நிழலாகிப்போன நிஜமே – அம்மா கவிதை
அந்த நாள்
நன்றாகவே விடிந்தது…
எவரும் எழவில்லை
நீ மட்டும் வழக்கம் போல்..
எழுந்தாய், நடந்தாய்,
பார்த்தாய், சிரித்தாய்,
சட்டென சாய்ந்தாய்..
மெல்ல சரிந்தாய்…
ஒன்றும் புரியாமல்
அனைவரும் துடிக்க
நீ மட்டுமே அமைதியாக.. nizhalaana nijam amma kavithai
அரைமணி நேர
அவசர பயணத்தில்
மருத்துவமனையில் நாம்..
அனைத்தும் அறிந்த
மருத்துவர்
அலட்டிக் கொள்ளாமல்
உமையாள் உமை
இன்னொரு நோயாளி
என நினைத்து
என் பணி பத்திற்கு
என காக்க வைத்தார்…
பதற்றம் இருந்தும்
நெடுநாள் மருத்துவர்
எல்லாம் அறிந்த நம்மவர்
என நம்பி நாளிகை
நகர்த்திட இன்னும்
அமைதியாகவே நீ…
எப்படியும் அங்கேயே
அனுமதிக்க போகிறார்கள்
என மாற்று உடை
முதல் தேவை
அனைத்தும் எடுத்து
திரும்பினோம் மீண்டும்
உனை பார்க்க…
விழி திறக்காது
வழிந்த உன் கண்ணீர்
உணர்த்தியது
இனி இமைகள்
எனறும் இணைந்தே
என்பதோ… புரியவில்லை..
மருத்துவ
சோதனையில்
நாடித்துடிப்பில்
நிலையில்லை என்றுரைக்க
முதல் முறை மெல்லிய பயம்…
அரை நாள் கடக்க
இனி எம்மால்
முடியாதென
வைத்தியர் வழியனுப்ப
வழியின்றி,
நகரின் பெரு
மருத்துவமனைக்கு
விரைந்தோம்… nizhalaana nijam amma kavithai
அவசர பிரிவில்
தீவிர சிகிச்சை..
சொந்தங்கள் கூடின..
தக்க பதிலில்லை..
காக்க துணிவில்லை…
அழைத்த வைத்தியர்
அதிரக் கூறியது
இதயத்தில் அடைப்புண்டு
காப்பது கடினம்,
கன நொடியும்
காத்திட வேண்டாம்
மாற்றிடுங்கள் வேறிடம்..
முதன் முதலாய்
அவசர ஊர்தியில்,
அலறல் சப்தம் அடங்க
அடுத்த அவசர பிரிவில்…
ஆலோசனை வழங்கிவிட்டு
கூட்டிச் சென்றவர்களால்
காலனை காக்க வைத்தது
வெறும் மூன்று மணி நேரம்…
தீவிர சிகிச்சையில்
எங்கள் கடவுளை
காப்பாற்ற முடியவில்லை..
நம்பவே யாருமில்லை..
இருட்டிய உலகில்
தனிமையில் கூட்டமாய்..
இந்த நொடி எல்லோர்
தலையிலும் இடி…
மெத்தனம் உன்
உயிரை குடித்ததோ..
இன்று வரை குற்ற
உணர்வோடு நான்..
அரை மணி நேரம்
முன்பே வந்திருந்தால்
நிலை மாறியிருக்கும்
என்றார்..
ஒருவேளை
இருந்திருப்பாயோ இன்றும்…
இந்நாள் எள்ளளவும்
மறையவில்லை…
எல்லாம் முடிந்து
எட்டாண்டு உருண்டது…
இன்னும் வாழ்கிறாய் நீ
எங்கள் எல்லோருக்குள்ளும்…
மரணத்தின் வலியில்
நீ துடித்ததை விட
எங்களை இனி யார் காக்க
என கலங்கியதே அதிகம்..
என் குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்கிட
ஆசைப்பட்டாய்…
அவசரப்பட்டு விட்டாயே..
அம்மா உன் செல்ல மகனுக்கு
இன்னுமோர் மகனுண்டு..
எல்லோருக்கும் நீ
புகைப்படத்தில் மட்டுமே
சிரிக்கின்றாய்…
எமக்கெல்லாம் எது
பிடிக்கும் எனவறிந்து
உடனளிப்பாய் உணவாகினும்
உடை, அடை, நிதி எதுவாகினும்..
எழுந்தவுடன்
இடத்திற்கே தேநீர்..
குளிக்க வெந்நீர்..
நேரம் தவறாது
உணர்வோடு உணவு,
பள்ளிக்கு வழியனுப்பி
திண்பண்டம் தினித்திடுவாய்..
தீர்ந்திடுமோ என்று அடிக்கடி
அடுப்படி புகுந்திடுவாய்..
சரிபாதி பங்கிட்டும்
உமதையும் தந்திடுவாய் ..
புட்டு பிரியனென
தட்டு நிரம்பி
நான் ருசிக்க,
ரசிப்பாய் இன்னும் கொஞ்சம்
எடுத்து கொடுத்து..
இரவு இரண்டாகியும்
கதவு திறக்கும் தட்டாமல்,
தானும் உறங்காது
தோசை கல்லையும் உறங்கவிடாது
இன்னும் வேண்டுமா
என கேட்க உனக்கு நிகர் நீதானம்மா..
எளிதில் நம்பும் உமை
ஏமாற்ற திட்டமிட
தேவையில்லை…
நான் பெரிதாய்
உதவவில்லை உமக்கு..
விட்டதில்லையே நீ..
ஊருக்கு , வங்கிக்கு,
கோவிலுக்கு வைத்தியத்திற்கு
அழைத்தால் வருவேன்..
சில சமயம் பிடிக்காமலும்..
சன்மானம் பெற்றே
சில வேலைகள் செய்வோம்..
சளைக்காமல் நீ ஓடிய ஓட்டங்கள்
இன்றெமக்கு வலிக்கிறது..
வாசல் வழியனுப்பா காலத்தில்
பேருந்து நிறுத்தத்தில்
கரம் பற்றி கையசைத்து
பத்திரமாக சென்று வாருங்கள்
என கூறிடும் அத்திப்பூ..
நின் துணையால்
எங்கும், எதற்கும்
கையேந்தி சென்றதில்லை
கரம்கட்டி நின்றதில்லை…
சச்சரவுகள் வரும்
மறுநாள் இப்படி நடந்ததா என்ன
என மறந்து இயல்பாய்
தொடரும் நும் கலைகள்
மெல்ல மறைகிறது..
இன்றைய நிலைபோல்
தன்பிள்ளைகளுக்கு மட்டும்
அன்னையல்ல நீ..
எல்லோருக்கும் சோறுண்டு,
வரவே இல்லா நிலையிலும்
வரவேற்றாய் அன்போடு..
இதனால்தான் இத்தனை
நண்பர்கள் எனக்கு..
நின் அருமை பெருமைகளை
சொல்ல மாளாது…
தந்தையை இழந்தோம்,
நீ மாலுமியானாய்…
எல்லோரையும்
கரை சேரக்க துடித்தாய்…
விதி வலியது..
நீ கற்றுக் கொடுத்த நீச்சல்
எல்லோரையும் கரைசேரக்கும்..
எங்கள் சரித்திரம்
குலதெய்வம் சாரதாம்மா..
என்றும் உன் நினைவு மாறாதம்மா..
உனை காக்கும் அறிவு எட்டவில்லையே,
இனியெப்படி கைமாறு செய்ய
நீங்கா வலிகளுடன்
என்றும் உன் செல்லப்பிள்ளை
வாவி.ச.சீனிவாசன்.
அம்மா,
இன்னும் வைத்திருக்கிறேன்
உனக்கு பிடித்த
என்னிரு சக்கர வாகனத்தை,
வழக்கம் போல்
பின்னிருக்கையை
உனக்கும் ஒதுக்கி…
வருவாயா……..
– சீனிவாசன், திருப்பூர்
Its really nice. i havent read this type of kavithai. After reading this poem கலங்க வச்சிட்டு… awesome அண்ணா….
என் நட்பு வட்டம் தாண்டிய முதல் எழுத்தாக்கம்.. முகமறியா முதல் வாசகராகிய தங்களது
கருத்துக்கு மிக்க நன்றி…
தாயின் நினைவு வருகிறது அண்ணா