தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 01

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01

tharaiyil vizhuntha meengal

டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி குட்டி கிராமங்கள் உண்டு .அவற்றில் ஒன்று அது. மிக அமைதியான ஒரு இடம். அந்த வருடம் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது எதிரே வருபவர் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிப்படலம்.

சிறிய கிராமம் என்றாலும் தெருக்கள் எல்லாம் அழகாக ராணுவ அணிவகுப்பை போல வரிசையாக ஒழுங்காக அமைந்திருந்தன. வீடுகள் எல்லாம் தனித்தனியாக குட்டி தீவாய்…வருட கடைசியான நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஹெட்லைட் வெளிச்சத்தில் வாகனத்தை செலுத்துவதற்கு கடினமாக இருக்கும் என்பதால் அநேகமாக அனைவரும் 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பனிப்பொழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. மெல்லிய விளக்கொளியில் பனிப்பொழிவு மிக அழகாக, பார்ப்பதற்கு ரசனைக்குரியதாக இருந்தது. சஞ்சய் லேப்டாப்பில் எதோ பார்த்துக்கொண்டிருக்க ..

சஞ்சனா விளையாடிக்கொண்டிருந்தாள்.கல்யாணம் ஆகி அவள் சஞ்சய்யுடன் லண்டன் வந்து வருடங்கள் பத்திற்கு மேலாகிவிட்டது, அதற்குள் பத்து வருடங்கள் ஓடி விட்டதா என்ற பிரமிப்பு ஏற்பட்டது நந்தினிக்கு …

அம்மா இந்நேரம் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் ஓடியது.அம்மாவைப் பற்றி நினைத்ததுமே மனம் நிறைந்தது. நந்தினி லண்டனில் சஞ்சய், சஞ்சனாவுடன் சந்தோஷமாக வாழ்வதற்கு அவளே காரணம் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த சம்பவத்தால் தன் வாழ்க்கை தடம் மாறாமல் பார்த்துக் கொண்டவள்… சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பிலிருந்து தன்னை வெளிக்கொண்டு வந்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது…

தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக தன்னை மாற்றியது… எல்லாமே அம்மாவுடைய முயற்சி தான். அம்மாவும் அப்பாவும் தனக்காக வாழ்ந்த தியாக வாழ்க்கை மனதில் வந்தது ..சிறு வயதில் தனக்கு நேர்ந்த அசம்பாவிதம் எவ்வளவு மறக்க நினைத்தும் முடியவில்லை…. இன்றும் மனதில் ஒரு வடுவாக தான் இருக்கிறது. மறக்க முடியாமல் தவிக்கும் அந்த சம்பவம் மனதில் நிழலாடியது. மேற்கொண்டு அதைப்பற்றி சிந்திக்க முன் சஞ்சனா கூப்பிடுவது கேட்டது …

“அம்மா பசிக்குது…சாப்பிடலாமா” சஞ்சனா கேட்க…

அப்போதுதான் மணியை பார்த்தாள் நந்தினி. மணி எட்டாகிவிட்டது .தன் நினைவுகளை உதறியவளாய்,”கண்ணா இன்னும் 15 நிமிஷத்துல ரெடி பண்ணிடுறேன். அப்பாவையும் சாப்பிட கூப்பிடு “என்று மகளிடம் கூறியவள், அவசரமாக கிச்சனுக்குள் நுழைந்தாள்.மதியம் வைத்திருந்த சாதம் மீதம் இருக்க…அவசரமாக ஒரு ரசமும், உருளைக்கிழங்கை தோல் சீவி வதக்கி காரகறியும், பண்ணிவிட்டு சஞ்சய்,சஞ்சனாவை சாப்பிட அழைத்தாள்.

மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.”எதற்கு ரசம் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்க நந்தினி. மதியம் குழம்பு இருந்ததே அதையே வைச்சுக்கலாம்ல” என்றான் சஞ்சய் – tharaiyil vizhuntha meengal-01.

சஞ்சயைப் போல ஒரு புரிதல் உள்ள ஆண்மகனை பார்க்கவே முடியாது என்ற நினைப்பு மனதில் ஓட, சிரித்துக்கொண்டே “பாவம் சஞ்சனா…ரசம்ன்னா கொஞ்சம் நல்லா சாப்பிடு வா” என்றாள் வாஞ்சையோடு.

சஞ்சனா சாப்பிட ஆரம்பித்தவள்… “அம்மா! பாட்டி கொடுத்துவிட்ட வெங்காய வடகம் நாளைக்கு வறுத்து தருவீங்களா?” என்று கேட்க… தலையாட்டிய நந்தினிக்கு மீண்டும் அம்மா நினைப்பு வந்தது. சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் முக மாறுதலை கவனித்த சஞ்சய்,” என்ன நந்தினி! ஊர் ஞாபகம் வந்திருச்சா…. அம்மாகிட்ட இன்னைக்கு பேசினியா? என்றான் அன்பாக.

“இல்ல சஞ்சய்! இனிமே தான் பேசணும். நெனச்சிகிட்டு தான் இருந்தேன் அப்படியே இந்த பனிப்பொழிவை வேடிக்கை பார்த்துகிட்டிருந்ததில் நேரம் போனது தெரியல “

“அம்மா.. அம்மா… வெளியே போய் ஸ்னோமேன் செஞ்சு விளையாடுவோமா? “என்று கேட்டாள் சஞ்சனா.

“சஞ்சனா வெளியில் பனி ஊசி மாதிரி குத்துது.”

“ஜாக்கெட் போட்டுக்கலாம் மம்மி. போய் விளையாடுவோம்.

” இந்த இரவு நேரத்தில் வேண்டாம்மா.. நாளைக்கு மத்தியானம் நாம ஸ்னோமேன் பண்ணி… அதுக்கு நல்ல கலர் கலர் டிரஸ் எல்லாம் போட்டு… பலூனெல்லாம் குத்தி வைச்சு… போட்டோ எடுத்து… எல்லோருக்கும் அனுப்புவோம் சரியா..” என்று அவளை சமாதானப்படுத்தினாள் நந்தினி. சஞ்சனா அரைமனதாக தலையாட்டினாள்.

திரும்ப ரூமுக்கு வந்த நந்தினி போனை எடுத்து
அம்மாவை கூப்பிட்டாள். நந்தினியின் போன் மணி இந்தியாவில்,தமிழ்நாட்டில்,தஞ்சாவூர் வல்லம் அருகே உள்ள ஒரு சின்ன கிராமத்தின் அந்த மச்சு வீட்டில் எதிரொலித்தது ..வேகமாக ஓடினாள் வேதா…” ஏன் இப்படி அவசரமா ஓடுற… கீழே விழுந்துடாதே… உன் மகள் எடுக்கலைன்னா திரும்ப கூப்பிடுவா…” என்று கேலி பண்ணினார் தியாகு. பதில் சொல்லாமல் ஓடி போய் போனை எடுத்து, மகள் குரல் கேட்டதும்தான் நிம்மதியானாள் வேதா.

“நந்தினி! நல்லா இருக்கியா?” என்றாள். மகள் அடுத்த வீட்டில் இருப்பது போல அவள் குரல் பாசத்தில் குழைந்து ஒலித்தது. “சஞ்சனா குட்டி நல்லா இருக்காளா… மாப்பிள்ளை என்ன பண்றாரு?” என்று கேள்விகளை அடுக்க….

நந்தினி “நல்லா இருக்கேம்மா… இப்பத்தான் சாப்பிட்டோம்….. வேலையெல்லாம் ஆச்சு… இங்க பனி ரொம்ப இருக்கிறதால வீட்டுக்குள்ளதான் இருக்கிறோம். எங்கேயும் வெளியே போக முடியாத அளவு ரொம்ப பனி..”

“ஏண்டி நந்தினி உன் குரல் சோர்வா இருக்கு…”

” ஒன்னும் இல்லம்மா…சும்மா யோசிச்சுகிட்டு இருந்தேன்”
வழக்கமான கலகலப்பில் மகள் பேசாதது வேதத்துக்கு புரிந்தது.ஒருவேளை அழுகிறாளோ …மனம் கலங்கியது – tharaiyil vizhuntha meengal-01.

” ஏண்டி எதையாவது யோசிக்கிட்டிருக்கியா?…”

“இன்னைக்கு என்ன தேதின்னு நினைவிருக்காம்மா?”

அப்போது தான் தேதியை பார்க்க… டிசம்பர் அஞ்சாம் தேதி.. ஒரு நிமிடம் திக்கென்றது வேதாவிற்கு..” ஏண்டி கண்டதெல்லாம் நெனச்ச மனசை குழப்பிக்கிற.. எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இன்னும் நினைச்சுகிட்டிருக்கியா”

“மறக்க முடியலம்மா… எவ்வளவு தான் அதை விட்டு வெளியே வந்தாலும், சில நேரம் என்னால அத முழுசா மறக்க முடியல… மனசுல ஒரு ஓரத்தில உ றுத்திகிட்டே தான் இருக்கு.. சஞ்சய்க்கு துரோகம் பண்ற மாதிரி தோணுது…”

ஒரு சிட்டிங் கவுன்சிலிங்

“கண்ட மாதிரி பேசாத நந்தினி… சஞ்சய் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா? அவர் கிட்ட நாம எதையுமே மறைக்கல……. நடந்தது ஒரு விபத்து மாதிரி… அதையே நெனச்சுக்கிட்டு வாழ்க்கையை பாழாக்கிகிட்டு இருக்கப்போறியா? அருமையா உனக்கு சஞ்சனா குட்டி இருக்கா.. அவ கூட விளையாடு. அப்படியும் நேரம் இருந்தா ஏதாவது படி… வரை…நீதான் நல்லா படம் வரைவியே… அதவிட்டுட்டு வேண்டாத சிந்தனைகளால ஒருத்தருக்கும் ஒரு பிரயோஜனமும் கிடையாது”

“நீ சொல்றதெல்லாம் புத்திக்கு புரியுது மனசுக்கு புரியலம்மா.அன்பான புருஷன்… புள்ள… நிம்மதியான நல்ல வாழ்க்கை… எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு. ஆனாலும் மனசு சிலநேரம் சோர்வா இருக்கு. அடுத்த வாரம் ஒரு சிட்டிங் கவுன்சிலிங் போயிட்டு வரலாம்னு இருக்கேன்”

“போயிட்டு வா… இத பாரு, ஒரு பொண்ணு… அதுவும் நீ ஒரு அம்மா… ஒருத்தருக்கு மனைவி.. உன் குடும்பத்துக்கு உன்னுடைய ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்… உன்கிட்ட தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் தான்.. உன் குழந்தையை நீ நல்லபடியாக வளர்க்க முடியும்”

“புரியுதுமா ..சஞ்சனா அப்படியே உன்ன மாதிரிதான்.. இந்த சின்ன வயசுலயே தெளிவா, தைரியமா, போல்டா …. பேசும்போது ,அப்படியே எனக்கு உன் நினைப்பு தான் வரும்” மகளைப்பற்றி பேசும்போது, மலர்ச்சியில் குரல் குழைய, வேதத்துக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“சரி மா… நாளைக்கு அப்பா கிட்ட பேசுறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே… நான் நல்லாதான் இருக்கேன்..”என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு போனை வைத்தாள் நந்தினி .

“ஏங்க இவ இப்படி இருக்கா… சஞ்சய் நல்ல பையன். இவ்வளவு நல்லா புரிஞ்சுகிற ஒரு புருஷன்…கண்ணுக்கு அழகாய்,புத்திசாலியா குழந்தை…. நிம்மதியா வாழ்வதை விட்டுவிட்டு இன்னும் பழசை நினைச்சுகிட்டு இருக்கா.”

” வேதா காலம் போகப்போக.. அவ அதிலிருந்து வெளியே வந்துடுவா. நல்லதையே நினைப்போம். தைரியமா இரு” என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லியவருக்கு , திருச்சியில் வாழ்ந்தபோது நடந்த அந்த கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வர மனம் கனத்தது …

தொடரும்….

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

2 Responses

  1. Jothi bai.S.P. says:

    அருமையான நகர்வு.நெஞ்சில் இனம் புரியாத தவிப்பு.அழகு , அற்புதம்.

  2. தி.வள்ளி says:

    மிக்க நன்றிம்மா..நீங்கள் ஊக்குவிப்புக்கு..