பண்டைக்காலத்தில் விழா – ஆடிப்பெருக்கு

விழா என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ரொம்ப காலமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு விழாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.சோழர் காலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே அது.. – பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு

பல இடங்களில்…முக்கியமாக பொன்னியின் செல்வனில் அதை பற்றி படித்த போது மனக்கண்ணில் இவ்விழாவைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.அதை தங்களுடன் பகிரவே மனம் விழைகிறேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழ நாட்டில், மிக விமர்சையாக கொண்டாடப் பட்ட விழாக்களில் ஆடிப்பெருக்கு மொன்று. பொங்கல் திருவிழாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கும் உண்டு.

ஆடிப்பெருக்கு திருவிழாவின்போது சோழநாட்டின் நதிகள் அனைத்தும் இரு கரை தொட்டு ஓடும். அவை போய்ச் சேரும் ஏரிகளில் தண்ணீர் ததும்பி நிற்பது கண்ணுக்கு அழகான ஒரு காட்சியாம்…

திருவிழாவிற்கே உரிய அங்காடிகள்.. அதில் திரளும் மக்கள்.. பலாச்சுளை, வாழைப்பழம், கரும்புச் சுழிகள், பலவகை தின்பண்டங்கள்.. அவற்றை மொய்க்கும் சிறுவர் கூட்டம்.இது ஒரு பக்கம் என்றால் …

மல்லிகை, முல்லை, தாமரை, அல்லி, செண்பகம், தாழம்பூ என மலர் குவியல்கள் ஒரு பக்கம் ..

பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு

திருவிழாவிற்கே உரிய அம்சமாய் ஜோதிடர்கள், ரேகை சாஸ்திர வல்லுநர்கள், குறி சொல்லுவோர், விஷக்கடி மந்திரிப்போர் என இவர்களும்… இவர்களிடம் குறி கேட்கும் மக்களும் என குறைவில்லாத கூட்டம் ஒரு பக்கம் ..

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப கழனிகளில் நடவு…விதை தெளிப்பு .. ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க…ஆடி மாத கோடை வெயில் தெரியாமலிருக்க குடியானவர்களும், குடியானவப்பெண்டிரும் தங்கள் இனிய குரலில் பாடி அலுப்பு தெரியாமல் வேலை பார்க்கும் பாங்கு ..

கிராமங்களிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டம். கூட்டாஞ்சோறு, சித்ரான்னமும் கட்டிக்கொண்டு கூட்டமாக உட்கார்ந்து ஆற்றங்கரையில் மகிழ்வுடன் கமுகு மட்டையில் அவற்றை இட்டு உண்டு மகிழும் மக்கள் கூட்டம் .

கட்டிளம் காளைகளும் ,அவர்கள் காதலிக்கும் கன்னியர்களும் ஒருபக்கம் ..காளையர்கள் புத்தம் புது உடையில் உலா வர …கன்னியர்களை விதவிதமான ஆடைகள், விதவிதமான அணிகலன்களை அணிந்து கொண்டு அவர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
விதவிதமான மணம்கொண்ட மலர்கள் கன்னியர்களின் கூந்தலை அலங்கரித்தன..வயது முதிர்ந்தவர்கள் கூட புத்தாடை அணிந்து விழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர்.

சிறுவர்கள் தென்னங்குருத்துகளில் தேர் கட்டி இழுத்து மகிழ ,
சிறுமியர் நதி நீரில் கால் நனைத்து மகிழ்ந்தனர் ..

மனக்கண்ணில் இத்தகைய ஒரு அரிய ஆடிப்பெருக்கு விழாவை கண்டு கழிக்கும் போது அது எத்தகையதொரு இனிமையான உற்சாகமான சந்தோஷமான விழாவாக கொண்டாடி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. காலப்போக்கில் அதன் கொண்டாட்டம் சுருங்கி போனது நமக்குத் தெரிந்ததே ..

அக்காலத்தில் இப்படி இயற்கையோடு இயைந்து கொண்டாடிய விழாக்கள் எவ்வளவு மனமகிழ்ச்சி அளித்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.இயற்கையினின்று வெகு தூரம் விலகி வந்து விட்ட நாம் இப்போது கொண்டாடும் விழாக்களின் தன்மையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களும், மனதை ரொம்பவே உறுத்துகின்றன.காலத்தின் மாற்றத்தில் இதுவும் ஒன்று..

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...