ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 3
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3
பாடல் – 11
“மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!
அஞ்ஞான மார்க்கத்தை தூறு – உன்னை
அண்டினோர்க்கு ஆனந்த மாம்வழி கூறு”
விளக்கம்
மனமே! மெய்யறிவு என்னும் பேரொளிப் பாதையிலே முன்னேறிச் செல்க! அங்கே தூய மறை முடிவான கொள்கையென்னும் ஒளிமயமான வெட்டவெளியாம் கடவுளைப் பற்றிக் கொண்டு தெளிவு அடைக! அறஅயாமையாம் இருளைக் காட்டும் தீய வழியைக் குழியிட்டுப் புதைத்து விடுக. உன்னை விரும்பி அடைந்தவர்க்கு இன்பம் பெறுகிற பெரிய வழியை கூறுக!
பாடல் – 12
“மெய்குரு சொற்கட வாதே – நன்மை
மென்மேலும் செய்கை மிகஅடக் காதே;
பொய்க்கலை யால்நட வாதே – நல்ல
புத்தியை பொய்வழி தனில்நடத் தாதே!”
விளக்கம்
மனிதா! உன் நல்லொழுக்கத்தை நீயே கவனி! உலக உன்மை ஒளியை உனக்கு எடுத்துரைக்கும் ஒளிகுருவான ஆசானின் கட்டளையை தலைமேற் கொண்டு நடந்து கொள்க! உலக மக்களுக்கு விளையும் நன்மையை நீ மேலும் மேலும் செய்து கொண்டே இரு! குறைக்காதே! கற்பனையான பொய்களைப் பயன்படுத்திக் கடவுளின் பெயரால் யாரையும் ஏமாற்றிக் கெடுக்காதே. தூய நல்ல அறிவை பொய்வழிக்கு மாற்றி மக்களை கெடுத்து விடக்கூடாது என்பதையும் உணர்ந்து கொள்.
பாடல் – 13
“கூட வருவதொன்று இல்லை – புழுக்
கூடெடுத்து இங்கண் உலவுதே தொல்லை
தேடரு மோட்சமது எல்லை – அதைத்
தேடும் வழியைத் தெளிவோரும் இல்லை”
விளக்கம்
மனிதா! இந்த உடம்பாகிய புழு பற்றக் கூடிய கூட்டையே பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாய்; இதுவே மிகக் கடினம்! நீ சாகும்போது உன்னோடு வருகின்ற உயிரோ, உறவோ, பொருளோ எதுவுமே இல்லை என்பதை உணர்வாயாக. இந்த வாழ்வில் நீ தேடிப் பெறுகின்ற பேரின்பம் (பிறவி விடுதலை) வீட்டின்பமே முடிவானதாகும். இருப்பினும் அவ்வின்பத்தை எப்படித் தேடிப் பெறுவது? என்பதை இன்னும் பலர் தெளியாமல் இருக்கின்றனரே; நீ அதை தெளிவாயாக!
பாடல் – 14
“ஐந்துபேர் சூழ்ந்திடும் காடு – இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முத்தி வருந்திநீ தேடு – அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு!”
விளக்கம்
மனிதா! உன் உடம்பானது மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் அறிவுப் பொறிகள் ஐத்தைப் பெற்றுள்ள ஒரு காடாகும். இந்த ஐந்து பேருக்கும் ஊறு, சுவை, ஒளி, மணம், ஓசை ஆகிய ஐந்து அறிவுகள் உண்டு; இவையே வாழும் ஒரு நாடாகும். இந்த காட்டிலும் நாட்டிலும் வாழ்கின்ற நீ வருந்தியே வாழ்கின்றாய். இங்கே நீ இறக்கும் முன்பாகவே, கடவுளைத் தேடுவாயாக! அந்த முதல்வனான கடவுளை நீ அறிந்து கொண்டாலே விடுதலையாகி முத்தியை பெற்று வீடுபேற்றை அடைவாய்! அதுவே பேரின்பம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3.
பாடல் – 15
“உள்ளாக நால்வகை கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை – வெட்டிக்
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை”
விளக்கம்
மனிதா! உன் உள்ளத்துக்குள்ளே மனம், அறிவு, எண்ணம், செருக்கு என்னும் நான்கு வகையான கோட்டைச் சுவர் உண்டு. அங்கே காமம், வெகுளி, மயக்கம், ஆசை ஆகிய பகைவர்கள் ஒழிந்திருப்பார்கள். அவர்களைக் கண்டு பிடித்து ஒழித்துவிட்டால் உயிரானது தூய்மையோடும் உரிய பண்போடும் வாழ்வாகிய நாட்டை ஆளலாம் அந்த உள்ளமாகிய கோட்டையைச் சார்ந்த வெளியில் கள்ளம், சூது முதலான களைகள் மண்டியுள்ளன. இவற்றையெல்லாம் வெட்டி நல்லறிவென்னும் தீயிட்டு எரித்து விட்டால் இறைவனது பேரின்ப வீட்டைக் காணலாம்.
– கோமகன், சென்னை
சித்தர்கள் ..அவர்கள் பாடிய பாடல்கள்… கவிஞருடைய பாடல் விளக்கம் …அனைத்தும் அருமை… மனதிற்கு நிறைவான பகுதி