திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை
மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan
மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே நிரம்ப இருக்கும். அதேபோலத்தான் இத்தொகுப்பில் பல்வேறு வகையான கவிதைகள் அமைந்துள்ளன..
சூழல் கவிதைகள் என்பது சூழலுக்கு ஏற்ப வாசிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த சூழலுக்கும் ஏற்ற கவிதைகளாகவே மு.மேத்தாவின் கவிதைகள்
அமைந்துள்ளது அவரின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே என்பேன் நான். அவ்வாறாக இத்தொகுப்பில் நான் ரசித்த கவிதைகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.
தேசம்
“எங்கள் தேசத்தில்
ஒவ்வொரு கட்சிக் கொடியும்
உயரத்தில்தான் பறக்கிறது
எங்கள் சகோதரர்களின்
தாழ்ந்து குனிந்த
தலைக் கம்பங்கள் மீது”
ஆம் கவிஞரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வெளியேறிப் போய் விட்ட தேசம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் அற்புதம்.
“அடையாளம் தெரியாத
அந்நிய முகங்கள்
கைகளைக் குலுக்காமல்
பைகளைக் குலுக்கும்
பார்வைகள்”
தமிழனின் கதை
தமிழனின் கதை இந்த தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உணர்வுகளின் உரிமைப் போராட்டத்தை வெளிக்கொண்டுவந்த வரிகள் என்றே சொல்லலாம்..
“இன்றைக்கோ
வரதட்சணை பாக்கிகள்
வந்து சேரவில்லை என்று
கணவன்மார்கள்
கடுங்கோபத்தோடு
வீதியில் தூக்கி
வீசி எறிகிறார்கள்
நகைகளை அல்ல
மனைவியை”
ஆம் கவிஞரே… நேற்று நடந்தது… இன்றும் நடக்கிறது…
நாளையும் நடக்குமோ இந்த அவலம்!
இந்தியத்தாய் உடன் ஒரு இளைய மகன் பேசுகிறான் என்ற கவிதை இயல்பின் உச்சம். அதில் நான் மிகவும் ரசித்த வரிகள்…
“கன்னியாகுமரியில் உன்னுடைய காற்சலங்கை அசைகிறதே.. – thiruvizhavil oru therupadagan
தில்லி திருநகரில் எங்கள் தலைப்பாகையாவது தலைகாட்ட முடிகிறதா”
மேலும் அதே கவிதையில் இன்னுமொரு அழகான வரிகள்.
“உன்னுடைய ஒருமைப்பாடு உண்மையாக இருக்குமானால்
ஒரு மாநிலத்தின் சட்ட சபை கலைக்கப்படும் போது
கருக்கலையும் வேதனை
நீ கண்டு இருக்க வேண்டாமா”
என்ன நேர்த்தியான வரிகள்.
“காவிரி கங்கையில்
கலந்து மகிழலாம்
காவிரி கங்கையில்
கரைந்து மறைவதுவோ”
என்ற கவிதை இந்திய தாயுடன் ஒரு புரட்சி மிக்க இளைஞன் பேசுவதாய் அமைத்திருப்பது மிக நன்று. ஈழத்து மக்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் கண்ணீர் துளிகள்… அக்கவிதையில் சில வரிகளைப் படிக்கும்போது நம் கண்ணிலும் நீர் கசிகிறது.. ஆம் வலிக்கிறது.
“பூந்தோட்டமே
அங்கு பொசுங்கிப் போனபின்
மரங்கள் இங்கே
மாநாடு போடுகின்றன”
சுதந்திரம்
என்ற வரிகளில் பல கேள்விகள் நமக்குள் எழுகிறது. சுதந்திரம் என்ற தலைப்பில் மேத்தா அவர்கள் எழுதிய சுதந்திரமான வரிகள்…
“இங்கே தாகத்தில்
மூழ்கிக் கொண்டிருக்கிறது
தண்ணீர்”
ஆம் கவிஞரே உண்மைதான்…
தாகத்தில் தண்ணீர்தான்!
இதே கவிதையை அவர் நிறைவு செய்யும் போது ஒரு வார்த்தை சொல்லுகிறார்.. அவ்வார்த்தையில் நிலைக்கிறார்.
அரிசியியல்
“தேசத்தில்
சுதந்திரம் என்கிற வார்த்தையாவது
கொஞ்சம் சுதந்திரமாய் இருக்கட்டும்”..
நிச்சயம் கவிஞரே.. சுதந்திரம் இருக்கட்டும்.. நிலைக்கட்டும்! “அரிசியியல்”
இந்தக் கவிதை குடும்பத்தின் அரசியல் பேசுகிறது.
“மனைவி கணவனைப்
பார்க்கிறாள்
கணவன் அரிசியை பார்க்கிறான்
அரிசி அரசியை
பார்க்கிறது
அரசியோ அரசியல்
பார்க்கிறது”
உண்மைதான் அரசியல் பார்க்கிறது. ஒரு மருமகள் மறுதலிக்கிறாள் என்ற கவிதை மெய்ப்பொருள் ஆழமான சிந்தனையை கேள்வியை நமக்குள் கேட்க வைக்கிறது. விதி என்னும் வில் ஒடியும் என்ற கவிதை நம் மனஓட்டத்தை பிரதிபலிக்கும் வரிகளாக அமைத்துள்ளார்.
“இவர்கள் பகலின் வெளிச்சத்தில்
யானைகளில்
தொலைத்துவிட்டு
இரவின் இருட்டில்
எலிகளை தேடுகிறார்கள்”
நிச்சயம் கிடைக்காதுதான் கவிஞரே. இவ்வாறு இந்த தொகுப்பு முழுவதும் அமைந்துள்ள கவிதைகள் அனைத்தும் பல நியாயமான கேள்விகளையும், யதார்த்தமான பார்வைகளையும் நம் முன்னே வைத்து நமக்குள் பல கேள்விகளையும் பல விடைகளையும் தருகிறது..
“திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்” பாடல் மனதுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது…
கவிதா வெளியீடு
பக்கங்கள் 104
முதல் பதிப்பு ஜனவரி 1984
இந்த பதிப்பு டிசம்பர் 2014
– ம.சக்திவேலாயுதம், நெருப்பு விழிகள்
விமர்சனம் நன்றாக இருக்கிறது
மேற்கோள் காட்டிய கவிதைகள் அனைத்தும் அருமை.. அவை புத்தகம் முழுமையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகின்றன.. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சக்தி.. வாழ்த்துக்கள்..💐💐💐💐
விமர்சனம் அருமை.. தாங்கள் சிறப்பான வரிகளை மேற்கோள் காட்டியிருந்த விதம் மேலும் சிறப்பு..மு. மேத்தா அவர்களின் கவிதை சிறப்பை சொல்லவே வேண்டாம் …வாழ்த்துக்கள் சகோதரரே! தங்கள் சிறப்பான விமர்சனத்திற்கு ..
ஆழமான கவி வரிகள்…. அருமையான விமர்சனம்