ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 5
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam5
பாடல் – 21
“ஆற்றரும் வீடேற்றம் கண்டு – அதற்கு
ஆன. வழியை அறிந்துநீ கொண்டு
சீற்றமி ல்லாமலே தொண்டு – ஆதி
சிவனுக்கு செய்திடில் சேர்ந்திடும் கொண்டு”
விளக்கம்
மனிதா! நீ பெறுதற்கரிய பேரின்ப வீட்டைப் பெற வேண்டும். அதற்கான சிவநெறியை அடைய உரிய வழியை ஆராய்ந்து காண வேண்டும். இந்த ஆர்வத்திலே நீ வெறுப்பில்லாமல் முதல்வனான சிவனுக்குரிய தொண்டை செய்தால், அக்கடவுள் உன்னோடு உறவு கொள்வான்
பாடல் – 22
“ஆன்மாவால் ஆடிடும் ஆட்டம் தேசத்து
ஆன்மா அற்றபோதே ஆமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் நாளும்
வையில் உனக்கு வருமே கொண்டாட்டம்”
விளக்கம்
மனிதா! இருக்கும் போதே உண்மையை அறிந்து கொள்க. உலகில் நீ வாழ்கின்ற ஆட்டமெல்லாம் ஆன்மாவாகிய உயிரால் தான்! இந்த உயிரோ உடலை விட்டு ஒருநாள் சென்ற போது உடம்பு வாடி வதங்கி பிணமென்ற பெயரைப் பெற்றுவிடும். எனவே இந்த உயிர் வான் வழியே எப்படி செல்லுமென்பதை நீ அறிந்து, இப்போதே பார்த்து தெளிக! நீ பிறரை வையும் போதெல்லாம் நாளும் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால் இது போலி மகிழ்ச்சி யாகும்!
உண்மையன்று.
பாடல் – 23
“எட்டும் இரண்டையும் ஓர்ந்து – மறை
யெல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து ஆனந்த
வெள்ளதின் மூழ்கி மிகுகளி கூர்ந்து”
விளக்கம்
மனிதா! கடவுளைத் தெளிவாய்! தமிழில் எண் என்று சொல்லப்படும் ‘அகரம்’ எட்டு ஆகும். இது ஒளி எழுத்தாய் கடவுளை உணர்த்தும். இரண்டு எனப்படும் ‘உகரம்’ உயிரனைத்தையும் குறிக்கும். இவ்வாறு உலகையே இருவகையாக உள்ளத்தில் ஒருவன் ஆராய்ந்து உணர வேண்டும். இப்படி உணரும்போதே மறை நூல்களின் உட்பொருளாகிய கடவுள் ஒன்றே என்றும், உயிரனைத்தும் ஒன்றே என்றும் உண்மை பிறக்கும்! இதன் முடிவில் கடவுள் ஒளிவெள்ளமாய் வெட்ட வெளியாய்த் தெரிவான் அப்போது நீ அவனைச் சார்ந்து, இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பாய்! இதுவே கடவுளைப் பற்றிய பட்டறிவாகும்.
பாடல் – 24
“இந்த உலகமும் உள்ளும் – சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளும் தள்ளு!
செந்தேன் வெள்ளமதை மொள்ளு – உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவும் கொள்ளு”
விளக்கம்
மனித மனமே! இந்த உலகத்தில் காணும் பொருள்கள் மேல் ஆசை வைக்கக் கூடாது. அதை எந்த நாளும் புறந்தள்ளி விடுக! இப்பொருள்களை விட்ட பின்னே, சிவந்த தேன் போன்ற சிவச்செம் பொருளான இன்ப வெள்ளத்தை நெஞ்சிலே அள்ளிக் கொள்க! உனது சிந்தை இனிக்க இனிக்கத் தெவிட்டும்படியாக உட் கொண்டு பேரின்பம் நுகர்க! – kaduveli siddhar padalgal vilakkam-pagam5
பாடல் – 25
“பொய்வேதம் தன்னைப் பாராதே – அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே – துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே”
விளக்கம்
மனிதா! பயன் விளையும் அறிவையே பெறுக; பொய்யுரைக்கும் மறைநூல்களை பார்க்கவோ படிக்கவோ கூடாது. அந்த நூல்களை வைத்துக் கொண்டு கற்பித்து அறிவை மயக்கும் சூதர்களின் சொற்களைக் காது கொடுத்து கேட்கவோ, அவற்றை சிந்திக்கவோ வேண்டாம்! மைதீட்டி மயக்கும் விழிகளையுடைய பெண்களை சார்ந்து பாழடையாதே! தீமை தரும் ஒழுக்கத்தினையுடைய பொய் நெறிக் கூட்டத்தினரைக் கண்டு மகிழந்து, அவருடைய வலையில் விழுந்து விடாதே! எச்சரிக்கை.
– கோமகன், சென்னை
பாடல் 25 ” பொய் வேதம் தன்னை என்ற பாடல் வரிகளின் விளக்கம்
மனதை கவர்ந்தது அருமையான விளக்கம்.நன்றி ஐயா 🙏🙏