புலம் பெயர்ந்தவன் – சிறுகதை
ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிஜ சம்பவங்களை தழுவி ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய சுவாரசியமான சிறுகதை தான் “புலம் பெயர்ந்தவன்” – pulam peyarnthavan sirukathai
காலை வெயிலின் வெளிச்சம் சன்னல் வழியே முகத்தில் பட்டது. வெப்பமும், வெளிச்சமும் ஒரு சேர பட்டவுடன் சட்டென்று உறக்கம் கலைந்தது ஜீவாவிற்கு. மணி என்னவாயிருக்கும்.. நெற்றியை சற்றே அழுத்தி தேய்த்தவாறு கடிகாரத்தை பார்த்தான்.. மணி 8.10 எனக் காட்டியது. எரிச்சலாக இருந்தது… ச்சே இதுவே வழக்கம் போல் நடைமுறை இருந்திருந்தால் இந்நேரம் ஆபிஸ் போயிருந்திருப்பேன்.. இப்போதோ.. கொரோனா எனும் கொடூரப்பேயின் கோரத் தாண்டவத்தில் உலக நாடுகளே நடுநடுங்கி விட்டது.
இறப்பிற்கு பின் கட்டும் நாடிக்கட்டு போல்
என்ன தொற்றோ..கருமமோ..சில நாடுகளில் ஏராளமான உயிர்பலி.. குணமடையவும் கூடும் என்றாலும் அச்சுறுத்தலும்.. அவஸ்தைகளும் அதிகமே. உலக அளவில் ஊரடங்கு ஏற்படுத்திய உக்கிரப்பேய் இந்த கொரோனா , எத்தனை பேர் இதில் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் நினைக்கவே மனம் அஞ்சியது.. எல்லோரையும் முகமூடியில் பார்க்க சகிக்கவில்லை மேலும் சிலரோ மூச்சு முட்டுகிறது என்றோ வேறு எனவோ மாஸ்க்கை நாடியில் இறக்கி வைத்திருப்பதை பாக்கும் போது இறப்பிற்கு பின் கட்டும் நாடிக்கட்டு போல் தோன்றி சிரிப்பை உண்டு பண்ணும். ரோட்டில் நடக்கும் போது சில வயதான பெண்கள் தங்களின் புடவைத் தலைப்பை வாயருகே வைத்துக் கொண்டு ஏதோ துக்க வீட்டுக்கு செல்வது போல் அவர்கள் செல்வது இன்னும் காமெடி.. எல்லோரையும் சூழற்றி போட்டு விட்டது கொரோனா.
கடைநிலை தொழிலாளி
இந்த வாழ்க்கை பயணம் போகும் திசைதான் அறியமுடியவில்லை. வயிற்றைக்கட்டி வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர்கள் இப்போது வாயை கட்டியும்.. அவர்கள் மட்டுமல்ல இந்த கொரோனாவால் எல்லாருமே வாயைக் கட்டிக் கொண்டுதான் வாழும் சூழல். ஏனோ மனம் சட்டென்று கதிரை நினைத்தது.. என்னவானான் தெரியவில்லையே.. இந்நேரம் எவ்வளவு தூரம் கடந்திருப்பான்.. சற்று கவலையான யோசனை தோன்றியது.
‘கதிர் ‘ ஜீவாவின் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு கடைநிலை தொழிலாளி.. எட்டோ.. ஒன்பதோ வரைதான் படித்திருந்தான்.. அவர்கள் பணிபுரிவது நகரின் பெரிய ஆயத்த ஆடை நிறுவனம்.திருப்பூரின் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்று.
அதில் ஜீவா மார்க்கெட்டிங் சீனியர் மேனேஜர்.. ஆனால் எந்த வித ஈகோவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாய் பழகும் சுபாவம் உடையவன் என்பதாலோ என்னவோ கதிர் ஜீவாவிடம் மிகவும் ஒட்டிக்கொண்டு விட்டான்.
முழு பொறுப்பும் அவனிடம்
24 வயது, துறுதுறு முகம், வசீகரமான பெரிய கண்கள்.. எந்நேரமும் ஏதோ கனவில் ஆழ்ந்தது போல் இருக்கும். உதடுகள் ஏதாவது ஒரு சினிமாப்பாடலை சீட்டி அடித்துக் கொண்டே இருக்கும்.அதிலும் குறிப்பாக இளையராஜாவின் ‘கண்மணியே பேசு..’பாடல் அது அவனின் கயலுக்கு மிகவும் பிடித்தமானது.அந்த பாடல்.. சில நேரங்களில் அந்த பாடலில் மூழ்கி கூப்பிடுவது கூட கேட்காமல் இருப்பான்.கேட்டால் அந்த பாடல் அவன் கயல் அவனருகே இருப்பது போன்ற உணர்வைத் தரும் என்பான். பெரிய பெரிய துணி பண்டல்களையெல்லாம் சுலபமாக தூக்கி விடுவான். எதனால் அவனைப் பிடித்தது என்று தெரியவில்லை ஜீவாவிற்கு, ஏதோ இனம்புரியாத பாசம் அவனிடம்.
குடோன் பக்கம் சென்றால் அவனை பார்த்துவிட்டுத்தான் வருவான்.. அவனும் ஜீவா சார்.. ஜீவா சார் என்று உயிரை விடுவான். அவனுக்கு நாகர்கோவிலுக்கும்.. திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள சிறு கிராமம், சிறு வயதிலேயே அப்பா தவறி விட்டார்.. அதன்பின் அம்மா, அக்கா, தங்கை என குடும்பத்தைக் காக்கும் முழு பொறுப்பும் அவனிடம்தான்.
கடன் பாக்கி
பதினாலு வயதிலிருந்து வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். அக்காவின் திருமணதில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக உள்ளூரில்பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு.. இங்கே உள்ள உறவினர் ஒருவர் மூலமாக திருப்பூரில் இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்திருந்தான்.
இங்கு வந்து ஏறக்குறைய நான்கு வருடங்கள் இருக்கும். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தங்கச்சிக்கும் திருமணம் செய்து வைத்து விட்டான்.அதற்கும் ஜீவாவிடம்தான் இருபதாயிரம் ரூபாய் கடனாக வாங்கி இருந்தான்.. கொஞ்ச கொஞ்சமாக திருப்பி கொடுத்தது போக இன்னும் சில ஆயிரங்கள் மட்டும் பாக்கி இருந்தது.
கொரோனா எனும் கோரப்பேய்
அவனுக்காக ஊரில் அவன் மாமன்மகள் கயல்விழி காத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு மிகவும் இஷ்டம்.. சிறு வயது முதலே இருவரும் விரும்பி வந்தார்கள். சில நேரங்களில் அவன் கயலைப் பற்றி பேசுவான்..
வாயை திறந்தாலே ஆயிரம் முறை அத்தான்.. அத்தான் என்பாள் சார்…
அவளின் குரல் என் காதுகளில் கேட்டுகிட்டே இருக்கும் .. என்று அவளைப்பற்றி சிலாகித்துச் சொல்வான். அப்போது அவன் கண்களில் தெரியும் கனவுகள் அவன் அவளுடன் கொண்டிருந்த நேசத்தை சொல்லும்.. – pulam peyarnthavan sirukathai
‘ஜீவா சார் என் கல்யாணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும் சார்’ என்பான்.
போனமுறை ஊருக்கு போகும் போது ஜீவாவிடம் தான் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக்கொண்டு அவனின் கயலுக்கு அழகான புடவை வாங்கிக் கொண்டு போனான். ஊருக்கு போகும் போது இருக்கும் உற்சாகம் திரும்பி வரும்போது இல்லை. ‘ஏன் இப்படி இருக்கிறாய்’ எனக் கேட்கையில் ‘கயல்’ ரொம்ப அழுது விட்டாள் சார்.. அவள் அப்பா அவளுக்கு வேறு வசதியான மாப்பிள்ளை பார்க்கிறாராம்.. வாழ்ந்தா உங்ககூடத்தான் வாழ்வேன்.. இல்லேன்னா செத்துருவேன் அத்தான்னு சொல்றா.. அவ இல்லாம நானும்தான் எப்படி வாழ்வேன் சார்.. இந்த வாழ்க்கைல எனக்குன்னு இருக்கற ஒரே சந்தோசம் அவதான்.. எனக்கும் அவளை விட்டுட்டு வர மனமே இல்லை சார்.
ஆம்பள பிள்ளை வேணுமாம்
ஊரில் இருக்கும் கடனையும் உங்கள் கடனையும் அடைத்து விட்டால்.. அவளை திருமணம் செய்து கொண்டு விடுவேன் சார் என்றான்.
பரவாயில்லை கதிர் உன் திருமணதிற்குப் பின் எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடு போதும்… என்றாலோ .. இல்லை சார் கடங்காரனாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என் மாமாவிடம் சபதம் செய்திருக்கிறேன்.. இந்த ஏழைகளுக்கு ரோசம் மட்டும்தானே சார் சொத்து.. என்பான். ஆனால் சீக்கிரம் அவளைக் கட்டிக்கிட்டு பிள்ளை பெற்று சந்தோசமா வாழணும் சார்..கயலுக்கு என்னைப்போல் ஆம்பள பிள்ளை வேணுமாம் .. அததான் சொல்லிட்டு இருப்பா..
எல்லாம் சரியாகிவிடும்
என்னை பொறுத்தவரை மனசளவுல நாங்க ரெண்டு பேரும் இப்போவே புருஷன் பொண்டாட்டியாதான் வாழுறோம் சார்.. என் அம்மாவையும் சந்தோசமா பார்த்துக்கணும்.. அது வாழ்க்கையே போராட்டமா போச்சு சார்.. ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்துச்சு எங்கள.. இனியாவது அத நல்லா பார்த்துக்கணும் அதுக்கு பிடிச்ச சாப்பாடு கொடுத்து சந்தோசமா வைச்சிக்கனும் என்பான். அதைச் சொல்கையில் அவனின் கண்கள் கலங்கி கண்ணீர் தேங்கியிருக்கும்.. கேட்கும் நமக்கே மிகவும் சங்கடமாக இருக்கும்.. எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்லுமளவிற்கு பீல் பண்ணி விடுவான்.
இப்போது இந்த கொரோனா அச்சுறுத்தலால் நாடளவில் ஊரடங்கு பிறப்பித்திருந்தார்கள். ஒரு வாரம்.. இரு வாரம் என்று நீண்டுகொண்டே போய் மாதக் கணக்கில் ஆனது.. முதலில் பெரிதாக ஒன்றும் தோன்றாவிட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.. எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும் வெளியே செல்ல முடியவில்லை.
போன மாசம் அரைச் சம்பளம்.. இந்த மாசம் அதுவும் இல்லை
கதிரைப்போல் ஆட்கள் கிட்டத்தட்ட ஒரு அறுபது எழுபதுக்கும் மேற்பட்டோர் வெளியூரிலிருந்து வந்து இங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தங்குமிடம் எல்லாம் கம்பெனியே தந்து விடும். இந்த கொரோனா ஊரடங்கினால் முதலில் மூன்று வேளை உணவு இரண்டு வேளையாகிப்போனது..
அன்று ஒரு நாள் அப்பாவிற்கு மெடிக்கலில் மாதாந்திர மாத்திரை வாங்கச் சென்ற போதுதான் கம்பெனியின் சீனியர் அக்கௌன்டன்ட் சாரதி சாரை பார்க்க நேர்ந்தது.
“என்னப்பா இப்படி ஆகிப்போச்சே ” என்று அங்கலாய்த்தார்.. என்னைக்கு இது முடியப்போதுன்னு தெரியலையே.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஜீவா.. நம்ம கம்பெனி பெர்மனெண்ட் ஆட்களுக்கு மட்டும் தான் சம்பளம் போட்ருக்காங்க மத்தவங்களுக்கு போன மாசம் அரைச் சம்பளம்.. இந்த மாசம் அதுவும் இல்லை.. ஏதோ நம்மள மாதிரி பெர்மனெண்ட் ஆட்களுக்கு மட்டும் தான் ரெகுலர் சம்பளம்..
கம்பெனில வேலை நடக்காததால் ரொம்ப நஷ்டத்தில் போகுது.. இந்த வாரக்கூலி ஆட்களுக்குலாம் சம்பளம் கிடையாது.. சாப்பாடு போடவும் முடியலயாம் . எல்லோரையும் அவங்கவங்க ஊருக்கு போக சொல்லிட்டாங்களாம்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஜீவா.. அடுத்து நமக்கு என்ன நிலைமை வரப்போதோ..அங்கலாய்த்தவாறே மாஸ்க்கை சரி செய்தபடி நகர்ந்து போனார்.
யாராக இருக்கும்
அவர் சொன்ன செய்தியைக் கேட்டதில் இருந்து நெஞ்சம் பதை பதைத்தது.. அய்யோ அவர்கள் என்ன செய்வார்கள்.. பொழைப்புக்காக குடும்பத்தை விட்டு இங்கு வந்தவர்கள்.. இப்போதோ வேலை இல்லை.. வருமானம் இல்லை ஏன் சாப்பிட உணவும் இல்லை.. என்ன வாழ்க்கை இது… அவர்கள் இந்த வேலை.. வருமானத்தை நம்பியே.. பொறுப்புகளையும், கடன்களையும், கனவுகளையும் கொண்டவர்கள்.. கதிர் ஞாபகம் வந்தது என்னவானான் தெரியலையே.. வீட்டிற்கு வந்தவுடன் போன் செய்தால் அவன் நம்பர் சுவிட்ச் ஆப்..
எப்படி தொடர்பு கொள்வது தெரியவில்லை எங்கும் வெளியே போக முடியவில்லை.. குறிப்பிட்ட எல்லை தாண்டினால் போலீஸ் காரர்கள் அடி பின்னி விடுவார்கள்.. அது மட்டுமல்ல வேறு விதமாயும் தண்டனை தருவார்கள்.. யார் என்றாலும் பார்ப்பதில்லை. அதற்கு பின்னும் அவன் நம்பர்க்கு ட்ரை செய்தால் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. இப்படியான சூழலில் நேற்று முன்தினம்காலை பதினோரு மணியளவில் திடீரென காலிங்பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது..
யாராக இருக்கும் யோசனையோடு கதவைத் திறந்தால்…..
ஆளே அடையாளம் தெரியாதவாறு.. கதிர்.. கதிரேதான்..
ஆளே அடையாளம் தெரியாதவாறு கலைந்த தலையும்.. ஷேவ் செய்யாமல் கரடு முரடாய் வளர்ந்திருந்த தாடியும்..சற்று மெலிந்து இருப்பது போல் தோற்றமும்..
பசியோடு வெகு தூரம் நடந்து வந்த சோர்வும் சேர்ந்து கொள்ள.. உருமாறியிருந்தான். – pulam peyarnthavan sirukathai
கதிர்.. எப்படி இருக்கே.. எப்படி இவ்வளவு தூரம் நடந்து வந்தே..
அவன் சற்று மூச்சு வாங்கிக் கொண்டு குடிக்க தண்ணீர் வேண்டும் என்பது போல் சைகை செய்தான்.. அதற்குள் என் மகன் அருண் தண்ணீர் எடுத்து வந்திருந்தான்..
கதிர் தண்ணீரை வாங்கிக் கொண்டு வாசலின் வெளிப்புறம் சென்று முகத்தை தண்ணீர் தெளித்து அலம்பினான்… பின் தண்ணீரை மெது மெதுவாய் குடித்தான். காலிங்க் பெல் ஒலி கேட்டு உள்ளறையில் இருந்து வெளியே வந்த சசி கதிரை பார்த்தவுடன் சற்று முகம் மாறினாள். இந்த கொரோனா பீதி மனிதர்களின் அடிப்படை குணத்தையும் அசைத்து பார்த்து விடுகிறது.
‘உள்ளே வா கதிர்..’ என்றேன்.
பசி மட்டும்தான்
சசியின் முகமாற்றத்தை உணர்ந்த கதிர்.. இல்ல சார் வரல.. உள்ள வரக்கூடாதுல்ல.. அய்யோ… கதிர் அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ உள்ளே வந்து.. முதலில் கை கால்களை சோப்பு போட்டு கழுவு போதும்.
வேண்டாம் சார்.. உங்களை பார்க்கத்தான் வந்தேன்.. நான் இங்கேயே இருக்கேன்.. அவன் குரல் பசியின் களைப்பில் தேய்ந்து ஒலித்தது.. கதிர் இப்போ உள்ளே வரப்போறியா இல்லையா.. சற்று அதட்டலாய் சொல்லவும்
மெதுவாக உள்ளே வர யத்தனித்தான்.. கால்கள் ஒத்துழைக்க மறுத்து தடுமாறின.. பின் மெதுவாக சமாளித்து உள்ளே வந்தான்.. தடுமாற்றமாய் நடந்தவனை உட்காரச் செய்து அவன் கண்களையே பார்த்தேன்..
எப்போதும் தெரிகிற கனவுகளை மீறி பசி மயக்கம் தெரிந்தது..
வேலை இல்லை.. காசு இல்லை
சாப்பிட வா கதிர்..
முதலில் சாப்பிடு பிறகு பேசிக்கலாம்..
இல்லை சார்.. சாப்பாடு வேணாம்..
அவசரமாய் மறுத்தான்..
ஏன் கதிர்… என்னாச்சு..
அதுவரை அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா.. ‘ஏன்பா உன்ன பார்த்தால் பல நாள் பட்டினி கிடந்தவன் போல இருக்கே.. ஏன் சாப்பாடு வேணாம்னு சொல்றே.. என்றார். சட்டென்று அழ ஆரம்பித்தான் கதிர்.
அதிர்ச்சியாக பார்த்த அருணை உள் ரூமிற்கு செல்லும்படி சைகை செய்தேன்.. அருண் அவனைப் பார்த்த வாறே அங்கிருந்து அகன்றான். சசியும் முதலில் இருந்த முகபாவனை மாறி அதிர்ச்சியாகவும், பரிதாபமாகவும் அவனைப் பார்த்தாள். மெல்ல கதிரின் தோளில் கை வைத்து அழுத்தியவாறு ‘அழாதே கதிர்.. என்னாச்சு சொல்லு ‘என்றேன். சார்.. வேலை இல்லை.. காசு இல்லை.. பசி மட்டும்தான் எங்களுக்கு இருக்கு.. தாங்க முடியல சார்.. ரொம்ப பயமா இருக்கு சார்.. கதறினான் கதிர்.
கதிர் கண்கள் கலங்க
இந்த பசியும்.. வறுமையும் அவனை இப்படி ஆக்கிவிட்டதே… மனம் வெதும்பியது. ‘சரி கதிர் சாப்பிடுப்பா மற்றத அப்புறம் பேசிக்கலாம்.. ‘
சார்.. எங்க கூட இருந்தவங்கள்ள பாதிக்கு மேல அவங்கவங்க ஊருக்கு போய்ட்டு இருக்காங்க சார்.. இப்போ நாங்களும் கிளம்பிகிட்டு இருக்கோம் சார்.. எப்படிப்பா… எந்த பஸ்சும் ஓடலயே எப்படி… சார்.. ஏதாவது சாப்பிடலாம்னா கடையும் இல்ல… காசும் இல்ல.. கடைசியில் பிச்சைக்காரர்களாக ஆகிருவோமோன்னு பயமா இருக்கு சார்.. அதான் எல்லாரும் நடந்தே அவங்க ஊருக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கு மட்டும் உங்களை பார்க்கணும் போல இருந்துச்சு சார்.. அதான் பார்த்துட்டு.. அது மட்டும் இல்ல உங்களுக்கு தர வேண்டிய பணத்தையும் நிச்சயமாக தந்துருவேன்னு சொல்லிட்டு போக வந்தேன் சார்..
‘கதிர் என்ன பேச்சுஇது… பணம் பற்றி பேசுகிற நேரமா இது.. ‘
எல்லாம் சரிஆகி விடும்.. நம்பிக்கை மட்டும் இழக்காதே..
முதலில் சாப்பிடு கதிர்… – pulam peyarnthavan sirukathai
கண்கள் கலங்க பார்த்தான் கதிர்..
சார்.. என்னை தப்பா நினைக்காதீங்க என்னோட சேர்ந்து பதினெட்டு பேர் இருக்காங்க எல்லாரும் சாப்பிட்டு ரெண்டு மூணு நாளாச்சு.. வெறும் டீ மட்டும் குடிச்சிட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்கோம்.. மிச்சம் இருக்கற உயிர் போறதுக்குள்ள ஊர் போய் சேரணும்.. நான் மட்டும் சாப்பிட என் மனசு இடம் தரல சார் மன்னிச்சிருங்க.. ‘ என்றான். கதிர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்து போனான். ஆறுதலாக அவன் கைகளை பற்றிக்கொண்டேன்.
இருபத்தைந்து பேருக்கும் சாப்பாடு
‘சரி கதிர் அவங்களுக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்றேன்.. இப்போ நீ சாப்பிடு என்றேன்.. கதிர் மெதுவாக சாப்பிட்டான்..
என் பார்வையின் குறிப்பறிந்து சசி கிச்சனுக்குள் சென்றாள். அவளுக்கு விருப்பம் இல்லாவிடினும்… சக மனிதனின் பசி இயல்பான இரக்கத்தைத் தர சமையல் செய்யப் போனாள். அப்பாவும் அருணும் சேர்ந்து அவளுக்கு உதவி செய்யப்போனார்கள்.. சில மணி நேரங்களில் இருபத்தைந்து பேர் சாப்பிடும் அளவிற்கு சாம்பார் சாதமும் மாங்காய் ஊறுகாயும் ரெடி. எல்லோருமாகச் சேர்ந்து பார்சல் போட்டு.. பின் ஒரு ஜூட் பையில் வைத்து கொடுத்தேன்.
கதிர் இந்தா… என்று என் பர்சில் இருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தேன். சார்.. பணம் வேண்டாம் சார் இதுவே அதிகம்.. அவன் உணவுப் பையை பார்த்தான்.. பரவாயில்லை கதிர் உங்களுக்கு வழிச்செலவுக்கு வைச்சிக்கோ.. ‘வேண்டாம் சார் ‘
பிடி கதிர்.. இது கடனோ.. தர்மமோ அல்ல.. என்னைப் போன்ற சக மனிதனின் பசியை உணர்ந்த வலி.. வாங்கிக்கோ.. முதலில் போன் டாப்அப் பண்ணு சரியா.. கண்கள் கலங்க என் கைகளைப் பற்றியவன் சட்டென்று கரங்களில் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். அப்பாவிற்கும், சசிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அருணைப் பார்த்து கையாட்டி விட்டு சென்றான். தளர்வான அவன் நடையைப் பார்க்கையில் வருத்தமாக இருந்தது.. எப்படி ஊர் வரை நடந்து செல்வானோ.. நேற்று மாலையும்.. இரவும் போன் பண்ணியிருந்தான்..சோழவந்தான் பக்கம் சென்று விட்டதாக.. இரவு ஓய்வெடுத்து விட்டு காலையில் மீண்டும் பயணத்தை தொடரப்போவதாக சொன்னான். கூடவே மணியும்.. சேகரும் பேசி ஆளாளுக்கு நன்றி சொன்னார்கள்..
உடல் நசுங்கி பலியாகிட்டாங்க
மனம் நடப்பு நிகழ்விற்கு வந்தது. சரி குளித்து விட்டு வரலாம்… பாத்ரூமிற்குள்நுழைந்தேன். வீட்டிற்குள் அப்பா டிவி பார்த்துக் கொண்டிருந்தார். விடாமல் செல்போன் ஒலித்துக் கொண்டே இருந்தது. ச்சே.. இந்த வீட்டில் போன் எடுக்கக் கூட ஆள் கிடையாது. அவசரமாய் துவட்டிக் கொண்டு வெளியே வந்து போன் எடுத்தால் கட்டாகி இருந்தது. கதிரின் நம்பர்தான்…மூணு மிஸ்டு கால் காட்டியது.
என்னவாயிருக்கும்…
மீண்டும் அதற்குள் கால் வந்தது.. அட்டென்ட் செய்தவுடன் எதிர்முனையில் ஹலோ.. என்று குரல் பரபரத்தது..
இது கதிரின் குரல் இல்லையே..
‘ஹலோ கதிர்… கதிர்… தானே
ஹலோ… நீங்கதான் ஜீவாவா..
‘ஆமா… நான் ஜீவாதான் நீங்க யாரு.. கதிர் எங்கே..
ஹலோ…
சில நொடிகள் அமைதிக்குப்பின்
ஹலோ.. நான் சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷன்லருந்து இன்ஸ்பெக்டர் பேசறேன்..
இன்ஸ்பெக்டரா.. என்ன.. எதற்கு..
ஒன்றுமில்லை.. நீங்கள்தானே ஜீவா..
ஆமா நான்தான்… கதிர் எங்கே என்னாச்சு..
நீங்க உடனே புறப்பட்டு இங்கே சோழவந்தான் வாங்க.. உங்களுக்காக உங்க ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிருக்கோம்.. அவங்க உங்களை கூப்பிட்டு வருவாங்க..
சார் என்னாச்சு.. இங்கே சாலையில் படுத்து தூங்கின எட்டு பேர் வேகமா வந்த கார் ஏறி உடல் நசுங்கி பலியாகிட்டாங்க.. ஒரு ரெண்டு பேர் லேசான காயத்துடன் இருக்காங்க.. ஆனால் அவங்க பலத்த அதிர்ச்சியோட இருக்காங்க.. சோ..அவங்ககிட்ட இருந்து எந்த விவரமும் தெரிஞ்சிக்க முடியல.. உங்க ஊர் பேரும் கம்பெனி பேரும் வாங்கவே ரொம்ப கஷ்டப்பட்டோம்.. இந்த போன் கொஞ்சம் தள்ளி கிடந்தது. – pulam peyarnthavan sirukathai
இ-பாஸ்
உங்க நம்பர்தான் லாஸ்ட் காண்டக்ட்ல இருந்தது..உங்க நம்பர் வச்சி உங்க அட்ரஸ் எல்லாம் எடுத்தாச்சு.. இன்னும் கால் மணி நேரத்துல அங்கே ஸ்டேஷன்ல இருந்து வந்துருவாங்க.. ரெடி பாஸ்ட் என்றவாறு.. இணைப்பை துண்டித்து விட்டார்.. கை கால்கள் பட படவென ஆடியது.. அய்யயோ என்ன இப்படி மனம் துடித்தது.. உடை மாற்றுவதற்குள் போலீஸ் கார் வந்து விட்டது. சசியிடமும், அப்பாவிடமும் சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.. திக்கித் திணறி ஒருவாறு சொல்லி முடித்தேன். அப்பா ஆபீஸ் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லிக்கறேன் என்றார். அங்கு போய் சேரும் வரை மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. இங்கு உடன் வந்த அதிகாரியும் ரொம்ப வருத்தப்பட்டார்.
‘ச்சே.. பாவம் சார்.. பஸ்லாம் வராதுன்னு நினைச்சி சாலையில் போய் படுத்துருக்காங்க..அப்ப பார்த்து… ரெண்டு பேர் உறவினருக்கு உடம்பு சரியில்லன்னு இ-பாஸ் வாங்கிட்டு கார்ல ரொம்ப வேகமா வந்திருக்காங்க…
லையில் சரியான வெளிச்சம் இல்லாததால் இவங்க படுத்திருந்தது தெரியல போல… கார் படுத்திருந்தவங்க மேல ஏறி போய் ரொம்ப தள்ளிதான் பிரேக் பிடிக்காம மரத்தில மோதி நின்னுருக்கு…
அதுலயும் ஒருத்தர் பலி.. இன்னொருத்தர் ரொம்ப கவலைக்கிடம்…
அவர் போக்கில் சொல்லிக் கொண்டே வந்தார். ரொம்ப கொடூரம்.. கேட்க முடியவில்லை.
முகத்தில் அமைதி தவழ
ஒருவழியாக அங்கு போய் சேர்ந்தோம்..கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றார்கள். கால்கள் நகர மறுத்து தயங்கியது. வரிசையாக உடல்கள்.. முழுவதும் போர்த்தப்பட்டு இருந்தது.. முதலில் ஒரு துணியை விலக்கி காட்டினார்கள்… மணி..
என்றவாறு கண்களை மூடிக்கொண்டேன். இன்னும் அதிகமாய் எனக்கு உடல் நடுங்கியது. யார் குற்றம் இது.. உடல் சிதறி இருக்கும் அவர்களை பார்க்கும் வலு என்னிடம் இல்லை. கால்கள் துவண்டது.கண்ணீர் பெருக்கெடுத்தது.
அடுத்த உடல் அருகில்.. சென்றதும் துணியை விலக்கினார்கள்.
அங்கே..
அங்கே முகத்தில் அமைதி தவழ வானத்தை வெறித்து பார்த்தவாறு கதிர்… கதிரேதான்.. – pulam peyarnthavan sirukathai
திறந்திருந்த அவன் கண்களில் ஒரு கண்ணில் அவன் அம்மாவைக் குறித்த கவலையும்… மறு கண்ணில் அவனின் கயல் மீதான காதலும்… நிறைந்தவாறு.. அவன் புலம்பெயர்ந்திருந்தான்..
– ப்ரியா பிரபு, நெல்லை.
Good
மனம் வலிக்கிறது.
இல்லாதவர் பாடு எப்போதும் திண்டாட்டம்தான்.
Super akka
வலி மிகுந்த உணர்வு தந்தது புலம் பெயர்ந்தவன்
மிகவும் மனதை அசைத்து விட்டது.நெகிழ்ச்சியான கொடுமையான அந்த சம்பவத்தை …உங்கள் கதையின்
வரிகளால் மேலும் நெகிழச் செய்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் சகோதரி
அருமை வாழ்த்துக்கள்…சில உண்மை நிகழ்வுகள்…💐💐💐💐
புலம் பெயர்ந்தவன் சிறுகதையைப் பாதிக்குமேல் படிக்க கண்ணீர் தடையாகி விட்டது. கொரோனாவின் கொடூரமான நிகழ்வுகளை கண் முன் காட்சிப் படுத்தியது பிரியா பிரபுவின் எழுத்து வடிவம். அதிலும் கடைசியாக அந்த வார்த்தை ‘புலம் பெயர்ந்திருந்தான்’ இதயத்தை பெயர்த்துக் கொண்டு போய்விட்டது.
Hearty congratulations Priya Prabhu. Very realistic about the crisis of COVID 19.How people were affected both mentally,physically and emotionally is well described . All the very best for your future projects Priya..
அருமையான கதை.. சரளமான நடை..நெகிழ வைத்த நிகழ்வுகள்…மனதைத் தொட்டது. பாராட்டுகள் சகோதரி!
மிகவும் பாவமாக இருக்கிறது
காலத்தின் சூழலுக்கேற்ற கதை அருமை
சராசரி மனிதனின் ஆசையும், தவிப்பும், தேடலும் சிதைந்து போயின..
நெகிழ வைத்த நிகழ்வு புலம்பெயர இயலவில்லை கதையை விட்டு….