களையும், போன் நம்பர்களையும் ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டாள்.

யாருக்கு போன் செய்கிறாள்? – என்று நினைத்துக்கொண்டார் பார்வதி. தேவி போனில் பேசியதைக்கேட்டார்.

கோவிட்-19 (உடலை தரமாட்டோம்)

“மிஸ்ஸஸ். சொர்ணாம்பாள் அவர்களா? ஆஸ்பத்திரியிலிருந்து நர்ஸ் தேவி பேசுகிறேன். ஒரு துக்க செய்தி. உங்க அக்கா பார்வதி இப்போ ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பு இறந்து விட்டார்கள். நீங்க அப்புறமா வந்து அவர்களுடைய உடைமைகளை வாங்கிக்கொண்டு விடுங்கள்” – தேவி. எதிர் முனையில் என்ன கேட்டார்களோ அதற்கு தேவி மீண்டும் &”அவங்க இருவரது உடல்களையும் கொடுக்க மாட்டோம். அவங்க இறந்தது கோவிட்-19 என்பதால், அரசு உத்தரவுப்படி நாங்களே நல்லடக்கம் செய்து விடுவோம். நீங்க ஏதாவது பேச விரும்பினால், நேரில் வந்து எங்க டாக்டரோட பேசுங்க” – தேவி.

மகன் கையால் கொள்ளி கூட கிடையாது

இந்த போன் உரையாடலை கேட்ட பார்வதிக்கு மேலும் வருத்தமாயிற்று. பிள்ளைகள் இருவரும் வெளி நாட்டில். அவரும் என்னை விட்டு இறந்து விட்டார். அதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத பாவியாகிவிட்டேன் நான். எங்கள்
இருவருக்கும் மகன் கையால் கொள்ளி கூட கிடையாது. என்ன கொடுமை? சொர்ணா அன்னிக்கே சொன்னாள் – இரண்டு பேரையும் வெளி நாட்டுக்கு அனுப்பாதேடி என்று. நாந்தான் கேட்கலை. பசங்களை நல்லா படிக்க
வைக்கிறோம். அவங்க இஷ்டத்துக்கு படிக்கிறப்போ அவங்க இஷடத்துக்கு வேலைக்கு போறதுல தப்பு இல்லைதான்.

பசங்களை படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவது, பின்னாலே நம்மை நல்லா பாத்துக்குங்க என்பதற்காக இல்லை பார்வதி என்று அவரும் அடிக்கடி சொல்வார்.

நாம் பெற்றோர். நமது கடமையை மட்டும்தான் நாம செய்யணும். பிரதிபலனை எதிர்பார்ப்பது தப்பு என்று சொல்வார். அதனால அவங்க வெளி நாடு போனது கூட பெரிசா தெரியலை. தினமும் ரெண்டுபேரும் பேசுவாங்க. வாட்சப் மூலம் பேசுவோம். எல்லாம் நல்லாத்தான் இருந்தது, எல்லாம் நன்றாக நடக்கும்வரை. கொரோனா வந்தது. எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு. யாருமே எதிர்பார்க்கவில்லை.

சொர்ணாவின் வீட்டில் –

“என்னம்மா ஒரு மாதிரியா இருக்கே. உடம்பு சரியில்லையா?”- கேட்டாள் சொர்ணாவின் மகள் பவித்ரா. உடனே அழத்தொடங்கினார் சொர்ணா. “அக்காவும் போயிட்டா. அவங்க ரெண்டுபேருமே போயிட்டாங்க. அவங்க பொருள் எல்லாம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு நர்ஸ் போன் செய்து சொன்னாள்”. சொர்ணா பார்வதி யின் தங்கை. அவர்களுக்கு ஒரு மகள் பவித்ரா கல்லூரியில் படிக்க, மகன் ராஜா ஒரு ஐ. டி கம்பெனியில் வேலை பார்க்கிறான்.

“நான் எப்பவும் பார்வதிகிட்டே சொல்லியிருக்கேன். ரெண்டு பசங்களையும் வெளிநாடு அனுப்பாதேன்னு. உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஓண்ணுன்னா கூட இருப்பாங்க இல்லையா ன்னு சொன்னேன். ஆனால் அவள் கேட்கலை.
ஏதேதோ சமாதானம் சொன்னாள். இன்னிக்கி இப்படி ஆயிடுச்சு.” – சொர்ணா. “அம்மா, எதெது எப்படி நடக்கணும்னு என்று இருக்கோ அதெல்லாம் அப்படித்தான் நடக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது. நீங்க அனாவசியமா
கவலைப்படாதீங்க. நீங்க எங்கேயும் போகவேண்டாம். நானும் ராஜாவும் போயி, ஆகவேண்டியதை செய்கிறோம்” – பவித்ரா. “நீங்க சரணுக்கும் லாவண்யாவுக்கும் கால் பண்ணி சொல்லி விடுங்கள். அவங்க ஊருக்கு எப்போ வரப்போறாங்க? அவங்க பிளான் என்ன அப்படீன்னு கேட்டு சொல்லுங்க”.

பெற்றோரின் அஸ்தியை

சொர்ணா, சரணுக்கும், லாவண்யாவுக்கும் போன் செய்து தகவலை தெரிவித்தாள். சரண் எப்படியாவது வருவதற்கு டிக்கெட் வாங்கிகொண்டு வருவதாகவும், அதுவரையிலும் அவனது பெற்றோரின் அஸ்தியை அவர்களது வீட்டில் வைக்குமாறும் கூறினான்.

அதன்படியே, அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு சென்ற ராஜாவும், பவித்ராவும் ஆகவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் முடித்தனர். ஆம்புலன்ஸில் இருவரது உடலையும் எலெக்ட்ரிக் மயானத்திற்கு எடுத்துச்செல்லும் பொழுது
இருவரும் கூடவே சென்றனர். சில மணி நேரங்களில் கையில் அஸ்தியுடன் வெளியே வந்தனர். “அம்மா, எல்லாம் முடிஞ்சுடுச்சு. அவர்களது அஸ்தியை நீ சொன்னபடியே பெரியம்மா வீட்டில் வைத்துவிட்டு வருகிறோம்.” – ராஜா.

தாயின் ஆன்மா

ராஜாவும் பவித்ராவும் தன் வீட்டினுள் நுழைவதைக்கண்டாள் பார்வதி. நடு வீட்டில் தங்களது அஸ்தியை வைப்பதை பார்த்து கண் கலங்கினார். தன்னுடைய பிள்ளைகள் எப்பொழுது வருவார்கள்? பார்வதிக்கு அழகான குடும்பம், சீரான வாழ்க்கை எல்லாமே சில தினங்களில் காணமல் போய், இறுதியில் யாருமே இல்லாத ஒரு அனாதையைப்போல் எல்லாம் முடிந்து போனது – anma sirukathai.

தனது பிள்ளைகளுக்காக காத்திருக்க முடிவு செய்தது பார்வதி என்கிற அந்த
தாயின் ஆன்மா.

You may also like...

4 Responses

 1. Priyaprabhu says:

  நல்ல கதை.. உண்மைகளின் நிகழ்வு..

 2. ஸ்ரீதர் says:

  காலத்துக்கு ஏற்ற கதை. அழகான நடையில் இருந்தது. வாழ்த்துக்கள். ஸ்ரீதர் புனே.

 3. தி.வள்ளி says:

  இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை..நல்ல நடை…மிக யதார்த்தமாக இருந்தது …வாழ்த்துக்கள் சகோதரி

 4. Rajakumari says:

  பரிதாபமாக இருக்கிறது