சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை
பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம் – Sila Pathaigal Sila Payanangal
இந்நூலில் சாதனை புரிந்த பெண்களின் சுவடுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஆணாதிக்க உலகில் பெண்கள் படும்பாட்டை நயமாகவும், நையாண்டியாகவும் அழகுற எடுத்துரைக்கிறார் .
டெல்லி பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, உயிரிழந்த நிர்பயாவின் இறுதிப் பயணம் தொடங்கிய நாளில், இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன் என்று கூறும் இவர்… நிர்பயாவின் மரணத்திற்கு கொதித்தெழுகிறார். ஒரு இளம் தளிரின் கனவு சில வல்லூறுகளால் சிதைக்கப்பட்டதை எண்ணி மனம் நொந்து போகிறார்.
நூறு அஸ்வமேத யாகம்
கார் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தபோது சந்தித்த உடல் பருமனான சாவித்திரி என்ற பெண்ணை பற்றி சிலாகித்துப் பேசும் இவர் …. ‘குண்டம்மா’ என்று பட்டப்பெயர் வைத்து எல்லோரும் கேலி பண்ணினாலும், ஆர்வத்துடன் டூவீலர் கற்றுக்கொண்ட அந்த பெண்ணை பற்றி கூறும் போது …. ” யாரும் என்னை அவமானப்படுத்த முடியாது அதை நான் அனுமதிக்காதவரை ” என்று காந்தி சொன்னதை இங்கு நினைவு கூறுகிறார் – Sila Pathaigal Sila Payanangal.
முதியோர் இல்லங்களை பற்றி கனவிலும் நினைக்காத ஒரு காலகட்டத்தில்.. ஆதரவற்ற முதியோர்களுக்கு…விச்ராந்தி என்னும் அமைப்பைத் தொடங்கி… அதை திறம்பட நடத்தி வரும் சாவித்ரி வைத்தி . அவர்களின் சிறப்பை .. நூறு நூறு அஸ்வமேத யாகம் நடத்தி விட்டார் என்று அழகாக கூறுகிறார்.
மேலும் இளம் வயதிலேயே விதவையான லஷ்மி அத்தை… உறவுகளில் உரசல்களை தன் அன்பெனும் அமிர்தத்தால், சரியாக்கி வாழ்க்கை பயணத்தை வழிகாட்டும் ஒளிக்கீற்றாய்விளங்கியதை நினைவுகூர்கிறார்.
முதல் பெண் மருத்துவர்
பிரசவ நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தை.. வலியின் உச்சம்… சுமையின்றி ஓடும் முயல்களுக்கும்… ஓட்டை சுமந்து நகரும் பெண் முயலுகளுக்குமான விசித்திர போட்டி வாழ்கை என்கிறார்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டும் சாதனையால் மிளிர்ந்த காலச்சுவடு எழுத்தாளர் சூடாமணி.. குடிப்பழக்கம் ஒரு நோய் இதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தியாவில் விதைத்த முதல் பெண்மணி சாந்தி ரங்கநாதன்… ஆசிட் வீச்சால் அவதிப்படும் அர்ச்சனா குமாரி .. அதற்கு நீதி கேட்டு சுப்ரீம் கோர்ட் வரை நடையாய் நடக்கும் அவரின் தன்னம்பிக்கை. பல இன்னல்களுக்கிடையே விளையாட்டு துறையில் சாதித்த பி டி உஷா.. மேரி கோம்ப்… முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி…. இன்னும் எழுதப்படாத கவிதையாய் பல பெண்கள்…. என இவரது சாதனைப் பெண்களின் பட்டியல் நீள்கிறது.
மங்கையர் மலரில் தொடராக வெளிவந்தபோது, பல நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இத்தொகுப்பு நூலாக முதல் பதிப்பு 2011 இரண்டாம் பதிப்பு 2015 .. மற்றும் பல பதிப்புகளை காணும் சிறந்த படைப்பாக திகழ்கிறது . பெண்களின் மனதை கவர்ந்த மிகச்சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை – Sila Pathaigal Sila Payanangal.
– தி.வள்ளி, திருநெல்வேலி
விமர்சனம் அருமை.. அப்புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தருகிறது.. வாழ்த்துகள்..💐💐
அழகான அருமையான விமர்சனம்
அருமையான விமர்சனம் அம்மா. வாழ்த்துகள்
“புதுமைப்பெண்” கண்ட பாரதி பெயர் கொண்டவர், எழுதிய நூலின் விமர்சனம்.
மெல்லினம் மீது வல்லின
வன்கொடுமை!
தாய்,, தமக்கை, தாரம், தங்க மகள்- பெண்தானே?
வர்ண பேதம்,” பாரத “கர்ணனைச்சிதைத்தது!
உறவு பேத, ஊழித்தாண்டவமோ, மகளிரிரைச் சித்திரவதை செய்கிறது!
என்று ஒழியும்,இந்த காமுகக்கபடம்?
சாதனைப்பெண்டிர் பட்டியலில்,இறை தந்த இசைவு காணீர்:
“இ”ந்தியா- இந்திரா காந்தி.
“இ”லங்கை-திருமதி பண்டார நாயகா.
“இ”ங்கிலாந்து-மார்கரட் தாட்சர்.
“இ”ஸ்ரேல்-கோல்டா மேயர்.
முழுவதும் படிக்கத் தூண்டும், இனிய விமர்சனம்!
புத்தகம் வாசிக்க தூண்டும் விமர்சனம்.. மிக்க நன்றி..
ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே ..