கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்
ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் இரண்டாம் பதிவாக கொரோனா பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும்.
இன்று நாமனைவரும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப் பட்டிருக்கிறோம் . இந்த தனிமையில் பொழுதுகளை அலட்சியப்படுத்தாமல் நாம்,நம் நாடு சுத்தம்,சுகாதாரம், பற்றி சிந்திக்க சிறு மணிதுளிகளை செலவிடலாமே….
எந்த ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொள்ளும் போதும் அந்த துன்பத்திற்கான காரணம் என்ன என்பதில் தெளிவு பெற வேண்டும் என்பது என் கருத்து. “இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணம் ??என்பதையும், ஏன் நாம் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்??” என்பதை பட்டியலிடுங்கள். கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியால் நாம் அச்சுறுத்தப்படும் அவல நிலை ஏன் என்ற பட்டியலில் முதலாவதாக இடம்பெறுவது
“அலட்சியம்”.
இன்று நாமனைவரும் நம்மை பற்றி சிந்திக்க நேரமில்லாது அதிவிரைவு வாகனங்கள் போல ஓடிக்கொண்டிருக்கிறோம். அன்றைய நாட்களின் செயல்பாடுகளுக்கேற்ப இயங்கும் எந்திர மனிதர்களாக வலம் வருகிறோம்.
1980, 90 களில் நாம் வாழ்ந்த வாழ்வை சற்று நினைவு படுத்தி பாருங்கள். சிறுபிள்ளைகளாக நாம் வளர்ந்த பசுமையான நாட்களை எண்ணி பாருங்கள். நம் தந்தை ,தாய் , தாத்தா ,பாட்டி இவர்களது கண்டிப்புடன் கூடிய அன்பில் நனைந்த அழகிய மழைக்காலங்கள். ஆனால் இன்று நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் , அடுத்த தலைமுறையை எவ்வாறு வாழ பழக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை வளர்ந்த காலத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்.
அன்றாட வாழ்வில் காலை விழிப்பது தொடங்கி உணவில் , உடையில், காலை கடமைகள் , பழக்கவழக்கத்தில் , வாழ்க்கை முறையில், செய்யும் செயலில், சொல்லும் சொற்களில், பணியில், சுத்தத்தில், சுகாதாரத்தில், விழிப்புணர்வில், சட்டத்தை பின்பற்றுவதில், இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு மனிதனும் , எந்த ஒரு விஷயத்திலும் செய்யும் சிறு அலட்சியமே நம்மை பெரிய பிரச்சனைகளுக்குள் தள்ளிவிடுகிறது – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும்.
இந்த அலட்சிய போக்கை மாற்ற இந்த 21 நாட்களில் நாம் செய்யவிருக்கும் நல்ல மாற்றங்கள் நம்மை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை. நமது தினக் கடமைகளை பட்டியலிட்டு அலட்சிய படுத்தாமல் முதலில் நாம் அதை சரியாக செய்ய முற்படுவோம்.
- அதிகாலை எழுதல்
- ஆரோக்கியம் பேண உடற்பயிற்சி.
- மன ஆரோக்கியம் காக்க தியானம்.
- தூய்மை காத்து நம்மை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருத்தல்
- பசித்த பின் உணவருந்துதல்
- நற்சிந்தனைகளை மனதில் பதித்து நாடு வளம் பெற ஒத்துழைத்தல்
முடியும் என முயற்சிப்போம்…..
மாற்றத்தை நம்மில் உணர்வோம்.
– கவி தேவிகா, தென்காசி.
அனைவரும் செயல்படுத்த வேண்டிய நற்சிந்தனை ..ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ..மென்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி