மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2)
“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam-2.
பதிவு ஒன்றில்… மரணிப்பதற்குள் கொரானா கிருமி உள்பட அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..
பதிவு 2 …
கொரனாவை மட்டும் கருத்தில் கொண்டு தொற்றாமல் இருக்க அரசு ஊரடங்கை அறிவித்தது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ளவே இல்லை. உழைக்க வழி இல்லாமல் பிழைக்க முடியாமல் மக்கள் தத்தம் ஊருக்கு கால்நடையாகவே செல்லத் தொடங்கினர். வழியிலேயே மரணங்கள் நிகழ்ந்தன.
இதுவரை இருந்த வாசல் இனி இல்லை
இதுவரை இருந்த நகரம் இனி இல்லை
எங்கோ
பசியை மூட்டையில்
கட்டிக் கொண்டு
உயிரை நெஞ்சினில்
வைத்துக் கொண்டு
போகிறது கால்கள்
……………………………….
அதுவரை
காற்று
இந்த உடல்களில்
இருக்குமா
தெரியவில்லை
என ‘ புலம் பெயர்தல்’ குறித்து கவலைப்பட்டுள்ளார். ஊர் சென்று சேருவதற்குள் உயிர் பிரிந்து விடும் நிலையிலேயே கடந்து சென்றுள்ளனர் – meyyuruthal puthaga vimarsanam-2.
உலகி
அரசு ஊரடங்கை வலியுறுத்தும் போது
இன்றைய கவிதை
முழுமை பெற்றிருந்தது
என்று ‘ உலகி’ கவிதையைக் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காலத்திலேயே இத்தொகுப்பிலுள்ள அனைத்து கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன என்பதே உண்மை.
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கொரானா பாதிப்புகள், விடுவிப்புகள் குறித்த புள்ளி விவரங்களை, செய்திகளை தொலை காட்சி வாயிலாக அரசு அறிவித்து வருகிறது. தினசரி புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்வதே மக்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரானா தொற்றுகள் அதிகரித்தே வருகிறது. கவிஞரும் ‘ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஒரு கவிதையே எழுதியுள்ளார்.
பசியைப் போக்க வழி செய்யவில்லை
அரசுகள் கொரானா தொற்றாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கின்றன. கொரானாவில் எவரும் காலமாகக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இருக்கின்றன. ஆனால் மக்களின் பசியைப் போக்க வழி செய்யவில்லை. பசிக்கு உணவளிக்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்கவே இல்லை. பசிக்கு அரசு எதுவும் செய்யவில்லை என ‘எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்’ என்னும் கவிதையில் குற்றம் சாட்டியுள்ளார். அறிவுறுத்தல்கள் பசியைப் போக்காது என்றும் ஆயிரம் ரூபாய் ஆபத்திற்கு உதவாது என்பதையும் தெரிவித்துள்ளார். கொரனா மரணங்களைக் கணக்கிடும் அரசுகள் பசி மரணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கண்டு கொள்வதில்லை.
கருணைகள் ஏன் இயல்பாய் பிறப்பதில்லை
கொரானா ஒரு தொற்று என்று அறிந்தும் மருத்துவ பணியில் பலர் ஈடுபட்டனர். மருத்துவர் சைமனுக்கு தொற்றாகி மரணமும் அடைந்தார். புதைப்பதற்கு பெரும் எதிர்ப்பு. அரசு அவசர சட்டம் இயற்றி எதிர்ப்பவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை என்றது. அவசர சட்டத்தை அவசரமாக வரவேற்ற கவிஞர் எழுதிய கவிதை ‘ கருணைகள் ஏன் இயல்பாய் பிறப்பதில்லை’.
அவசர சட்டம்
அவசரம் இல்லாமல்
நிறைவேறி இருக்கிறது.
ஆயினும்
வரவேற்கப்பட வேண்டிய சட்டம்
ஆனால்
வரவேற்கப்பட வேண்டிய சட்டங்களும்
வரவேற்கப்பட வேண்டிய விசயங்களும்
வரவேண்டிய நேரத்திற்கு வருவதில்லை
என அரசை விமரிசித்துள்ளார். மக்களுக்குத் தேவையென்னும் அவரச சட்டங்களை இயற்ற வேண்டும் என்கிறார். எழுத வேண்டிய நேரத்தில் எழுதியுள்ளார் – meyyuruthal puthaga vimarsanam-2.
மதுப் பிரியர்களின் ஆறுதல்
ஊரடங்கு மூலம் அனைத்து இயக்கத்தையும் நிறுத்தி வைத்த அரசு வருமானத்திற்கு வழியின்றி தள்ளாட தொடங்கியது. மத்திய அரசும் கை விரித்ததால் மதுக்கடை திறப்பு ஒன்றே வழி என்று திறக்க முடிவு செய்தது. மக்களின் எதிர்ப்பையும் மீறி திறந்து விட்டது. ‘ மதுப் பிரியர்களின் ஆறுதல்’ க்கு வழி வகுத்தது.
அரசாங்கம்
வறுமையில்
திளைக்கும் போது
மதுக்கடைகளில்
விற்பனைகளில்
தான் சரி செய்து கொள்ளும்
என்று அரசின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். மதுப்பிரியர்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இரயில்கள் மாபெரும் இசைக் கருவிகள்
கொரான ஒழிப்பு முயற்சி கை கூட வில்லை. கொரானாவின் ஆதிக்கம் முடியவில்லை. அரசும் கொரானாவுடன் வாழ பழகிக் கொள் என்று முற்றான முடிவாக அறிவித்து விட்டது. கவிஞர் பொன். இளவேனிலும் கொரானா கால கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். ‘ இரயில்கள் மாபெரும் இசைக் கருவிகள்’ என்னும் நிறைவுக்கவிதையில்
கொரானாவுடன் வாழப்பழகிக்கொள்ள
மக்கள் தயாராகிக் கொண்டார்கள்
என்கிறார்.
ஏற்கனவே போட்டு வைத்த
திட்டங்கள்
நின்று நிர்கதியானது
எதிர் காலம் இனி எப்படியோ
யாவும்
கிருமிகள் மயம்
என்னும் இறுதி வரிகள் இதயத்தில் நின்று அதிர்வை ஏற்படுத்துகிறது.
கவிஞர் பொன். இளவேனில் ஓர் இயல்பான கவிஞர். இதயத்தில் கவிதை ஊற்றெடுக்கும் போதெல்லாம் கவிப்புனையும் ஆற்றல் பெற்றவர். கொரானா காலத்தில் கொரனா குறித்து எழுதப் பட்ட கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. கொரானா காலத்தில் ஊரடங்கு நேரத்தில் வீடடங்கி இருந்த வேளை கவிதைகள் எழுதப்பட வேண்டும் என்னும் முனைப்புடனே எழுதப்பட்டவையாகும். கொரானா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை, இம்சைக்குள்ளானதை, அரசின் நடவடிக்கைகளை, அரசு சரியாக செய்யாததை, செய்யத் தவறியதை ஒவ்வொரு கவிதையிலும் பதிவுச் செய்துள்ளார்.
மெய்யுருகி எழுதியதாலோ மெய்யுறுதல்..
ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு தனி மனிதராக தனக்குள் ஏற்பட்ட உணர்வுகளையும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். குறுகிய காலத்திலேயே கொரானா வளர்ச்சி பெற்றது போல குறுகிய காலத்திலேயே ஏராளமான கவிதைகளை படைத்துள்ளார். கவிஞருக்கே உரிய பாணியைக் கடைப்பிடித்துள்ளார். கவிதைகளாக எழுதியுள்ளது குறிக்கத்தக்கது. ‘ விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது’ என்பதில் ஒருமை பன்மை சிக்கல். விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன என பன்மையிலேயே இருக்க வேண்டும். இது போல் ஏராளம் தொகுப்பில் உள்ளன. இவைகள் கொரானா போல் கவிதையைக் கெடுத்து விடும். பொதுவான கவிதைகளாக இருந்தாலும் கொரானாவைக் கொண்டு வந்து விடுகிறார். கொரனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் கொரானா காலத்தில் ‘ மெய்யுறுதல்’ என்னும் ஒரு கவிதைத் தொகுப்பு கிடைத்துள்ளது. மெய்யுருகி எழுதியதாலோ மெய்யுறுதல் என தலைப்பிட்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. கவிஞர் பொன். இளவேனிலின் ‘ மெய்யுறுதல்’ தொகுப்பை வாசித்தால் கொரனா கால கொடுமைகளைப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றில் கொரானா இடம் பெறுவது போல் மெய்யுறுதலும் இடம் பெறும்.
வெளியீடு – அகத்துறவு , 19 சிவசக்தி நகர், இருகூர், கோவை 641103
– சேலம் பொன் குமார்
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2) சேலம் பொன் குமார் அவர்கள் தற்போதைய நிலைமையை மிக அழகாக எடுத்துக் கூறி விமர்சனம் செய்திருப்பது பாராட்டத்தக்கது.
கொரோனா இவ்வளவு பேரை ஏன் இப்படி வாட்டி வைக்கிறாய்? நீ இந்த உலகை விட்டு எப்போது போவாய்?
மெய்யுறுதல் என்ற கவிஞரின் புத்தக விமர்சனம் அருமை. கொரொனா வரலாற்றில் இடம் பெறுவது போல மெய்யுறுதலிலும் இடம் பெறும் என்பது நிதர்சனமான உண்மை பாராட்டுக்கள்
விமர்சனம் அருமை ..கவிதை கூறும் வலியை உணரமுடிகிறது .கொரோனாவை விட கொடியது பசி கொடுமையால் சாகும் மக்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நிலை …அவர்கள் உழைப்பை அனுபவித்த நாம் ,அவர்களை நிர்க்கதியாய் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. அக்கவிதைதரும் வலியை அழகாக உணரவைத்திருப்பது..விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றி.