சண்டை போடாதீங்க சிறுகதை

“ஏங்க! இந்த சம்பந்தி எப்படி பேசுறாருன்னு பார்த்தீங்களா? ” ஆரம்பித்தாள் சரோஜா.” இவர் பொண்ணு பண்ற தப்பை எப்படி நியாயப்படுத்தி பேசுறாரு பாருங்க… – சண்டை போடாதீங்க சிறுகதை

உலகத்தில இல்லாத அதிசயமா பொண்ண பெத்த மாதிரிதான்.
நாமளா வேலைக்கு போக வேணாம்னு சொல்றோம். நம்ம குடும்ப விஷயம் இவரு தலையிடறது என்ன நியாயம்? அப்படித்தான் போவா.. அவள் இஷ்டத்துக்கு தான் இருப்பான்னு சொல்றாரு…இவர் இப்படி இருக்கறதுனாலதான் இவர் பொண்ணும் ஒருத்தருக்கும் அடங்க மாட்டேங்குறா அவளுக்கு தோணுறதத்தான் செய்றா.என்னால வீட்டு வேலையும் பார்த்துட்டு இரண்டு குழந்தைகளையும் அந்த வயசான காலத்துல சமாளிக்க முடியுமா?”

“சரி விடு சரோஜா! காவ்யா பார்த்துக்கிட்டிருக்கா பாரு… அவளுக்கும் 8 வயசாச்சு… நடக்கிறது எல்லாம் புரியுது. இப்படி நீயும், அவரும் சண்டை போட்டுகிட்டிருந்தா நல்லாவா இருக்கு..”என்றார் சுந்தரம் மனவருத்தத்துடன்.

“அவளுக்கு புரிஞ்சா நல்லதுதான்..அதுக்காக ஒரேடியா பணிஞ்சு போக முடியாது” என்று கொதித்தாள் சரோஜா.

“இப்படி மாத்தி, மாத்தி சண்டை போட்டுகிட்டு இருந்தா தீர்வு கிடைக்குமா? ஏற்கனவே இந்த புள்ள மீனாவும், நம்ம பையன் கணேஷும் போடற சண்டையே தாங்க முடியல… இதில நீங்க சம்மந்தியும்,சம்மந்தியும் சண்டை போடுறீங்க..”

“என்னால உங்கள மாதிரி பொறுமையா பார்த்துகிட்டு இருக்க முடியாதுங்க ..”

“எனக்கும் அவர் பேசுவது கோபம் வருது சரோஜா! ஆனா என்ன செய்யமுடியும்? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிகிட்டிருந்தா, அதுக்கு ஒரு முடிவே இருக்காது.”

மறுநாள் காலை மீனாவும், கணேசனும் கிளம்பி வெளியே வந்தார்கள்.”அப்பா.. எனக்கு ஆபீஸ்ல லீவு வருது.. நாங்க ரெண்டு பேரும் குழந்தைகளை கூட்டிட்டு நாலு நாள் கொடைக்கானல் போலாம்னு இருக்கோம்.”

நேத்து பூரா சண்டை போட்டுட்டு வாரக் கடைசில கொடைக்கானல் போறேன்னு சொல்லும் புள்ளையை ஆச்சரியமாக பார்த்தார்.

மகனும், மருமகளும் கிளம்பிப் போய்விட, மீனாவுடைய அப்பா வந்தார். அவருக்கும் சரோஜாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் எழுந்தது. அவர் பேச… சரோஜா திரும்ப பேச… நடுவே சுந்தரம் புகுந்து தடுக்க வேண்டியதாயிற்று .
அவர் கோபத்தில் மகளை கூட பார்க்காமல் கிளம்பிப் போனார்.

காவ்யா பாட்டியிடம் வந்தாள். “பாட்டி போனவாரம் நீங்க எனக்கு ஒரு கதை சொன்னீங்களே நினைவிருக்கா…” என்றாள்.

“என்னடி கதை அது” என்றாள் கொதித்துக் கொண்டிருந்த சரோஜா.

“ஒரு தெருவில் இரண்டு குழந்தைகள் விளையாடும்போது சண்டை போட்டாங்க.. அந்த சண்டை பெருசா மாறி அவங்க ரெண்டு பேர் அம்மாக்களும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க…கடைசியில பார்த்தா சண்டை போட்ட குழந்தைகள் இரண்டும் சேர்ந்து ஒற்றுமையாக விளையாடிட்டிருக்க அம்மாக்கள் ரெண்டு பேரும் மட்டும் சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க”.

“அதுக்கு என்ன காவ்யா? நான்தான் இந்தக் கதைய சொன்னேன்.”

சுந்தரத்துக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. அதாவது குழந்தை என்ன சொல்லவர்றான்னா.. என ஆரம்பித்து தயங்க..

“சண்டை போட்ட அப்பாவும், அம்மாவும் சேர்ந்து கிளம்பி போயிட்டாங்க. இந்த வார கடைசியில் கொடைக்கானல் போக போறேன்னு சொல்லிட்டு…. நீங்களும்,அம்மா தாத்தாவும் மட்டும் ஏன் சண்டையை விட மாட்டேங்கறீங்க? நீங்கதானேசொன்னீங்க…பிள்ளைங்க சண்டையில பெரியவங்க தலையிடக்கூடாதுன்னு… அன்னைக்கு நீங்க சொன்னது உங்களுக்கும் பொருந்தும் தானே?” என்று கேட்டாள்
காவ்யா. – சண்டை போடாதீங்க சிறுகதை

அதிலுள்ள உண்மை புரிய சரோஜா தலைகுனிந்தாள்.’ உண்மைதானே… குழந்தைக்குத் தெரியும் நியாயம் எனக்கு தெரியவில்லை அவர் சண்டை போட்டாலும் நான் பேசாமல் போயிருந்திருக்கலாம்’ என்று தோன்றியது.

சில சமயம் தகப்பன் சாமியாய் மாறி குழந்தைகள் நமக்கு அறிவுரை கூறும் நிலை வந்துவிடுகிறது… மனதிற்குள் சிரித்துக் கொண்டார் சுந்தரம்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...