ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்
மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu
பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போது
நம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி ஊஞ்சலாடும் பல கவிதைகள் நிறைந்த தொகுப்பே கவிஞர் மு மேத்தா அவர்களின் இந்த “ஒரு வானம் இரு சிறகு” இன்னும் சிறப்பான கவிதைத் தொகுப்பு.
கும்மியடிக்கும் வார்த்தைகள் என்ற கவிதைகளில் தொடங்கும் இத்தொகுப்பு வாழலாம் வா என்ற கவிதையில் நிறைவாகிறது.
“கூடிக் கூடி
கும்மியடிக்கும்
சொற்களின்
கும்மாளத்தில்
உண்மை
முண்டி அடிக்க முடியாமல்
மூச்சுத் திணறுகிறது”
இந்த வரிகள் இக்கவிதைத் தொகுப்பில் நான் மிகவும் ரசித்த வரிகள்.
மேலும் ஜப்பானியக் கவிதை வடிவத்தில் சில என்று ஒரு ஒன்பது கவிதைகளை எழுதி இருப்பார் கவிஞர்.
அதில் நான் ரசித்த வரிகள்..
“காதல் யாத்திரைக் கடிதங்களில் அஞ்சல் தலைகளாய் ஒட்டப்படுவது உதடுகள்”
“பதவிக்காக வலை விரிக்கப்பட்டது..
பதவியும் வலையாய் விரிக்கப்பட்டது..
கண் விழித்தால் தேசத்தை காணவில்லை”
“வாடிக்கையாளர்களை வரச் சொல்லுங்கள்..
அலுவலகம் முழுவதும் ஒரே குப்பை..
காசு கொடுக்காமல் தூசும் நகராது..”
ஜப்பானிய வடிவில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இத்தொகுப்பில் அற்புதம் மட்டுமல்ல ஆழமான சிந்தனையை தூண்டும் வரிகளாக சொல்லப்பட்டது மிகச்சிறப்பு.
நீ..தீ.. இந்தத் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை கோபம் பேசும் வரிகளாய் …
“நியாயங்களின் விலை
இங்கே
அதிகமாகிவிட்டது…
எனவேதான்
அதை வாங்க
இயலவில்லை”
இந்த உண்மை வரிகள் கவிஞரின் கவிதைகளை கைத்தட்ட வைக்கின்றது..
தலைகள் என்ற தலைப்பில் மு.மேத்தா எழுதிய வரிகள் சபல மனிதர்களை படம் பிடித்துக் காட்டும் அற்புத வரிகள்.
“இராமனாகத்தான்
வீட்டிலிருந்து
வெளியே வந்தான்!
வீதியில்
அடுத்த வீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான்”
ஆம் பல முகமூடிகளை கிழிக்கும் அற்புத வரிகள்…
விழாத விழா என்ற தலைப்பில் மேத்தா அவர்கள் எழுதியவர் இன்னும் மனதில் மரமாய் நட்டுக் கொண்டு இருக்கிறது… இதோ அவ்வரிகள்…
“இங்கே
மரம் நடு விழாக்களை
நடத்த வேண்டாம்..
இனிமேல்
மனிதர்களை நடுகிற
விழாக்களை நடத்துவோம்..
சிலவை விட்டு வைப்பதை விட நட்டு வைப்பதே
நல்லது”
என்ன கோபமான வரிகள்..
தையற்காரிகள் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள வரிகள் வெகு அழகு..
“‘தையல்’
வகுப்புக்குப் போனேன்
கிழிந்து விட்ட
இதயத்தை
கையில்
பிடித்துக் கொண்டு”
உண்மையின் வெளிச்சம்
ஆஹா… இப்படியெல்லாம் கற்பனை வளத்தையும் உச்சத்தில் பல வரிகள் இத்தொகுப்பு முழுவதும் நிரம்பி உள்ளது.
எதிர்நீச்சல் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உண்மையின் வெளிச்சம்.
“அலுவலகக் கோப்புகளில்
அதிகாரிகளின்
பேனாக் கடப்பாறைகள்
கிணறு தோண்டுகின்றன…
முகம் தெரியாத ஏழைகள்
அதில்
மூழ்கிப் போகிறார்கள்…
நிறையப் பணம் உடையவர்களோ
ஆனந்தமாக
நீச்சல் அடிக்கிறார்கள்”
எத்தகு வரிகள் இவ்வரிகள் வாழ்க்கை பலருக்கு இது போன்ற எதிர்நீச்சலாகவே அமைந்து விடுகிறது.
வாழலாம் வா என்ற கவிதையின் கடைசி வரிகள் கலங்கரை விளக்கமாய் எனக்குத் தென்படுகிறது.
“தங்கக் கனவுகளை தரைமட்டமாக்கிவிட்டு
சின்னஞ்சிறு வீடு கட்ட
செங்கல் சேகரிக்கலாம்”
இவ்வாறு “ஒரு வானம் இரு சிறகு”அல்ல..பல சிறகுகள் அற்புதமாய் சிறகடிக்கும் மேத்தா எனும் கவிப்பறவையின் நல்ல தொகுப்பு இது… – oru vanam oru siragu
இத் தொகுப்பை வாசித்தும் சிறகடித்து நான் உயரே உயரே உயரே பறக்கிறேன்… நீங்கள்?
நூல் தேவைக்கு 044-24364243.
– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
அருமையான விமன்சனம்… மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் ஆவல்…வாழ்த்துகள் அண்ணா
சகோதரர் திரு.சக்தி வேலாயுதம் அவர்கள் விமர்சனம் மிக அருமை..அவர் அள்ளித்தெளித்த கவிதை சாரல் மிகவும் சுகமானது.சிறகுகள் மிக அழகு.
அருமையான விமர்சனம்
அருமையான விமர்சனம்! தான் ரசித்த கவிதை வரிகளை எடுத்துச் சொல்லி இருக்கும் விதம் பாராட்டுதலுக்கு உரியது. பாராட்டுக்கள்! 💐💐💐
நூலே கவிதையானால் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கும் அளவிற்கு விமர்சனம் அருமையாக உள்ளது..
புத்தக விமர்சனம் மிகவும் நன்றாக உள்ளது