பாடம் – சுவாரசியமான சிறுகதை

சுமைதாங்கி தொடர் வாயிலாக நமது மனதில் இடம் பெற்ற அனுமாலா அவர்களின் அடுத்த சுவாரசியமான சிறுகதை – paadam sirukathai

“அம்மா” – அருணின் குரல். எங்கிருந்து கூப்பிடுகிறான்?. மடிக்கணினியில் வேலையாக இருந்த கவிதாவுக்கு திடீரென்று அவன் குரலை கேட்டவுடன் சிறிது பயத்துடன் வெளியே ஓடி வந்தாள் .

அது அடுக்கு மாடி வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு .கவிதாவும் அவள் கணவன் பிரபாவும், ஒரே மகன் அருணும் இருப்பது எட்டாவது மாடியில். கணவனும் மனைவியும் ஒரு ஐ. டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அருண் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டில் இருந்த படியே வேலைபார்த்து வந்தனர். அருணும் ஆன்லைன் வகுப்பு, ஹோம்ஒர்க் என்று இருப்பான்.

மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம் வெளியே செல்வான். அந்த குடியிருப்பின் உள்ளேயே ஒரு மணி நேரத்திற்கு சைக்கிள் விடுவான் . பிறகு அவனாகவே உள்ளே வந்து விடுவான் .யாருக்கும் அவனால் தொந்தரவு கிடையாது . எதற்கும் அடம் செய்ய மாட்டான் . கவிதாவின் சொல்லை அப்படியே கேட்பான் . அவனால் கவிதாவுக்கு ஒரு தொல்லையும் கிடையாது . இன்னும் சொல்லப் போனால் அவன் அவளுக்கு வீட்டு வேலைகளில் கூட உதவி செய்வான் .

திடீரென அவன் குரல் கேட்டவுடன் வெளியே ஓடி வந்தாள் கவிதா. அவன் எங்காவது விழுந்து விட்டானா , அடி பட்டு விட்டதா என்ற பயத்தோடு வந்தவள் அவன் வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் சற்று நிம்மதி அடைந்தாள். “என்னடா”? – கவிதா கேட்டாள் . அம்மா , கீழே இருக்கிற ஏ-4 வீட்லே ஒரு பாட்டி தனியா இருக்காங்க.

பாட்டியா! யார் அது

அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் . வாங்கம்மா போயி ஹெல்ப் பண்ணலாம். – அருண் . பாட்டியா! யார் அது?. யார் வீட்டுக்கும் அவங்க கூப்பிடாம போக கூடாதுன்னு சொல்லிருக்கேனேல்ல. – கவிதா.

எனக்கு அவங்களை ரொம்ப நாளா தெரியும். எனக்கு ரொம்ப பிரெண்ட். முன்னாடி ஸ்கூல் போறப்ப, சாயங்காலம் வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் அவங்களோட பேசுவேன் . அவங்களுக்கு இங்க யாரும் இல்லம்மா. அவங்க பொண்ணு லதா அக்கா லண்டனில் இருக்காங்க. நானு, பாட்டி ,அவங்க மூணு பெரும் வீடியோ கால்ல பேசுவோம் .நான் அவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கேன் .

இங்க இருக்கிற சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பாட்டிக்கு பிரட், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு வருவேன். நான்தான் அந்த பாட்டிக்கு “லோக்கல் கார்டியன்” அப்படின்னு லதா அக்கா சொல்வாங்க – அருண்.

ஒரே ஆச்சரியம்

கவிதாவுக்கு ஒரே ஆச்சரியம். தன மகனுக்கு ஒரு வயதான பாட்டி பிரெண்டாக இருப்பதும் அவன் அவர்களுக்கு உதவி செய்வதும் அவளுக்கு புதிய தகவல். அந்த பாட்டியின் தனிமைக்கு அவன் ஒரு மருந்தாக இருப்பது அவளுக்கு ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் பெருமையாகவும் இருந்தது. இப்போ என்ன ஆச்சுடா அவங்களுக்கு? – கவிதா. அவங்க நான் பெல் அடிச்சப்போ கதவை திறக்கலை. சைடுல உள்ள சந்தில் போயி, ஜன்னல் வழியாக பார்த்தேன். அவங்க அப்படியே சோபாவிலே ஒரு மாதிரியா சாஞ்சுகிட்டு இருக்காங்க. அதான் உங்களை ஹெல்ப்புக்கு கூப்பிட்டேன். நாம போயி பார்க்கலாம் வாங்க – அருண்.

அருணுடன் கீழே சென்ற கவிதா, இரண்டு மூன்று முறை காலிங் பெல் அடித்தும், கூப்பிட்டு பார்த்தும் அவர்களிடமிருந்து பதில் எதுவும் இல்லாததால்,செக்யூரிட்டிக்கு போன் செய்து வரவழைத்தாள். அவர்கள் மறு சாவியுடன் வந்து கதவை திறந்து உள்ளே போய் பார்த்தார்கள். பாட்டி மயக்கமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் முதல் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுதே, அருண் பக்கத்தில் டி பிளாக்கிற்கு ஓடினான்.

கொரோனா நோய் தொற்று

அங்கே இரண்டாவது மாடியில் பாட்டியை எப்போதும் பார்க்கும் டாக்டரம்மாவை கூப்பிட சென்றான். அந்த டாக்டர் இல்லாததால் அவரது கணவர் (அவரும் ஒரு டாக்டர் தான்) உடனே வந்து பாட்டியை பரிசோதித்தார். உடனே தான் வேலை செய்யும் தனியார் ஆஸ்பத்திருக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். கொரோனா நோய் தொற்று இருப்பதால், யாரும் கூட வர முடியாத நிலையில் அவரே பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு ஆம்புலன்சில் பாட்டியை ஏற்றிக்கொண்டு சென்றார். கவிதாவிற்கு போன் செய்வதாகவும் கூறினார் – paadam sirukathai.

கவிதாவும் அருணும் திரும்பி வீட்டிற்கு வரும் பொழுது “அந்த டாக்டரை எப்படிடா கூட்டிகிட்டு வந்தே? – கவிதா.

அவர் ஒய்ப் ஒரு டாக்டரம்மா. அந்த ஆன்டி எப்போவும் வாரம் ஒரு முறை வந்து பாட்டியை பார்ப்பாங்க. அவங்க நம்ம டி ப்ளாக்லே தான் இருக்காங்க. அது எனக்கு சட்டுன்னு ஞாபகம் வந்துச்சா, அதான் உடனே ஓடிப்போய் கூப்பிட்டேன்” என்றான் அருண். இதை கேட்ட கவிதாவுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. மூன்றாவது வகுப்பு படிக்கும் அவனுக்கு ஒரு பாட்டியின் தோழமை. அவர்களுக்கு அவன் லோக்கல் கார்டியன் என்று சொல்லிக்கொள்வதில் ஏற்பட்ட பெருமிதம். லண்டனில் இருக்கும் லதாவுடன் அவனது வீடியோ பேச்சு இவை எல்லாமே கவிதாவுக்கு அருணை பற்றிய ஒரு புது பார்வையை ஏற்படுத்தியது. அதை யோசிக்கையில் திடீரென்று அவளுடைய தோல்வி அவளுக்கு புரிந்தது.

அவளுக்கென்று ஒரு சமுதாய கடமை உண்டு என்ற எண்ணம் தோன்றியது. இதனிடையே அருண், அம்மா, லண்டனில் இருக்கும் அக்காவுக்கு நான் போன் பண்ணி பாட்டியை பற்றி சொல்லணும்” என்றான். அவனது
பொறுப்பான இந்த செயல், அவளுக்கு பொட்டில் அடித்தாற்போல இருந்தது.

இதனிடையே,பாட்டியை அழைத்து சென்ற டாக்டர் கவிதாவை போனில் அழைத்தார். “பாட்டியை ஐ சி யு வில் சேர்த்துள்ளேன். அனால் கவலைபட எதுவும் இல்லை. சரியான சமயத்தில் அவர்களை கவனிக்க முடிந்ததனால் ஒரு ஆபத்தும் இல்லை. குட்டி பையன் அருணுக்கு தான் நன்றி சொல்லணும்” என்று கூறினார். தனது மகனின் நட்பும் சமயோசிதமான செயலும் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கிறது என்கிற உண்மை உறைத்தவுடன் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப் போனாள் கவிதா – paadam sirukathai.

லாக் டௌன் அளித்த பாடம்

அந்த குடியிருப்புக்கு அவர்கள் வந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தது. ஆனால், யார் எங்கே இருக்கிறார்கள் என்கிற அடிப்படை விஷயம் கூட தெரிந்து கொள்ளாமல் எப்பொழுதும் தனது வேலையே பற்றியே யோசித்துக்கொண்டு வேலை நேரம் போக மீது நேரத்தில், கைபேசி, கணினி,பேஸ்புக், டிவ்ட்டெர், வாட்ஸஅப் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு உரைத்தது. தன் மகனுடன் அதிக நேரம் செலவிடாததால், அவன் அங்கு ஒரு பாட்டியிடம் வைத்திருக்கும் நட்பை பற்றிக் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்த தவறு புரிந்தது.

அவள் மகனிடமிருந்து அவள் கற்றுக்கொண்ட பாடம் இது இந்த பாட்டியை போல இன்னும் எதனை பேர் தனியாக இருக்கிறார்கள்? ஏன் தனது தாய், தந்தை, மாமியார், மாமனார் கூட இப்போது லாக் டவுனில் தனிமையில் இருப்பது அவளுக்கு தெரிந்ததே. அவர்களிடம் அவள் பேசுவது கூட குறைவுதான். தனது மகனும் இந்த லாக் டௌனும் அவளுக்கு அளித்த பாடம் இது.

வீட்டினுள் நுழைந்தவுடன் தனது கைபேசியில் தனது மாமியாரை முதலில் அழைத்தாள் கவிதா……

– அனுமாலா சென்னை

You may also like...

11 Responses

 1. Rajakumari says:

  லாக் டவுன் நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது

 2. தி.வள்ளி says:

  மிக அருமையான. கருத்து..காலத்திற்கேற்ற ஒன்றும் கூட…சமுதாய அக்கறையை ஒரு சிறுவன் கண்ணோட்டத்தில் விளக்கியது பாராட்டிற்குரியது..வாழ்த்துகள் சகோதரி.

 3. Kavi devika says:

  அருமை. வாழ்த்துகள்

 4. Kasthuri says:

  காலத்திற்கு ஏற்ற கருத்து மற்றும் கதை, அருமை சகோதரி.

 5. இரா. இரவிக்குமார. says:

  சிறுவர்கள் தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நடப்பவைகளையும் மட்டுமல்லாது தேவையேற்பட்டால் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் சமயோசிதம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளை மட்டுமன்றி தங்களைச் சார்ந்தும் சுற்றியும் இருப்பவர்களை முழுவதும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதனால் நிறையப் பிரச்சனைகள் எழுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான சிறுகதை. ஓர் அறிவுரை எள்ளலுடன் எதார்த்மாக எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்.

 6. R. Brinda says:

  அருமையான கதை!

 7. என்.கோமதி says:

  தாய்க்கு பொறுப்பை உணர்த்திய மகன் அருணுக்கு வாழ்த்துக்கள்.

 8. இரா. இரவிக்குமார. says:

  சிறுவர்கள் தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நடப்பவைகளையும் மட்டுமல்லாது தேவையேற்பட்டால் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் சமயோசிதம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளை மட்டுமன்றி தங்களைச் சார்ந்தும் சுற்றியும் இருப்பவர்களை முழுவதும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதனால் நிறையப் பிரச்சனைகள் எழுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான சிறுகதை. ஓர் அறிவுரை எள்ளலுடன் எதார்த்தமாக எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்.

 9. ஸ்ரீதர் says:

  காலத்துக்கு ஏற்ற கதை அருமையாக கொண்டு சென்று உள்ளார் வாழ்த்துக்கள் அனுமான மேடம் மேடம்

 10. பாரிஸா அன்சாரி says:

  உயர்ந்த கட்டிடங்கள்,
  ஊனமுற்ற, சுயநல, எண்ணமுடன், மக்கள்!

  நிர்ப்பந்தம் எனக் கூறும்,
  சந்தர்ப்பவாதிகள்,

  கரிசனம் தொலைத்த வாழ்வு,
  நிசர்சனமான அவலம் !

  பிஞ்சு மனம் அறியுமா,
  வஞ்சகம்?

  தந்தைக்கு, உபதேசம் செய்த தமிழ் கடவுள்!
  தாயை உணர வைத்த தனயன்!

  அருமையான,
  அவசியமான,
  நீதிக்கவிதை, உலகுக்கு
  போதிக்கட்டும்!

 11. அனுமாலா says:

  கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் எனது நன்றி.

  மேலும் எழுத ஊக்கத்தை கொடுக்கிறது. மீண்டும் நன்றி.