மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 1)
“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam.
தமிழ்க் கவிதை உலகில் பத்தாண்டுகளாக இயங்கி வருபவர் கவிஞர் பொன். இளவேனில். மணல் சிற்பம் ( 2010), பியானோ மிதக்கும் கடல் (2013), குட்டி ராட்டாந்தூரி ( 2014), ஒளி செய்தல் ( 2014) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் சிவப்புக் கம்பளம் ( 2019) என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டு தன் இருப்பை நிறுவி வருபவர் வெளியிட்டுள்ள புதிய கவிதைத் தொகுப்பு ‘ மெய்யுறுதல்’.
வயிறடங்க வழி செய்யவில்லை
ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு கால கட்டத்தில் வெளியாகியிருக்கும். மெய்யுறுதல் வெளியாகியிருக்கும் காலம் உலக வரலாற்றிலேயே முக்கியமான காலமாகும். உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த கொரனா காலமாகும். கொரணா ஓர் உயிர்க்கொல்லி கிருமி. தீவிரமான தொற்று. தொடரும் தொற்று. கருணையின்றி மக்களைக் கொன்று வருகிறது. கொரணாவை ஒழிக்க வழி அறியாது உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்தது. இயக்கங்களை நிறுத்தியது. மனிதர்களைத் தனித்திருக்கச் செய்தது. வீட்டிலேயே இருக்க வலியுறுத்தியது. தொற்று குறையவில்லை. புள்ளி விவரங்கள் அதிகரித்தது. அச்சத்தைத் தந்தது. இது ஒரு புறம். ஊரடங்க உத்தரவிட்ட அரசு வயிறடங்க வழி செய்யவில்லை. மக்கள் படும் அவஸ்தைகள் மனத்தை வருத்தின – meyyuruthal puthaga vimarsanam.
கொரனா காலத்தில் வீட்டில் இருந்தவர்கள் தாயம், பல்லாங்குழி, சீட்டாட்டம் என பல விதமாக பொழுதைக் கழித்தனர். போக்கிக் களித்தனர். வாசிப்பில் தீவிரம் காட்டியவர்கள் பலர். எழுத்தில் இயங்கியவர்கள் சிலர். ஒரு சமூக அக்கறையுள்ள கவிஞன் மக்கள் மீது அன்பு கொண்ட கவிஞன் பொன். இளவேனில் கொரனா கால கொடுமைகளைக் கண்டு கவிதைகளை 166 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக எழுதியுள்ளார். கொரானா காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். கவிதை உற்பத்தியாளராக காணப்படுகிறார்.
கொரானாவின் காலம்
கொள்ளை நோய்
வலம் வரும் வீதிகளில்
மனிதர்கள் யாரும்
நாளை இருக்க மாட்டார்கள்
எனத் தொடங்குகிறது ‘ கொரானாவின் காலம்’ என்னும் முதல் கவிதையுடன் தொகுப்பு. கொரானா வலம் வருவதால் வீதியில் இருக்க மாட்டார்கள் என்பதுடன் கொரனா வந்து விட்டால் உலகத்திலேயே எவரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
எந்தச் சலுகையும் அளிக்காத
மன்னரின் ஆணைப்படி யாரும்
வீதிக்கு வர மாட்டார்கள்
என அரசை விமரிசித்துள்ளார். மேலும்
உலகம்
பீதியிலிருக்கும் போது
எல்லாக் கடவுளும்
விடுமுறையில் இருக்கிறார்கள்
என கடவுளையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை. கடவுள் காப்பார் என்பது எத்தகைய மூடத்தனம் என்பதையும் கொரானா நிரூபித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
வேப்ப மரங்கள் குறித்தும் கவிதைகள்
வேப்ப மரத்திற்கு வியாதியைப் போக்கும் குணமுண்டு. மரங்களிலேயே வேப்பமரத்தையே மக்கள் வணங்குவதுமுண்டு. மாரியம்மன் பண்டிகையின் போது வேப்பம் இலைகளே கோயிலைச் சுற்றி தோரணங்களாக தொங்க விடப்பட்டிருக்கும். பேயை விரட்டவும் பயன்படுத்தப்படும். கொரானாவை விரட்ட முடியும் என்னும் நம்பிக்கையில் மக்கள் வேப்பம் இலைகளையும் கதவுகளில் கட்டத் தொடங்கினர். கவிஞர் பொன். இளவேனிலும் கொரானா காலத்தில் வேப்ப மரங்கள் குறித்தும் கவிதைகள் எழுதியுள்ளார்.
பாவம்
மனிதர்களில்
சித்த மருத்துவன் எல்லாம்
அழுது கொண்டிருக்கிறான்
நாட்டு மருத்துவர் எல்லாம்
அலைந்து கொடுக்கின்றனர்
எதையும் பொருட்படுத்தாது
எருமை மேல் மழை பெய்த மாதிரி இருக்கும் நிலை
நியாயமா Mr. வேப்ப மரம்
என வேப்பமரத்திடம் வினா தொடுத்துள்ளார். மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்கிறார். ‘அரசு’ க்கான கோரிக்கையாகவும் உள்ளது.
சுடுதண்ணீரில் மஞ்சளும் எலுமிச்சை சாரும் கலந்து குடித்தால் கொரானா வராது என்று ஓர் ஆலோசனையைக் கூறுகிறது ‘ எலுமிச்சை வாசனை’ கவிதை. உரையாடல் வடிவில் அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையேயான அன்பையும் வெளிப்படுத்தியுள்ளது. – புத்தக விமர்சனம்
மனிதர்களைத் தழுவிக் கொன்று வருவது கொரானா என்னும் கிருமி என எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள் மருத்துவர்கள். ஆனால் கொரானாவிற்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை. மருத்துவ உலகம் மிரண்டு கிடக்கிறது. மருந்தில்லாமல் மரணத்தையே அடைகிறார்கள் மனிதர்கள். எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்களாம். எதிர்ப்பு சக்திக்கும் ஊட்ட சத்து வழியில்லாத வறிய நிலை. ‘ டைசின் மாத்திரை’ யைக் கண்டு பிடித்தது போல கொரனாவிற்கும் ஒரு மருந்து கண்டு பிடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
டைசின் மாத்திரை
ஒவ்வொரு முறையும் டைசின் சாப்பிடும் போது சிறுவனாக முடிகிறது
இப்படியே கொரனாவுக்கோ தற்கொலைக்கோ இப்படி டைசின் மாத்திரையை போல ஒரு மகத்துவத்தை நிலை நாட்டுங்கள் மகான்களே என வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரானாவிற்கு மருந்து கண்டு பிடித்து விட்டால் கொரானா கலவரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் . கொரானாவிற்கு மட்டுமல்ல தற்கொலையைத் தடுக்கவும் மருந்து தேவை என்கிறார். ‘ ரோஸ் நிற டைசின் மாத்திரை போல அழகாக ஒரு கொரோனா மாத்திரை வேண்டும்’ என்னும் தலைப்பிலும் ஒரு கவிதை எழுதப்பட்டுள்ளது. டைசின் கவிதையை எழுதியுள்ளீரா பாரதி என பாரதியிடம் ஒரு கவிதையில் வினவியுள்ளார். பாரதியிடம் பேச முடியுமா என கோரக்கூடாது. கவிஞர்கள் உரையாடுவார்கள். – புத்தக விமர்சனம்
ஒரு கவிஞன் தோற்றான்
கொரனா இந்தியாவிற்குள் பிரவேசமானது. பரவத் தொடங்கியது. தனிமைப் படுத்துதல், சமூக இடைவெளி மூலமே சாத்தியப் படும், கட்டுப்படும் என ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. கொரனா தொற்று குறையவில்லை. ஊரடங்கு ஒன்று, இரண்டு என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தளர்வுகளால் மக்கள் இயங்கிக் கொண்டுள்ளார்கள். ஊரடங்கு எப்போது முடியும் என்று எவருக்கும் தெரியாது. கொரனாவிற்கு தெரிய வாய்ப்புண்டு. ‘ ஒரு கவிஞன் தோற்றான்’ கவிதையில்
ஊரடங்கு காலம்
எப்பொழுது முடியுமோ
எத்தனை நாள் என்று
யாருக்குத் தெரியும்?
என ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கவிஞன் மட்டுமல்ல உலகமே கொரானா முன் தோற்று நிற்கிறது.
யாருக்குத் தெரியும்
இன்னும் எத்தனை நாள் என்று
கேள்வி மட்டுமே எஞ்சி நிற்பது
ஊரடங்கில்தான் தெரிகிறது
என்கிறது ‘ காத்திருத்தல்’ கவிதை. ஒவ்வொருவர் மனத்திலும் இக்கேள்வி எழாமலில்லை.’ கொரானா’ கையிலேயே உள்ளது – meyyuruthal puthaga vimarsanam.
இரவு நேரங்களில் ஏற்படும் நிசப்தம் இதயத்தில் எப்போதும் ஓர் அச்சத்தையே ஏற்படுத்தும். கொரணா தொற்று தொடங்கும் முன் நாடெங்குமே ஒரு நிசப்தம் ஏற்பட்டது. வாகனங்கள் சாலைகளில் ஓட வில்லை. தொழிற்சாலைகள் எங்கும் இயங்க வில்லை. மரங்கள் கூட அசைவற்று இருந்தது. நன்பகலிலும் ஒரு நிசப்தம் நிலவியது.
கொரனா வருகைக்கான பயத்தை விடவும்
அதற்கு முன்னான நிசப்தம் பயமுறுத்துகிறது
‘ முழு நிசப்தம்’ என்கிறார். நிசப்தம் நிம்மதியைத் தரவில்லை என்கிறார்.
நகரத்தின்
அனைத்து மூலைகளிலும்
வழக்கத்திற்கு மாறாக
பயம் பயம் பயம் பயம்
என்றும் பயமுறுத்துகிறது ‘பயம்’ என்னும் கவிதை. பயமே எங்கும் பரவியுள்ளது என பயத்துடன் கூறியுள்ளார். ‘ வந்து விட்டால்’ என்ன செய்வது என்னும் பயமும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அரசு அறிவுரைப் படி அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டாலும் கொரானா தொற்றாமல் இருப்பதில்லை. கொரானாவிற்கு பயந்தே காலத்தை கடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் கவிஞர் எழுதிய ஒரு கவிதை ‘ என்னவாக இருக்கும்’.
அதில் எழுதிய வரிகள்
என்னதான்
எச்சரிக்கையாக இருந்தாலும்
வந்து விட்டால் என்ன செய்வது
வரட்டும்
என்பதாகும். பயந்து பல காலங்கள் வாழ முடியாது. துணிந்து வாழ வேண்டும் என்கிறார். எச்சரிக்கையுடன் இருப்போம் என்பதுடன் வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும் என்கிறார். மரணம் வந்தாலும் ‘ முழு மனதுடன் அழைப்பேன்’ என்கிறார். மரணிப்பதற்குள் கொரானா கிருமி உள்பட அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகம் 2 இல் தொடரும்…. (29-06-20)
– சேலம் பொன் குமார்
Ellam nalla irukku, super.
corona eppo mudiyumo?
ஊரே ஒரு நுண் கிருமியின் பிடியில் சிக்கி முடங்கி கிடக்கும் வேளையில் கவிஞர் தன் கவி திறமையால் இப்படி ஒரு நூலை இந்த நேரத்தில் வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந் நூல் விமர்சனம் மிக அருமை… படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது
கவிஞர் பொன். இளவேனில் அவர்களுக்கு வாழ்த்துக்கள், சேலம் பொன்குமார் அவர்களின் விமர்சனம் அருமை.