தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 02
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02
திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.தியாகு அவருடைய நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் எடுத்து வருவார். ராமாயணம், மகாபாரதம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் போன்ற புத்தகங்களையும் எடுத்து வருவதுடன் மட்டுமல்லது..
புராணக் கதைகளையும் நிறைய மகளுக்கு கூறுவார்.அந்த சிறுவயதிலேயே, பாரதியார் பாடல்கள் பல நந்தினிக்கு மனப்பாடம்.இயற்கையிலேயே, நந்தினிக்கு குரல்வளம் நன்றாக இருந்ததால், பாரதியார் பாடல்களை தானே மெட்டமைத்துப் பாடிக் கொண்டே இருப்பாள்.தியாகுவும் வேதாவும் ஒரே மகள் என்பதால் அவள் பேரில் உயிரையே வைத்திருந்தார்கள்.
அவர்கள் குடியிருந்தது எட்டு வீடுகளை உள்ளடக்கிய ஒரு வளைவு வீடு…கீழே நான்கு வீடுகள் மேலே நான்கு வீடுகள் என மொத்தம் 8 வீடுகள்.நந்தினி துறுதுறுப்பாக இருந்ததால் அந்த காம்பவுண்டில் எல்லோருக்குமே அவளை ரொம்பப் பிடிக்கும் .அதுவும் வேதாவின் வீட்டிற்கு அடுத்த வீட்டு ரஞ்சினி… நந்தினியிடம் உயிரையே வைத்திருந்தாள்.
வேதாவும்,ரஞ்சினியும் உயிர் தோழிகளாக வெகு சீக்கிரத்தில் நன்றாக பழகி விட்டனர் .வேதா எங்கேயாவது வெளியே போக நேர்ந்தால், நந்தினியை ரஞ்சினியிடம் தான் விட்டுச் செல்வாள்.
சரண்யா அக்கா
கீழ் வீட்டில், அந்த காம்பவுண்டின் சொந்தக்காரர் வேதாச்சலம் -மங்களம் தம்பதி வசித்து வந்தனர். இருவருமே நல்ல குணமான மனிதர்கள்.அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் அவர்களுக்கும் நல்ல நட்புறவு நிலவியது. வேதாச்சலத்துக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இருவருமே பெரிய பிள்ளைகள் .மகள் சரண்யா கல்லூரி கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தாள் – tharaiyil vizhuntha meengal-02.
சரண்யா கலகலப்பான பெண்.முறையாக சங்கீதம் கற்றவள். அவளிடம் அந்த காம்பவுண்டில் நாலைந்து பிள்ளைகள் பாட்டு கற்றுக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்டில் எல்லோருடனும் பிரியமாக பழகுவாள்.காம்பவுண்ட் பிள்ளைகள் எல்லோரையும் அவ்வப்போது பாட்டு, டான்ஸ் என்று ஏதாவது சொல்லிக் கொடுத்து பண்டிகை நாட்களில் … எல்லோரையும் கூட்டி பிள்ளைகளை நடிக்க வைப்பாள். சரண்யா அக்கா என்றால் நந்தினிக்கு ரொம்ப பிடிக்கும்.
சரண்யாவின் அண்ணன் விஜய் அதற்கு நேர்மாறானவன். அவனுக்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை… அரியர்ஸ் நிறைய வைத்துக் கொண்டு, ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான். எப்போதும் ஏதாவது வம்பு வளர்த்துக் கொண்டு வருவதால் வேதாவிற்கு அவன் பெயரில் வெறுப்பு அதிகமாக இருந்தது. மற்ற பையன்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்ததால் அந்த காம்பவுண்டில் யாரும் அவனிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போய்விடுவார்கள். காம்பவுண்ட் பிள்ளைகள் மட்டும் அவன் அவ்வப்போது கலகலப்பாகப் பேசி கதைசொல்லி சாக்லேட் கொடுப்பதால் அவனிடம் விஜய் அண்ணா … விஜய் அண்ணா.. என்று பிரியமாக இருப்பார்கள்.
வேதா வேலையை முடித்துக்கொண்டு வெளியே வர, ரஞ்சினி காய்கறி வாங்கிக் கொண்டு அப்போதுதான் படியேறிக் கொண்டிருந்தாள்…
“ரஞ்சினி எங்க மார்க்கெட்டுக்கு போய்ட்டு வரியா? நீ போறது தெரிஞ்சா எனக்கு தக்காளி அரை கிலோ வேணும்… சொல்லிவிட்டிருப்பேன்”
“அதனால என்ன வேதா… நான் ஒரு கிலோ வாங்கியிருக்கேன். நீ அரைகிலோ எடுத்துக்கோ. அப்புறம் காலியானதும் வாங்கிக்கலாம். மார்க்கெட் கிட்ட தானே இருக்கு “என்றாள் ரஞ்சனி.
அப்போது ஓடி வந்த நந்தினி..” அம்மா! அம்மா! நான் சரண்யா அக்காகிட்ட பாட்டு கத்துகிறேன். கீதா, அபிராமியெல்லாம் அவங்க கிட்ட கத்துக்கிறாங்க நானும் கத்துக்கிறேன்.ரஞ்சனி அத்தை நீங்க அம்மாகிட்ட சொல்லுங்க” என்றாள் ஆசையோடு .
“அதெல்லாம் வேணாம் நந்தினி. பாட்டு நீயே தான் நல்ல பாட்டுறியே “என்றாள் வேதா.
“சரண்யா அக்கா நல்ல கத்து கொடுக்கிறாங்க.. நான் அவங்க கிட்ட படிக்கணும்” என்றாள் பிடிவாதமாக.
“வேதா! சரண்யா நல்ல பொண்ணு! காலேஜ் போயிட்டு சீக்கிரமா வந்துடறா… நீ ஏன் வேணாம்னு… சொல்ற? நந்தினிக்கு பாட்டு நல்லா வருது. அவ முறைப்படி சரண்யா கிட்ட கத்துக்கிட்டா, இன்னும் நல்லா பாடுவா… பாரதியார் பாட்டெல்லாம் இப்பவே எப்படி பாடுறா பாரு! நந்தினிக்கு நிறைய திறமையிருக்கு…அதை வீணாக்காதே “
“ரஞ்சினி… நந்தினிக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறே…” ரஞ்சினியின் பெண் குழந்தைகள் இரண்டும் அவள் அம்மா வீட்டில் சென்னையில் இருக்க… இவர்கள் தாற்காலிக மாற்றுதல் காரணமாக திருச்சியில் ஒரு வருடம் இருக்க வேண்டி அந்த காம்பவுண்டில் குடியிருந்தார்கள். ரஞ்சினிக்கு பிள்ளைகளை காணமுடியாத ஏக்கத்தை நந்தினியின் மூலம் தீர்த்துக் கொண்டாள். நந்தினியும் பாதி நேரம் ரஞ்சனி வீட்டில் தான் இருப்பாள். வேதா வெளியே போக வேண்டிய சந்தர்ப்பத்தில் நந்தினியை அவள் வீட்டில்தான் விட்டுவிட்டுப் போவாள் – tharaiyil vizhuntha meengal-02.
“ஏன் வேதா ரொம்ப யோசிக்கிற… கீழே போய் தானே கத்துக்கப் போறா”
“அதுக்கு இல்ல ரஞ்சனி… சரண்யா நல்ல பொண்ணு தான். அவ அப்பா அம்மாவும் நல்லவங்க தான் .ஆனால் தறுதலையா அவ அண்ணன் ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே.. அந்த விஜய்… படிப்பையும் முடிக்காம, வேலையும் பாக்காம ஊரைச் சுத்திகிட்டு இருக்கான். அதுக்கு தான் யோசிக்கிறேன்” .
“அவனைப் பற்றி நமக்கு…. என்ன வேதா! அவன் எப்படியோ போகட்டும். சரண்யா காலேஜ் போயிட்டு நாலு மணிக்கெல்லாம் வந்துடுறா… நம்ம காம்பவுண்ட் லேயே மூணு பசங்க அவ கிட்ட பாட்டு கத்துக்கிறாங்க, நந்தினியும் ஆசைப்படுறா… ஒரு மணி நேரம் தானே… அஞ்சு மணிக்கெல்லாம் கிளாஸ் முடிஞ்சிடுது.. தவிர நாம இங்க தானே மேலே தானே இருக்கோம். பாத்துக்கலாம்” .
“சரி எதுக்கும் நந்தினியோட அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்” என்றாள் வேதா.
நந்தினியின் அப்பா சரியென்று சொல்ல நந்தினி சரண்யாவிடம் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அவள் போகும் நேரத்தில் சில நேரம் சமயங்களில் விஜய் இருப்பான். அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சுவதுடன் அவளுக்கு சாக்லேட் கொடுப்பான். கள்ளம் கபடம் இல்லாத அந்த சிறுமிக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடித்துப் போனது …
தொடரும் ….
– தி.வள்ளி , திருநெல்வேலி