குறுந்தொகை பகுதி 2
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 2
செய்யுள் விளக்கம்
- கூடிவாழ்வதே குதூகலம்
பாடியவர்: மாமூலனார்
கணவனை பிரிந்திருக்கும் துக்கம் தாளாமல் ஒரு தலைவி தன் நெஞ்சத்தை நோக்கி தன் பெருந்துக்கத்தை வெளியிட்ட செய்தியை கூறும் பாலைத் திணைப் பாடல் இது:-
“கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாள்தொறும்
பாடு இலகவிழும் கண்ணொடு, புலம்பி
ஈங்குஇவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு இனி; வாழி என் நெஞ்சே? முனது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது,
பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்த்திசின் அவருடைய நாட்டே”
விளக்கம்: என் நெஞ்சே நீ வாழ்க! சங்கினை அறுத்து செய்யப்பட்ட ஒளி விளங்கும் வளையல்கள் உடல் மெலிவினால் என் கைகளை விட்டு கழல, ஒவ்வொரு நாளும் இமையோடு இமை பொருந்தாமல் கலங்கி கண்ணீர் சிந்தி அழும் கண்களுடன் புலம்பி தனித்திருத்து வருந்தி, இப்படி இங்கே தங்கியிருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வோம். ஆதலால் தலைவர் இருக்கும் இடத்திற்கு போவதற்கு இப்பொழுதே புறப்படும் முன்னே கஞ்சங் குல்லை மலர்களை பறித்துத் தொடுத்த மாலையை தரித்த வடுகர் நாட்டுக்கு பக்கத்திலுள்ள பல வேள்களை உடைய கட்டி என்னும் வீரனது வளமுள்ள நாட்டிற்கு அப்பால் வேறு மொழி வழங்கும் தேசத்திலே இருப்பார் ஆயினும் அவர் இருக்கும் நாட்டிற்கு போவதற்கு எண்ணினேன்.
கருத்து: தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் துன்பத்தை இனியும் என்னால் பொறுக்க முடியாது. அவர் இருக்கும் இடத்திற்கு போனால் தான் என் துன்பம் தணியும்.
- உண்மையறியாத ஊர்
பாடியவர்: ஒதலாந்தையார்
தலைவனை பிரிந்து வருந்தியிருக்கும் நிலை கண்டு பலவாறு புலம்பி தவித்த தோழிக்கு அவள் வருத்தம் போக்க தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது:-
“எறும்பி அளையின் குறும்பல் கனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கலைத்து என்பஅவர் சென்ற ஆறே
அதுமற்று அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும்இவ் வழுங்கல் ஊரே”
விளக்கம்: தலைவர் போன வழி எறும்பு வளைகளை போல குறுகலான பல சுனைகளை உடையது. கொல்லன் உலைக் களத்திலுள்ள பட்டடையை போல சூடேறிய கற்பாறைகளின் மேல் ஏறி, வளைந்த வில்லையுடைய எயினர்கள் தம் அம்புகளை கூர்மையாக
தீட்டிக் கொண்டிருக்கிற பல கிளை வழிகளையுடைது என அவ்வழியை இதற்கு முன் கண்டவர்கள் கூறினார்கள். அவ்வழியின் கொடுமை பற்றிய துன்பத்தை எண்ணித் தான் நான் வருந்துகிறேன். இத்துன்பத்தை உள்ளத்தில் கொள்ளாமல் ஆரவாரம் பொருந்திய இந்த ஊரானது வேறு சொற்களை சொல்லி என்னை இடித்துரைக்கும் இது பேதைமை அன்றோ.
கருத்து: தலைவன் சென்ற வழி கொடுமையானது இதை என் தோழியும் நினைக்கவில்லை. இவ்வூராரும் எண்ணவில்லை.
- தன்னியல்பு மறந்த தலைவன்
பாடியவர்: கபிலர்
தலைவன் பிரிவால் தலைவியிடம் வேறு பாட்டை கண்ட தோழி வருந்தினாள். அவள் வருத்தங்கண்ட தலைவி தன் துன்பத்திற்கும் வேறுபாட்டுக்கும் காரணம் இன்னதென்று கூறுவதாக அமைந்த பாடல் இது:-
“மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல்உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்த்தன குவளை அம் கண்ணே”.
விளக்கம்: என் அருமை தோழியே, உடம்பில் படிந்த புழுதி முழுவதும் போகும்படி குளிப்பாட்டப் பட்ட யானை போல, பெரிய மழையினால் கழுவப்பட்ட உருண்டையான கல் பசுமையான ஓலிடத்தில் கிடக்கின்றன. மலை நாட்டையுடைய தலைவனே, எனக்கு காதல் நோய் தந்தான். அதனால் அவனை கூடுவதற்கு முன்னே குவளை மலர் போல அழகாய் இருந்த என் கண்கள், பசலை படர்ந்து அழகிழந்து காணப் படுகின்றன.
கருத்து: என்னிடம் காணப்படும் வேறுபாடுகள் நானாக வரவழைத்து கொண்டவை அல்ல தலைவனால் தரப்பட்டவை.
- மடலேறி மணப்பேன்
பாடியவர்: தொல்கபிலர்
தலைவன் தலைவி மீதான தனது அளவற்ற காதலை பாங்கியிடம் கூறுவதாக அமைந்த செய்யுள்:
“அமிழ்துபொதி செந்நா அஞ்சவந்த
வார்த்துஇலங்கு வைஎயிற்று சின்மொழி அரிவையை
பெறுகதில் அம்ம! யானே, பெற்றாங்கு
அறிகதில் அம்ம! இவ்வூரே! மறுகில்
நல்லோர் கணவன் இவன் எனப்
பல்லோர் கூறயாம் நாணுகம் சிறிதே”
விளக்கம்: அமிழ்தம் போன்ற உமிழ்நீர் நிரம்பிய செம்மையுள்ள நாக்கு அஞ்சும்படி வரிசையாக விளங்குகின்ற கூர்மையான பற்களையும் சில சொற்களையும் உடைய என் தலைவியை மடலேறுதல் மூலமாவது உறுதியாக என் இல்லாளாக பெறுவேன். இவ்வூர் என்னுடைய சாதனைகளை அறிவார்களாக அதன் பிறகு நான் வீதியிலே செல்லும் போது அந்த நல்ல அரிவையின் கணவன் இவன் என பலரும் கூறக் கேட்டு நான் வெட்கமுற்று தலை குனிந்து நடப்பேன்.
கருத்து: நான் மடலேறியாவது இவ்வரிவையை என் இல்லாளாக பெறுவேன்.
- உறுதியுள்ள நட்பு
பாடியவர்: ஔவையார்
களவு மணத்திலே வாழ்ந்து ஒரு தலைவி தன் உறவினர் அறியாமல் தலைவனுடன் புறப்பட்டு போய் விட்டாள். இச்செய்தியை தோழி மூலம் அறிந்த செவிலித்தாய் அதனை ஈன்றெடுத்த நற்றாய்க்கு நவின்ற பாலைத்திணைப் பாடல்:
“பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல்மூது ஆலத்து பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நலமொழிப் போல
வாய் ஆகின்றே தோழி! ஆய்கழல்
சேயிலை வெள்வேள் விடலை யொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”
விளக்கம்: தலைவியை காணாமல் வருந்தும் தோழியே! சிறந்த வீரகண்டா மணியையும் இலை வடிவமுள்ள வெண்நிறமுள்ள வேலையும் உடைய தலைவனுடன் கூட்டமான வளையல்களைத் தரித்த முன் கையையுடைய நமது மகள் கொண்ட நட்பு பழமையான ஆலமரத்தடியில் உள்ள பொதுச் சபையிலே காணப்படுகின்ற நான்கு பிரிவுகளைக் கொண்ட கோசர்களின் நல்ல மொழிகளின் உண்மையைப் போல பறை ஒலிக்க, சங்குகள் ஆரவாரிக்எ மணம் நடந்திருக்கும் ஆதலால் இவள் அவனுடன் கொண்ட நட்பு உலகறிய உண்மையாயிற்று
கருத்து: தலைவி தன் தலைவனுடன் சென்று மணம் புரிந்து கொண்டு தன் கற்பை நிலை நாட்டினாள்.
(நாலூர் கோசர் – நான்கு ஊர்களைச் சேர்ந்த கோசர், இவர்கள் வீரர்களாகவும், வாக்குறுதி தவறதவர்களாவும் வாழ்பவர்கள்)
தலைவி தான் விரும்பியவனுடன் தானே சென்று மணம் புரிந்து கொள்ளும் பழந்தமிழ் வழக்கத்தை இப்பாடல் காட்டுகிறது.
- பிரிந்தவர் கூடுவார்
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணி வருந்தியிருக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த பாலைத்திணை பாடல்:
“உள்ளார் கொல்லோ! தோழி! கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உசிர்நுதி புரட்டும் ஓசைப் போலச்
செங்கால் பல்லி தன்துணை பயிரும்
அம்கால் கள்ளிஅம் காடு இறந்தோரே”
விளக்கம்: தோழியே! அவர் சென்ற பாலைவனத்திலேயுள்ள வழிப்பறி செய்யும் கள்வர்கள் தம் இரும்பால் செய்யப்பட்ட அம்புகளை கூர்மை செய்து கொள்ளும் பொருட்டு, தம் கைவிரல் நகத்தினால் புரட்டும்போது எழும் ஓலி போல சிவந்த கால்களை உடைய பல்லி தன் துணைப் பல்லியை அழைக்கின்ற கள்ளி முளைத்திருக்கும் அழகிய காட்டு நிலத்தை கடந்தவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா?
கருத்து; தலைவர் விரைவில் வருவார், பல்லியின் குரலைக் கேட்டால் அவர் தாமதிக்க மாட்டார்.
- காதல் மிகுந்தால்
பாடியவர்: பேரெயின் முறுவலார்
காதலித்த தலைவியின் கூட்டுறவை பெற முடியாவிட்டால் காமம் மிகுந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி கூறும் குறிஞ்சித் திணைப் பாடல்.
“மாஎன மடலும் ஊர்ப; பூஎனக்
குவிமுகிழ் எருக்கும் கண்ணியும் புடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமம்காழ் கொளினே”
விளக்கம்: காமநோய் முதிர்ந்தால், குதிரை என்று சொல்லும்படி செய்து, பனை மடலின் மேல் ஏறி ஊர்வார்கள்; பூமாலை என்பது குவிந்த அரும்புகளை உடைய எருக்கம்பூ மாலையையும் சூட்டிக் கொள்வார்கள். வீதியிலே தம்மை கண்டவர்கள் ஆரவாரம் செய்வதையும் காணப் பெறுவார்கள். தம் எண்ணம் வெற்றி பெறாவிட்டால் உயிர் விடுதல் போன்ற வேறு செயல்களிலும் இறங்கி விடுவார்கள்.
கருத்து:- நீ உதவி செய்யா விட்டால் நான் மடலூர்வேன்.
- இன்னும் எத்தனை நாள்
பாடியவர்: கபிலர்
களவொழுக்கத்தில் வாழும் தலைவனிடம் நீ விரைவில் தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டுமென கூறி தலைவியின் நிலையை தோழி வெளியிடும் குறிஞ்சித் திணைப் பாடல்
“வேரல் வேலி வேர்கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்துசினரே, சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர் தவச் சிறிது! காமமோ பெரிதே!”
விளக்கம்: மூங்கில் வேலிக்கு இடையே வேலிலே பழங்களை கொண்டிருக்கும் பலா மரங்கள் நிறைந்த மலைச்சாரலினை உடைய நாட்டின் தலைவனே! மணம் புரியும் காலத்தினை புரிந்து கொள். யார்தான் பின்னால் நடக்கப் போவதை அறிந்தவர்கள். எங்கள் மலைச்சாரலில் பலா மரங்களில் சிறிய கிளைகளில் பெரிய பழங்கள் பழுத்து தொங்குகின்றதை போல இவளுடைய உயிர் மிக சிறியது. இவள் கொண்டிருக்கும் காமமோ மிக பெரியதாகும்.
கருத்து: தலைவியை காலம் தாழ்தாமல் மணம் புரிந்து கொள் இன்றேல் பெரிய ஏமாற்றம் நேர்ந்தாலும் நேரும்.
- இனி எப்படியோ
பாடியவர்: பாணர்
ஊடல் நீங்காத தலைவியைப் பற்றி அவள் காதலன் தன் நெஞ்சை நோக்கி கூறியது போல அமைந்த மருதத்திணைப் பாடலஃ:
“எவ்வி, இழந்த வறுமை யாழ்பாணர்
பூஇல் வறும்தலை போலப், புல் என்றுங
இணைமதி! வாழிய நெஞ்சே! மனைமரத்து
எல்உறு மௌவல் நாறும்
பல்இருங் கூந்தல் யாரளோ நமக்கே”
விளக்கம்: தங்களுக்கு உதவிய எவ்வி என்னும் வள்ளலை இழந்து வறுமையுற்ற யாழ் வாசிக்கும் பாணர்களின் பொன் மலர் இழந்த வெறுந்தலைப் போல, ஒன்றுமில்லாமல் ஒளியிழந்து வருந்துவாயாக. என் நெஞ்சே! வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் முல்லை மலர்களை அணிந்து மணம் வீசுகின்ற கூந்தலை உடையவள் ஊடல் தணியாமையால் இனி நமக்கு எப்படிப் பட்டவளாக இருப்பாளோ அறியேன்
கருத்து: இவள் இன்னும் ஊடல் தணியவில்லை. இனி எப்படி இருப்பாளோ?
(எல் – ஒளி ; மௌவல் – முல்லை) – kurunthogai paadal vilakkam 2
- அவர் அறிவுள்ளவர் ஆகுக
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
தலைவனுடைய. பிரிவைப் பற்றி சொல்லிய தோழிக்கு தலைவி சொல்வதாக அமைந்த பாலைத்திணை பாடல்.
“அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக;
மடவம் ஆக மடந்தை நாமே!”
விளக்கம்: தோழியே! அருளையும் அன்பையும் கைவிட்டு, தம் துணைவியையும் கைவிட்டு பொருள் தேடும் முயற்சியின் மேல் பிரிந்து போக நினைத்த தலைவர் அறிவுள்ளவராக இருந்தால் இத்தகைய துணிவுள்ள அவர் அறிவுள்ளவராளவே இருக்கட்டும். அவர் பிரிவை பொறுத்துக் கொண்டிருக்கும் வல்லமை அற்ற நாம் அறிவற்றவராக இருப்போமாக.
கருத்து: என்னை பிரிந்து போகுதல் அறிவுள்ள தலைவருக்கு அழகன்று.
– மா கோமகன்