நாலடியார் (12) மெய்ம்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-12
அறத்துப்பால் – இல்லறவியல்
12. மெய்ம்மை
செய்யுள் – 01
“இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத்து இயற்கை – நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து”
விளக்கம்
வரிசையாக வளையலை அணிந்தவளே! தம்மால் தரமுடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறுதல் யார்க்கும் பழியாகாது. அஃது உலகில் இயற்கை ஆனால் ஏற்பவன் ஆசை கெடும்படி பல நாட்கள் கழித்து இல்லையென்று சொல்லுதல் செய்ந்நன்றி மறந்தவரின் குற்றத்தை போன்ற குற்றமாகும்.
செய்யுள் – 02
“தக்காரும் தக்கவர் அல்லாரும் தன்நீர்மை
எக்காலும் குன்றல் இலர் ஆவர் – அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு”
விளக்கம்
சான்றோரும் சான்றோர் அல்லாதவரும் தம்தம் குணங்களில் எப்போதும் குறையாது இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும்.
செய்யுள் – 03
“கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் – ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈரங் குன்ற நாட
தொடர்பு உடையேம் என்பார் சிலர்”
விளக்கம்
குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட, நெருங்கிய உறவினர் பலராவர். தகாத கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது ‘அவர் எம் உறவினர்’ என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர்.
செய்யுள் – 04
“வடு இல்லா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இரு தலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப் பெய்து
அடுவது போலும் துயர்”
விளக்கம்
குற்றமற்ற இந்த உலகத்தில் போற்றத்தக்கஅறம், பொருள், இன்பம்என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனும் நடுவில் உள்ள பொருளை ஒருவன் அவன் அதன் காரணமாக முதலிலுள்ள அறத்தையும் இறுதியில் உள்ள இன்பத்தையும் அடைவான். பொருளைப் பெறாதவன் கொல்லன் உலையிட்டு இரும்பைக் காய்ச்ணுவது போல வறுமைத் துன்பமெய்தி வருந்துவான்
செய்யுள் – 05
“ஆவின் கன்று ஆயின் நாகும் விலை பெறூஉம்
கல்லாரே ஆயினும் செல்வர் வாய்ச் சொல் செல்லும்
புல் ஈரப் போழ்தின் உழவே போல் மீது ஆடி
செல்லாவாம் கூர்ந்தார் சொல்”
விளக்கம்
உயர்ந்த சாதிப் பசுவின் கன்றாக இருந்தால் இளங்கன்று நல்ல விலை போகும். கல்லாரேயாயினும் செல்வரது வாயிலிருந்து வரும் சொற்கள் ஏற்றுக் கொள்ளப்படும். சிறிதே ஈரமுள்ள காலத்தில் உழுதலைப் போல வறியவர் வாய்ச் சொல் மதிக்கப் படாது ஒழியும்.
செய்யுள் – 06
“இடம் பட மெய்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் – தடங் கண்ணாய்
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்
கைப்பு அறாப் பேய்ச் சுரையின் காய்”
விளக்கம்
அகன்ற கண்களையுடையவளே! பேய்ச் சுரைக்காயை உப்புடன் நெய்யும் பாலும் தயிரும் பெருங்காயமும் போட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, மெய் அறிவை உணர்த்தும் நூல்களூ மிக விரிவாக எக்காலமும் கற்றாலும் இயல்பாக அடக்கமில்லாதவர் எப்போதும் அடங்காமலே இருப்பர்.
செய்யுள் – 07
” தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க
என்னை அவரொடு பட்டது – புன்னை
விறல் பூங் கமழ் கானல் வீங்கு நீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்”
விளக்கம்
புன்னையின் அழகிய பூமணம் கமலும் சோலைகள் சூழ்ந்த கடற்கரையுடைய வேந்தனே! ஒரு காரணமுமின்றி தம்மை இகழ்ந்து பேசுபவரை, அவர் முன்னிலையிலேயே கனிந்து பேசிப் புறக்கணித்து விட வேண்டும். அவர் தொடர்பால் வருவதென்ன? வருபவை ஊழ் வினையால் வரும்.
செய்யுள் – 08
“ஆ வேறு உருவின் ஆயினும் ஆ பயந்த
பால் வேறு உருவின் அல்லவாம் பாம்போல்
ஒருதன்மையத்து ஆகும் அறம் நெறி ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு”
விளக்கம்
பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று. ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போல பலவாகும்.
செய்யுள் – 09
“யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார் – யாஅர்
இடையாக இன்னாத்து எய்தாதார் யாஅர்
கடைபோகச் செல்வம் உய்த்தார்”
விளக்கம்
மனித வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு பழிச்சொல் இல்லாமல் வாழ்ந்தவர் யார்? ஒரு தொழில் இன்றி வாழ்ந்தவர் யார்?வாழ்நாளின் இடையே
துன்பத்தை அடையாதவர் யார்? வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அனுபவித்தவர் யார்?
செய்யுள் – 10
“தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று
யாங்கனும் தேரின் பிறிது இல்லை – ஆங்குந் தாம்
போற்றி புனைந்த உடம்பும் பயன் இன்றே
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது”
விளக்கம்
எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிருக்கு துணையாக வருவது அவரவர் நல்வினைகளே அன்றி வேறில்லை. எமன் உயிரைக் கொண்டு செல்லும் போது அதுவரை ஆடை அணிகளால் அழகுடன் பாதுகாத்த உடம்பும் உயிருக்கு துணையாக வராது.
– கோமகன்
நாலடியார் செய்யுள் விளக்கம் அருமை மிகவும் பயனுள்ள பதிவு