கவிதை தொகுப்பு 72
by Neerodai Mahes · Published · Updated
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சுகந்தி அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். வாழ்த்துக்கள் கவிஞர் சுகந்தி.
சிட்டுக்குருவியின் சிறகொடித்து
தங்கக்கூட்டினில் சிறைபிடித்து சிரித்திருக்கச்சொல்லும்
உலகமிது இந்த உண்மை யாருக்குப்புரிகிறது?
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த அக்கால விந்தை மனிதரின் தொடரில் வீதியிலே பெண்ணை ஆட்டிவைத்து வேடிக்கை பார்க்கும் கூட்டமிது!
பெண்ணியம் பேசிய புண்ணியவான்கள்
சொல்லியே சென்ற வார்த்தைகள் எல்லாம் காற்றுடன் அன்றே கலந்தாச்சு! அந்த காற்றும் நஞ்சென ஆயாச்சு!
கத்தியும் புத்தியும் கலந்தாச்சு, இங்கு கற்பும் காதலும் களவாச்சு!
சின்னஞ்சிரு சிறுமியர்க்கும் அரங்கேறும் வன்கொடுமைகள் தட்டிக்கேட்க யாருமின்றி தாண்டாவமாடுகிறது வஞ்சகர்களின் வயதான வாலிபங்கள்!
வரதட்சணை வாங்கி வாங்கி கொழுத்திருக்கும் கூட்டமிது. இங்கு திருமகளே மருமகளானாலும் நொட்டம் நூறு சொல்லி மட்டம் தட்டத்தான் பார்க்கும்!
சாத்திரங்கள் பலபேசி சாதிக்க துடிக்கும் சிறகுகளை சமையலறையில் சிறையெடுத்து சிரித்திருக்கும் உறவுகளால் எங்கே சிறக்கும் இங்கே பெண்களின் வாழ்வு?
பெண்ணுக்குப் பெண்ணே பேரிடராய் இருக்கும் மட்டும் பெண்ணியம் காக்கும் சட்டங்கள் இங்கே ஏட்டினில் மட்டுமே நிலைத்து நிற்கும்!
கருவினில் செனித்த நாள்முதலே கலக்கங்கள் பல கண்டாச்சு, இனிவரும் காலங்களிலேனும் அடிமையென்று முடக்கி வைத்த ஆணவத்தின் செருக்கழித்து, சரித்திரங்கள் நாங்கள் படைக்க, இனியும் சுற்றி நில்லாதே போ பகையே!!!
கவிஞர் சுகந்தி