குறுந்தொகை பகுதி 7
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 7
செய்யுள் விளக்கம்
- அன்பால் இன்புற்றோம்
பாடியவர்: தும்பி சேர் கீரன்
துறை: பரத்தையர் பால் பிரிந்து போயிருந்த தலைவன், தன் இல்லாளை சமாதானம் செய்யத் தூதர்களை அனுப்பினான். அத் தூதர்களிடம் தோழி கூறிய மருதத்திணை பாடல்.
“தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர, ஆயுனும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும், நல்தேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்துஇன்புற்றெனம்: செறிந்தன வளையே”
விளக்கம்: தச்சனால் விளையாடும் பொருட்டு செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய வண்டியை பெரியோரைப் போல ஏறிச் செலுத்தி இன்பம் அடையா விட்டாலும் கையினால் அந்த வண்டியை இழுத்து இன்புறும் இளையோர் போல அவரைத் த உவி இன்பமடையவில்லை. ஆனாலும் நல்ல தேரையும் பொய்கைகளையும் உடைய ஊருக்கு தலைவனாக இருக்கும் அவனுடைய நட்பை எங்கள் உள்ளத்திலே மேலும் மேலும் அன்பை வளர்த்துக் கொண்டோம். ஆதலால் எம் தலைவியின் முன் கையில் உள்ள வளையல்கள் கழலாமல் இறுகியிருக்கின்றன.
கருத்து: தலைவர் எம்மை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.
- மலர்மணக்கும் மேனியாள்
பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்
துறை: முதல் நாள் தலைவியுடன் கலந்து மகிழ்ந்த தலைவன் மறுநாளும் அவளைத் தழுவ எண்ணி தன் மனத்தை நோக்கிக் கூறிய குறிஞ்சித்திணை பாடல் இதோ:-
“கோடல், எதிர்முகைப் பசவீ முல்லை
நாறுஇதழ்க் குவளையொடு இடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி:
முறியினும் வாய்வது: முயங்கற்கும் இனிதே”
விளக்கம்: மனமே! காந்தள் மலரையும், அரும்பிலிருந்து உண்டாகிய முல்லை மலர்களையும், மணம் வீசும் இதழ்களையுடைய குவளை மலர்களுடன் இடையுடையே கலந்து அழகாக தொகுக்கப்பட்டு சிறப்பாக காணப்படும் மாலையைப் போல நல்ல மணம் பொருந்திய தலைவியின் உடம்பு தளிரைக் காட்டினும் மென்மையும் நிறமும் உடையது. தழுவிக் கொள்வதற்கு இனிமையானது.
- எப்படி பிரிவேன்
பாடியவர் : உகாய்குடி கிழார்
துறை: பொருள் தேட போக வேண்டும் என தன் உள்ளத்திற்கு உரைத்த தலைவன் கூற்று பாலைத் திணையில்
“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைமிக எண்ணுதி! அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ! உரைத்திசின் நெஞ்சே!”
விளக்கம்: இரப்போர்க்கு கொடுத்தலும், இன்பங்களை நுகர்வதும் செல்வமில்லாத வறியவர்களுக்கு இல்லையென்று நினைத்து சேர்ப்பதற்கான காரியத்தை பற்றி மிகவும் மும்முரமாக நினைக்கின்றாய். அக் காரியத்திற்கு அந்த அழகிய தலைவியும் ஒத்து வருவாளோ? எம்மை மட்டும் செலுத்துவாயோ? உரைப்பாயாக.
கருத்து: செல்வம் வேண்டுமாயினும் இப்பொழுது இவளை விட்டுப் பிரிந்து போவது முடியாத காரியம்.
- ஆவைப் பிரிந்த கன்றானோம்
பாடியவர்: கருவூர்க்கதப் பிள்ளை
துறை: தனக்கு ஆறுதல் கூறிய தோழிக்கு தலைவி கூறியது இது முல்லைத்திணைப் பாடல்
“பல்ஆ, நெடுநெறிக்கு அகன்று வந்தெனப்
புன்தலை மன்றம் நோக்கி, மாலை
மடக்கண் குழவி அணவந்த அன்ன,
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர், தோழி! சேய்நாட் டோரே”
விளக்கம்: தோழியே! கொட்டிலில் இருந்த பல பசுக்களும் மேய்ச்சலுக்காக நீண்ட நெறியைக் கடந்து சென்று விட்டன. அவை போய்விட்டதால் வெறிச் சென்று கிடக்கும் கொட்டகையை பார்த்து மாலைப் பொழுதிலே அழகிய கன்றுகளையுடைய இளங்கன்றுகள் அண்ணாந்து பார்த்து வருந்துவதைப் போன்ற துன்பத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை நம் தலைவர் உணர்ந்தும் கூட பிரிந்திருக்கிறார். தூர நாட்டில் வாழ்கிறார் நாம் என் செய்வோம்.
கருத்து: பிரிவால் நாம் துன்புறுவோம் என்று தலைவருக்குத் தெரியும்.
- கார் வந்தும் காணேன்
பாடியவர்: கோவூர் கிழார்
துறை: கார்காலம் வந்தும் தலைவன் வராமை கண்டு தலைவி வருந்தி தோழிக்கு கூறிய முல்லைத்திணைப் பாடல்
“வன்பரல் தெள்அறல் பருகியஇரலை, தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளத்
தான் வந்தன்றே தளிதரு தண்கார்:
வராது உறையுநர் வரல் நசைஇ,
வருந்தி நொந்துறைய இருந்தீரோ எனவே”
விளக்கம்: தோழியே! வலிமையுள்ள பருக்கை கற்களிடத்தேயுள்ள தெளிவான நீரைக் குடித்து இன்பத்தை அனுபவிக்கும் தன்னுடைய துணையான பெண் மானுடன் துள்ளி விளையாடும்படி, பிரிந்து சென்று வராமல் தங்கியிருக்கும் தலைவருடைய வருகையை விரும்பி மிகவும் துன்புற்று உயிரோடு தங்கியிருக்கின்றீரோ என்று கேட்பது போல மழைத்துளியை சிந்தும் குளிர்ந்த கார் காலம்தான் வந்தது.
kurunthogai paadal vilakkam 7
- மதியற்ற கொன்றை மரம்
பாடியவர்: கோவத்தன்
துறை: கார் காலங் கண்டு வருந்திய தலைவிக்கு தோழி கூறியதென முல்லைத்திணைப் பாடல்:-
“மடவ! மன்ற தடவுநிலைக் கொன்றை:
கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடிஇணர் ஊழ்த்த;
வம்ப மாரியை கார்என மதித்தே”
விளக்கம்: பருக்கை கற்கள் நிறைந்த பாலை நிலவழியிலே சென்றவர் திரும்பி வருவதாக சொல்லிய கார் காலம் வருவதற்கு முன்பே புதிய மழை கண்டு கார் காலம் வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு தன் கிளைகள் நிறைய மலர்கள் பூத்திருக்கின்ற இந்த பரந்த அடிபாகத்தைக் கொண்ட கொன்றை மரங்கள் மிகவும் அறிவற்றவை.
கருத்து: இன்னும் கார் காலம் வரவில்லை நீ வருந்தாதே
- நம்மை மறந்தாரோ
பாடியவர்: அள்ளூர் நன்முல்லை
துறை: பிரிந்து சென்ற தலைவனைப் பற்றி தலைவி வருந்தி கூறியதாக அமைந்த பாலைத்திணைப் பாடல்:
“உள்ளார் கொல்லோ தோழி! கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்பஒண் பழம்
பதுநான் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல் ஒருகாசு ஏய்க்கும்:
நிலம்கரி அம்கள்ளி காடு சிறந்தோரே”
விளக்கம்: தோழியே! கிளியானது தனது வளைந்த அலகாலே கொத்திக் கொண்டிருக்கின்ற வேப்பமரத்தின் ஒளியுள்ள பழம், புதிய பொன் கம்பியை நுளைக்கும் பொருட்டு பொற்கொல்லன், முனை அழகாக இருக்கின்ற கூர்மையான நகமுள்ள விரலால் பிடித்திருக்கின்ற பொன் ஆபரணத்தின் ஒரு பொற் காசைப் போல காணப்படும். நிலம் வெப்பத்தால் கரிந்து கிடக்கின்ற, கள்ளிகள் முளைத்து கிடக்கின்ற, பாலை நில வழியிலே என்னை நினைக்காமல் மறந்து விட்டாரோ?
கருத்து: பாலை நிலத்து வழியே பிரிந்து சென்ற தலைவர் அந்த காட்சிகளை கண்ட பின்னரும் என்னை மறந்தாரோ!
- வேறு மருந்து ஏதுமில்லை
பாடியவர்: அள்ளூர் நன்முல்லை
துறை: தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி முன்பனிக் காலம் வந்தும் அவன் திரும்பி வராமை கண்டு தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த குறிஞ்சித்திணைப் பாட்டு இதோ:
“பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய், உழைவினம் கவரும்
அரும்பணி அச்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே”
விளக்கம்: குறும்பூழ் என்னும் காடைப் பறவையின் காலைப் போன்றே நல்ல அடிபாகத்தை உடைய உழுத்தஞ் செடியிலுள்ள மிக முற்றிய காய்களை மான் கூட்டங்கள் கவர்ந்து தின்னுகின்ற பொறுக்க முடியாத பனி பெய்யும் முன் பனி காலத்தில் நான் அடையும் துன்பத்தை தீர்க்கும் மருந்து அவர் முன்பு என்னைத் தழுவிக் கொண்ட மார்பு ஒன்றுதான் உள்ளது பிறிது ஒரு மருந்து என வேறில்லை.
கருத்து: எனக்கு முன்பனி காலத் துன்பம் தீர்க்கும் மருந்து என் காதலருடைய மார்பு ஒன்றுதான்.
- இரவில் வரவேண்டாம்
பாடியவர்: கடுந்தோட் கரவீரன்
துறை: இரவிலே வந்து தலைவியை சந்திக்க விரும்பிய தலைவனிடம் இரவிலே வரவேண்டாம் என தோழி கூறிய குறிஞ்சித்திணை பாட்டு:
“கருங்கண் தாகலை பெரும் பிறிது உற்று எனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்;
சாரல் நாட! நடுநாள்
வாரல்! வாழியோ வருந்துதும் யாமே”
விளக்கம்: கரிய கண்களை உடைய தாவுகின்ற ஆண்குரங்கு இறந்து போய் விட்டது என்று வந்த கைம்மையின் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியாத பெண் குரங்கு இன்னும் மரமேறி பாய்வதற்கு கற்றுக் கொள்ளாத தன்மை உடைய தனது குட்டிகளை தன் உறவினர்களிடம் சேர்த்து விட்டு உயர்ந்த மலையிலேறி மலைச் சாரலில் வீழ்ந்து தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் நாட்டை உடையவனே! நீ நள்ளிரவில் வரவேண்டாம். அப்படி நீ வந்தால் நாங்கள் வருந்துவோம்.
கருத்து: இரவில் வந்தால் இடையூறு நேரலாம் உயிருக்கு ஆபத்து வரலாம் எனவே இரவில் வரவேண்டாம்.
- எங்ஙனம் கூறுவேன்
பாடியவர்: ஓரம்போகியார்
துறை: தலைவியின் அழகையும் அவள் தரும் இன்பத்தையும் தலைவன் பாராட்டிக் கூறிய குறிஞ்சித்திணை பாடல்:
“ஒடுங்கு ஈர்ஓதி ஒண்நுதல் குறுமகள்;
நறும் தண்ணீரள்; ஆரணங் கினளே;
இனையள் என்று அவள் புனைஅளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி,
அணை மெல்லியல், யான்முயங்குங் காலை”
விளக்கம்: படிந்த எண்ணெய்ப் பசையுள்ள கூந்தலையும், ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய தலைவி நறுமணத்தையும் குளிர்ந்த தன்மையையும் உடையவள். அவள் உரைக்கும் சில சொற்கள் தாம் ஆயினும் அவை இனிமையான மெல்லிய சொற்கள். யான் அவளை கூடியிருக்கும் போது அணைத்துக் கொள்வதற்கு மிகவும் மென்மை உடையவளாக இருக்கிறாள். ஆனால் பிரிந்தால் வருத்தத்தை தருகிறாள். ஆதலால் அவளை இப்படிப் பட்டவளென்று புனைந்து கூறும் அளவை அறியாமல் இருக்கிறேன்.
கருத்து: என் காதலி எனது ஐம்புலன்களுக்கும் இன்பத்தைத் தருகிறாள் – kurunthogai paadal vilakkam 7.
– மா கோமகன்