நாலடியார் (39) கற்புடை மகளிர்
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-39
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம்.
காமத்துப்பால் – இன்பவியல்
39. கற்புடை மகளிர்
செய்யுள் – 01
“மகளிர்அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும் பெயர்ப் பெண்டி ரெனினும் விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை”
விளக்கம்: பெறுதற்கரிய கற்பினை உடைய இந்திராணியை போன்ற புகழ் மிக்க மகளிர் ஆயினும், அவரை அடைய வேண்டும் என்ற ஆசையில் எவரும் அவள் பின்னால் நிற்காதவாறு நடந்து கொள்ளும் நல்ல தெறியை உடைய ஒருத்தியே சிறந்த மனைவி ஆவாள்.
செய்யுள் – 02
“குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்”
விளக்கம்: ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சி குடிக்க வறுமை வந்தாலும், கடல் நீரையே பருகுமளவு மிகுந்த சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பல் குணத்தை கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்கு உரிய குணம் உடையவள் ஆவாள்.
செய்யுள் – 03
“நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்”
விளக்கம்: சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கமும் வழியாகி, மிகவும் சிறிதாகி, மேற் புறத்திருந்து மழை நீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளை செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் புகழுமாறும், கற்புடையவளாயும் திகழும் மனைவி இருக்கும் இல்லமே நல்ல இல்லமாகும்.
செய்யுள் – 04
“கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்”
விளக்கம்: கண்ணுக்கு இனிய அழகானவளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கரித்து கொள்பவளாய், அச்சம் உடையவளாய், பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டும், அவன் மகிழும் வண்ணம் ஊடல் நீங்கி இன்பம் தரும் இனிய மொழியுடைய பெண்ணே நல்ல பெண் ஆவாள்.
செய்யுள் – 05
“எஞ்ஞான்றும் எங்கணவர் எம்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்”
விளக்கம்: நாள்தோறும் என் கணவர் எம் தோளைத் தழுவி
எழுந்தாலும், முதல் நாள் நாணம் அடைந்ததை போலவே இன்றும் அடைகிறோம். பொருள் ஆசையால் பலருடைய மார்பை தழுவிக் கொள்ளும் பொதுமகளிர் எப்படித் தான் நாணமின்றி தழுவுகின்றனரோ?
செய்யுள் – 06
” உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்”
விளக்கம்: இயல்பாகவே கொடைத் தன்மை உடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்வியேயாகும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவில் சிறந்த கூரிய வாளைப் போல யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.
செய்யுள் – 07
“கருங்கொள்ளுங் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டாறாம் ஊரன் ஒருங்கொவ்வா
நன்னுதலார்த்லதோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்”
விளக்கம்: ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங் கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ரூபாய்க்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம். அதுபோல முழுவதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியை உடைய பொது மகளிரை அனுபவித்த அழகிய மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான்.
செய்யுள் – 08
“கொடியவை கூறாதி பாணநீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை”
விளக்கம்: பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே. ஏனெனில் தலைவனுக்கு உடுக்கையின் இடது பக்கம் போல பயன்படாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலது பக்கம் போல அவருக்கு பயன்படும் பொது மகளிர்க்கு சொல்.
செய்யுள் – 09
“சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரான்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்”
விளக்கம்: கோரைப் புற்களை பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும். குளிர்ச்சியான வயல்கள்ஙசூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் நானே! இப்போது தீப்பொறி எழுமாறு பொது மகளிரின் கொங்கைகள் மோதப் பெற்று சந்தனம் கலைந்த தலைவனின் மார்பை பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் நானே!
செய்யுள் – 10
“அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பரும்பொய் உரையாதி, பாண கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை”
விளக்கம்: பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலையை அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவான் என்ற பொய்யான சொற்களை கூறாதே. ஏனெனில் நாங்கள் கரும்பின் கடைசி கனுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கனுக்களைப் போன்ற பரத்தையரிடம் சொல்.
– மா கோமகன்