நான்கண்டபெருநாள் – ரமலான் சிறப்பு கவிதை
நான்கண்டபெருநாள்
பெறுவோர் விட தருவோர் நிறைந்ததாலே இது பெருநாளோ? Ramzan Special Kavithai
ஆஸம்மா நானியின் வருகை
ரமலான் மாதத்தை நினைவூட்டும்
அன்று பள்ளி முடிந்து வீடு புகவும்
நானியின் வருகையும் சரியாக இருக்கும்
உரிமையுடன்
தேவி ஒரு பாத்திரம் குடு என
பகிர்ந்துவிட்டு வீடு திரும்புவாள்…
அந்த
பச்சரிசி, சின்ன வெங்காயம், தக்காளி,
வெந்தயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்
பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா,
தேங்காய் பால், நெய் விட்ட
கமகம நோம்பு கஞ்சியை
மாலைநேர பசி ஆற்ற…
பெருநாள் பொழுது
நாகூர்ஹனிபாவின்
வெண்கல குரலுடன்
இறைவனிடம் கையேந்துங்கள்
என வேகவைத்த சேமியா, பழம், பால்,
முந்திரி, திராட்சை, ஏலக்காய்
சர்க்கரை இட்ட பால் சேமியாவுடன் விடியும்
இதுவும் நானியின் பக்குவமே..
நானும் புத்தாடை அணிந்து வீதி சென்றால்
பிள்ளையார் கோவில் வாசலில் தூரிக்கடையும்
தேவாலய வாசலில் வளையல், பாசிக்கடையுமாய்
தர்காவே கலகலக்கும்…
கூட்டம் கூட்டமாய்
கைலியும், வெள்ளை சொக்காயுமாய்
தலையில் குல்லாவும், கழுத்தில் கைகுட்டையுடன்
கபஸ்தான் தொழுகைக்கு சொந்தங்கள் போக
துபாய் மல்லிகை பூ செண்டு வாசம்
நடந்த பாதையெங்கும் மூன்றுநாள் மணமணக்கும்
அன்று முபாரக், நசுருதின்,
இப்ராம், யாசின், இப்ராஹிம்
பாரிஷா, ரிஜுவானா, பாத்திமா வரிசையில்
நானும் அக்பராகவோ, முகமதாகவோ
திரிவேன் வேறுபாடின்றி
நானியின் பிரியாணி
வீட்டு வாசலின் கல்லுக்கூட்டி
அடுப்புமூட்டி அண்டவைத்து
எண்ணையை விட்டு சூடாக்கி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் வெடிக்க
வெங்காயத்தை நீளமா வெட்டியிட்டு
பொன்னிறமானதும்
இஞ்சி, பூண்டு விழுதுடன் கிளறி
கொத்த மல்லி, புதினா, தக்காளி சேர்த்து
மீண்டும் மீண்டும் கிளறி விட்டு
மிளகாய் தூள், மஞ்சள் போடியென மணமேற
ஆட்டுக்கறியை சேர்த்து தயிர் அடித்து ஊற்றி
எண்ணெய் மிதக்க வேகவைக்க
அதே நேரம்
ஒருபுறம் ஊறவைத்த அரிசியை
எலுமிச்சை சாறு, நெய்யுடன்
முக்கால் பதத்தில் வேகவைத்து
மறுபுறம் செய்த பிரியாணி செலவை சேர்த்து
கிளறி நெய் ஊற்றி
தீ கங்கை முடிமேல் இட்டு
தம் போட்டு பதினைந்து நிமிடம் பொறுக்க
பாசத்தாலே நானி பரிமாற
சுவைக்கே சுவையை கூட்டும்
தாயாய் பிள்ளையாய்
என்பர்….
அது சத்திய வாக்கு
பிரிவினை பேச்செல்லாம்
வெறும் பித்தலாட்டமாகவே தெரிகிறது…
இன்றும் ஆஸம்மா நானியின்
இயல்பான வருகையால்…
இவண்
அந்தியூரான்
(ஸ்ரீராம் பழனிசாமி)