சிக்கன்-85 (கவிதை மற்றும் சமையல்)
பொதிகை போன்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று பல வியக்கத்தகு சமையல் செய்முறைகளை பகிர்ந்த பாரிஸா அன்சாரி அவர்களின் பதிவு – chicken 85 samaiyal.
அமிழ்தனைய,
ஆரோக்கிய,
இனிய பதார்த்தம்.
கண் முன்னே கண்டிடும்,
வண்ண மிகு இப்பண்டம்,
காரணப் பெயர் தரித்த
காரணம் காணீர்!
உணவு உண்ண மறுத்து என் பெண்மகவு, மன இன்னல் தந்த நேரமது!
இவ்வுணவின், இனிய வண்ணத்தினால் ,
ஈர்க்கப்பட்டு , கையிலெடுத்து
வாயில் போட்டு விட்ட, என்
சேயின் முகம், திங்கள் பிம்பமானது! மன இறுக்கம் நீங்கியது!
இன்பக்கிறக்கத்தில் நாங்கள்! இது நடந்தது 1985 ஆம் ஆண்டு.
இவ் வுணவின் பெயரே,அதற்குச்சான்று!
யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக!
தேவையான பொருட்கள்
1) எலும்பு இல்லா கோழிக்கறி (சதுரமாக வெட்டியது)-400.கிராம்.
2) மககாச்சோள மாவு – 3 மேஜைக்கரண்டி.
3) இஞ்சி-பூண்டு கலவை-1 மேஜைக்கரண்டி
4) காஷ்மீர் மிளகாய்த்தூள்-1 மேஜைக்கரண்டி.
5) சீரகப்பொடி -1 தேக்கரண்டி.
6) மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.
7) உப்பு -ருசிக்கேற்ப
8) மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி.
9) எலுமிச்சை சாறு-3 மேஜைக்கரண்டி
10) தயிர்(கெட்டியானது)-1 தேக்கரண்டி.
11) கறிவேப்பிலை-3 மேஜைக்கரண்டி.
12) பச்சை மிளகாய்-2.
13) பொரிப்பதற்கு த்தேவையான எண்ணெய்.
14) கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
15) வெங்காயத்தாள்-2 மேஜைக்கரண்டி.
வண்ணத்துக்கு , காஷ்மீர் மிளகாய் போதுமானது- இரசாயனம் கலந்த கேசரி பவுடர், தேவையில்லை.
செய்முறை
ஒரு பாத்திரத்தில்,கோழித்துண்டுகள்,இஞ்சி பூண்டு கலவை, உப்பு, தயிர், எலுமிச்சைச்சாறு, பொடி வகைகள் எல்லாவற்றையும் நன்கு கலந்து, 3 மணி நேரம் ஊற வைக்கவும் – chicken 85 samaiyal.
கடாயை அடுப்பில் ஏற்றி,சூடானவுடன்,எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன், ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப்போட்டு பொரித்து எடுக்கவும்.
அதே கடாயில், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி,சூடானவுடன் ,கீறிய பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு,வாசம் வரும் வரை வதக்கவும். பின்னர், பொரித்தெடுத்த கோழித்துண்டுகளைப் போட்டு நன்றாகக்கலக்கவும்
வெங்காயத்தாளை நறுக்கிப்போட்டு , அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்பு: மக்காச்சோள மாவு க்குப்பதில்,கோதுமை மாவு உபயோகிக்கலாம்
பச்சை மிளகாய் பொடியாகவும் நறுக்கிச்சேர்க்கலாம்.ஆனால்,அது,குழந்தைகள் சாப்பிடுவதற்கு ,கிரமமாக இருக்கும்.
இவ்வுணவைக் கொறித்திட்டு
இன்னா தரும் சோம்பலை , தறி கெட்டு ஒடச்செய்திடலாம்.
பெருஞ்சிற்றுண்டி(ஹைடீ) தன்னில்,
“திரு”வாக,நின்றருள் புரிந்திடுவாள்.
விருந்தோம்பல் அறம் பேண,
அரு மருந்து இக்கறி!
வயிறாற உண்டிடுவார்,
வாயாற வாழ்த்திடுவார்-விருந்தினர்!!
புரதச்சத்து மிக்க இக்கோழி,
” கொரானா”காலத்து உயிர் காக்கும் தோழி.
சிகிச்சை பெறுவோர்,இதை,அதி
இச்சையுடன் உண்பது காணீர்!
செவிக்கு உணவு இருந்த போழ்தும்,பெரிதும்,
இவ்வணவு வயிற்றுக்கும் ஈயப்படட்டும்!
சிகிச்சை பெறுவோர்,இதை,அதி
இச்சையுடன் உண்பது காணீர்!
செவிக்கு உணவு இருந்த போழ்தும்,பெரிதும்,
இவ்வணவு வயிற்றுக்கும் ஈயப்படட்டும்!
– பாரிஸா அன்சாரி.
இது சளியை கட்டுப்படுத்தும்
மிக்க மகழ்ச்சி… இஃதொரு புதுமுயற்சி…
கவியுணவு திகட்டா சத்துணவு…
கடித்துப் பழக்கமில்லையெனினும் கவிதையை ருசித்துப் பழக்கமுண்டு சகோதரி…இரட்டை இலை விருந்து படைத்துவிட்டீர்கள்.
அருமை அருமை. குழந்தைகள் விரும்பும்
உணவு. கவிதை வரிகள் உணவை விட
அருமை.