சில கீரைகளின் நன்மைகள் பற்றி

இந்திய உணவு கலாச்சாரம், மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம் பற்றி நாம் பேசும் போது அதில் கீரையை தவிர்த்திட முடியாது. ஏனெனில், நமது பாட்டிமார்கள் வைத்தியம் பார்த்ததே கீரை மற்றும் மூலிகை இலை, கொடிகளை வைத்துதான். கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான்.

benefits of greens keeraigalin nanmaigal

சில கீரையின் நன்மைகள் பற்றி ..

* வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்… தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!

* பாலக்கீரையில்  அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து… கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.

* வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.

* புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.

* கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு… உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.

* சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

* இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்

You may also like...