முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்
கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “முத்துக்கு முத்தாக – துளிப்பாக்கள் நூல் அறிமுகம்” – muthukku muthaga puthaga vimarsanam
இரா.சிவானந்தம் அவர்களின் “முத்துக்கு முத்தாக” துளிப்பாக்கள் நூல் அறிமுகம்.. பாவைமதி வெளியீடு, பக்கங்கள் 100. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூக்களை சிறப்பானதொரு முறையில் தமிழ் துளிப்பாக்களாக எழுதி வெற்றி கண்டவர்களின் வரிசையில் “முத்துக்கு முத்தாக” கவிஞர் சிவானந்தமும் ஒருவர்.
சாகித்திய அகாடமி விருதாளரும், நாஞ்சில் எழுத்தாளருமான பொன்னீலன் அவர்களின் அணிந்துரை புத்தகத்திற்கான கலைநயம் மிக்க அணி என்பேன். தமிழில் ஹைக்கூ கவிதைகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் கவிஞர் மு முருகேஷ் அவர்கள். கவிஞரது வாழ்த்துரை புத்தகத்திற்கு வலிமை சேர்க்கிறது. அன்பில் விதியும் நன்றிகள் என்ற கவிஞர் சிவானந்தம் அவர்களின் என்னுரையில் நூலுக்கான ஆக்கமும் ஊக்கமும் தென்பட்டது. பாவைமதி பதிப்பகத்தின் வான்மதி அவர்களின் பதிப்புரையின் மூலம் இப்புத்தகத்தில் பளிச்சிடும் கவிதைகளை பட்டியலிட்டுக்காட்டி நம்மை வாசிக்கத் தூண்டுகிறார் – muthukku muthaga puthaga vimarsanam
தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. அதில் துளிப்பாக்கள் எழுதி நம் மனதில் இடம் பிடிக்கிறார் கவிஞர் சிவானந்தம்.
மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகள், இயற்கை, அரசியல், வாழ்க்கை, காதல்,
கோபம், என துளிப்பாக்களை
துளிர்க்க வைத்துள்ளார் கவிஞர்.
அவ்வாறு இந்த நூலில் நான் வாசித்து ரசித்த துளிப்பாக்கள் உங்களுக்காக…
“இரு நாட்டுத் தலைவர்கள்
சமாதானப் பேச்சுவார்த்தை
எல்லையில் பதட்டம்”
இவ்வாறாக தொடங்கும் நூல்
“பிறந்து வாழ்ந்து இறப்பது
நியதியாச்சு.. வாழ்க்கையே
ஒரு ஹைக்கூ”
என்றவாறு நிறைவு பெறும் கவிதை வரை ஏதோ ஒரு உணர்வை நம்முள் விதைக்கிறது இந்நூல்.
இன்றைய உலகத்தின் நடப்பை
உறவுகளின் நிலையை கூறும் அற்புத வரிகள் இதோ..
“சொத்துக்கள் இழந்ததும்
காணாமல் போனது
சுற்றம்”
இன்னொரு நிதர்சன வரிகள்..
“மகன் திருமணம்
தனிக்குடித்தனம் போயினர்
பெற்றோர்”
இன்றைய சூழலில் நமக்காக போராடியவர்கள் சிலையாகவே இருந்தாலும் கூண்டுக்குள் பாதுகாக்கப்படும் அவல நிலை.
“விடுதலை வாங்கித்தந்த
காந்தி… சிலையாய்
கூண்டுக்குள்”
இத்தொகுப்பில் எளிமையான ரசிக்க வைக்கும் வரிகளில் ஏராளம். அவற்றுள் சில
“வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை காப்பாற்றினார்
கறிக்கடைக்காரர்”
“நித்தமும் ஒரு
புதுச்சேலை
ஜவுளிக்கடை பொம்மை”
“அழுக்குகளை
ஏற்றுக் கொண்டாலும்
அவை புனித நதிகள்”
“பெற்றோருடன்
செல்பி..
முதியோர் இல்லம்”
“மாநிலங்களுக்கிடையே
அல்லல்படுகிறது
நதிகள்”
இவ்வாறு இத்தொகுப்பு முழுவதும் பல நல்ல துளிப்பாக்கள் நம் மனதோடு ஒட்டிக் கொள்கிறது.
பணத்தின் முன் எது நடந்தாலும்
பணம் நம்மையே மறைக்கும் என்பதற்கு சான்றாக இதோ ஒரு துளி..
“பணத்தின் முன்
தடுமாறுகிறது
பாசம்”
இன்றைய இளைய மனங்களின் நிலையை படம் பிடித்துக் காட்டும் துளிப்பாகவாகவே இந்தத்துளியை நான் பார்க்கிறேன்.
“பரணில் பெற்றோர் படம்
நடு வீட்டில்
நடிகர் படம்”
இதுதான் சாட்டையடி கவிஞரே..
“திரைப்பட நடிப்பு
சிலருக்கு எடுபடுவதில்லை
அரசியலில்”
அரசியலில் மட்டுமா… சிலருக்கு வாழ்க்கையிலும் கூட…
இந்த வரிகளை வாசித்ததும்
நான் எழுதிய எனது குறும்பா ஒன்று என் நினைவுக்கு வருகிறது..
“எல்லா வேளைகளிலும்
உங்களின் எல்லா வேடங்களும்
உங்களுக்கே பொருந்துவதில்லை…
கொஞ்சம் இயல்பு காட்டுங்கள்”
என்பதே அவ்வரிகள்.
மேலும் இத் தொகுப்பில் நான் மிகவும் ரசித்த இரண்டு துளிப்பாக்களை பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“சாலைகள் விரிவாக்கம்
பலியாயின
மரங்கள்”
“வெற்றிலை உரல்
முடங்கிக் கிடக்கிறது
பாட்டி மரணம்”
இவ்வாறாக இத்தொகுப்பை வாசிக்க வாசிக்க பல துளிப்பாக்கள் பல கேள்விகளையும், பல விடைகளையும், அமைத்து விடுவதோடு நின்றுவிடாமல், பல நம்மை நமக்கே படம் பிடித்துக் காட்டுகிறது.
துடிக்கும் இதயத் துடிப்புகளாக
பல துளிப்பாக்கள் நம்மோடு துடிக்கிறது.
“முத்துக்கு முத்தாக” மனதோடு மனதாக…
– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
முத்துமுத்தாய் கவிதை துளிகள் படிக்க மிக மிக அருமையாக எளிமையாக சுவையாக இருந்தது ..விமர்சனம் அருமை. நூலாசிரியருக்கும் விமர்சன ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 💐💐💐💐