திருத்தலம் அறிவோம்

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம் பற்றி வாசிக்கலாம் – Sree Perathu Selvi Amman

Sree Perathu Selvi Amman

திருத்தலம் அறிவோமா

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அது போலவே கோயில் சிறியதாக இருந்தாலும் அம்பாளுடைய மகிமையும்… கோவிலின் பெருமையும் அளவிட முடியாதது.

பக்தர்களின் குறை தீர்க்கும் கண் கண்ட தெய்வம். எல்லா நாட்களிலும் பக்தர்கள் வந்தாலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அதிகம். தை மாதம் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கோயில் நடையடைப்பு கிடையாது. அன்று அன்னையை தரிசனம் செய்யாதவர்கள் திருநெல்வேலியில் மிகக் குறைவானவர்களே இருப்பார்கள் என்னும் அளவுக்கு கூட்டம் இருக்கும்.

ஸ்தல வரலாறு

திருநெல்வேலியில் அம்மன் பக்தர் ஒருவர் இருந்தார். நாடெங்கும் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று தங்கி அம்மனை தரிசித்து வருவது அவர் பழக்கம். அன்னையிடம் அது வேண்டும்… இது வேண்டும் என்று பிராத்திப்பதில்லை. அன்னையின் தரிசனம் மட்டுமே முக்கியமாக கருதினார்.வருடங்கள் ஓட.. பக்தருக்கு முதுமை வந்தது. உடல் நலம் குன்றி, கண்பார்வை குறைந்து, திருநெல்வேலியிலேயே தங்கிவிட்டார் .ஒரு நாள் அன்னை அவர் கனவில் வந்து” என்ன வேண்டும்” என்று கேட்க… பக்தர், “தாயே! நான் என்ன கேட்பேன்? நாடெங்கும் வந்து உன்னை தரிசித்தேன். இயலாமையால் இப்போது இருக்கும் இடத்திலேயே இருக்கிறேன். எனவே நீ என் பொருட்டு நான் இப்போது இருக்கும் இடத்திலேயே நீ எழுந்தருள வேண்டும். அந்த பாக்கியத்தை தரவேண்டும்” என்று வேண்டினார்.

தாமிரபரணி நதிக்கரையில்

அம்மனும் புன்னகைத்து,” உன் பக்தியை மெச்சுகிறேன் அருகில் தாமிரபரணி நதி ஓடுகிறதல்லவா.. அந்த நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் நீரின் ஆழமான பகுதியில் நான் விக்கிரக உருவில் உனக்காக காத்திருக்கிறேன்… நீரில் மூழ்கி எடுத்துகொள்” என்றாள். பக்தன் மகிழ்ந்தார் – Sree Perathu Selvi Amman.

மறுநாள் அதிகாலை தாமிரபரணி நதிக்கரையில் 3 அத்தி மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். நதியின் அடியில் தேவி இருந்ததாலோ என்னவோ தண்ணீர் உற்சாகத்துடன் நுரை எழும்ப ஓடிற்று. பக்தர் ஆற்றின் நடுவே, வேகமாக ஓடும் நீரில் அடித்துச் செல்லாமல் ஓர் எலுமிச்சைப் பழம் மட்டும் ஒரே இடத்தில் மிதப்பதை கண்டார்.

பேராத்து செல்வி பெயர்க்காரணம்

அவர் அந்த இடத்திற்கு நீந்திச் செல்ல, வெள்ளம் அவரை ஒன்றும் செய்யாமல் வழிவிட்டது. நீந்தி ஆற்றின் அடியில் அன்னை பராசக்தியின் விக்ரகத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டு வந்தார்.

அங்கேயே ஒரு சிறிய கூரை வேய்ந்து, அம்பாளை பிரதிஷ்டை செய்தார். தாமிரபரணி ஆற்றில் கிடைத்ததால் அம்மன் அதுமுதல் ‘பேராத்து செல்வி’ என்றழைக்கப்பட்டாள். சின்னக் கூரையின் கீழ் அமைக்கப்பட்ட ஆலயம் இன்று நல்ல உயரத்தில் மளமளவென்று பெரிதான ஆலயமாக மாறி இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்,பிரிட்டிஷ் துரை ஒருவர் தூக்கமின்மையால் அவதிபட்டு வந்தார் .சென்னையிலிருந்து கிளம்பி வந்த வழியில், நெல்லையில் தங்கினார். தூங்க முயற்சிக்கும்போது நித்திரையை கலைக்கும் விதமாக முரசு சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து நாதஸ்வர ஓசையும் எழும்ப,துரை எரிச்சலோடு என்ன ஓசையென வினவினார். “பேராத்து செல்வி ஆலயத்தின் இரண்டாம் நாள் கொடை விழா நடக்கிறது” என்று கூற… துரை கோபம் கொண்டு “உடனே அத்தனை பேரையும் வெளியே போகச் சொல்.. இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்கி விடுவேன்” என்று கூறி திருவிழாவை நிறுத்தினார்.

பேராத்து செல்வி அம்மன்

பேராத்து செல்வி சக்தி வாய்ந்தவள் என்பதால் அவர் கண் பார்வையைப் பறித்துக் கொண்டாள். துரை ஓடினார்…” தாயே! என்னை மன்னித்துவிடு! திரும்ப பார்வையை கொடு! “என்று கெஞ்சினார். இதே ஊரில் இருந்து, எட்டாம் நாள் திருவிழா அன்று அம்மனுக்கு பொன்னாலான கண்மலர் செய்து, பிரார்த்தனை செய்! உன் கண் பார்வை மட்டுமல்ல… உன் தூக்கமின்மை நோயும் மறைந்துவிடும்” என்று அம்மன் கனவில் கூற, உடனே விழாவை நடத்த சொன்னார் துரை.

அம்மன் முன் மனமுருகி இறைஞ்சினார். கண்மலர் தங்கத்தால் செய்து காணிக்கை செலுத்தினார். அவர் கண் பார்வை மட்டுமல்ல.. அன்று முதல் அவர் தூக்கமின்மை நோயும் குணமானது. இத்தனை சக்தி வாய்ந்தவள் பேராத்து செல்வி அம்மன்.

திருமணம் தடை, புத்திர தோஷம்

திருமணம் தடைபடுபவர்களும், புத்திர தோஷம் உள்ளவர்களும் பேராத்து செல்வியை செவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றி , வேண்டிக் கொண்டால் உடனே பலன் கிடைக்கிறது. அதேபோல தீராத நோய்களும் அம்மனை வழிபட்டால் தீரும். அதன் பொருட்டே செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் , பேராத்து செல்வி அம்மனின் அருள் பெற பக்தர்கள் திரளாக வந்து வேண்டிக்கொள்கிறார்கள்

நீங்களும் சமயம் கிடைக்கும்போது இத்திருத்தலம் வந்து அம்மனின் அருள் பெறுங்களேன்… – நன்றி தி.வள்ளி

You may also like...