உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை
இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam.
ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது.
பிழைத்திருத்தல்
செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை என்னும் தொகுப்பின் முதல் கதை செருப்புத்தொழிலாளியின் அன்றாட வாழ்வின் சிரமங்களை எடுத்தியம்பி அடுத்தடுத்த கதைகளை வாசிக்கும் ஆவலைத்தூண்டுகிறது.
“மனுசன்” என்னும் சிறுகதை வாதம் வந்து பதினைந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் தன் மனைவியை மரணிக்கும் வரும் கவனித்துக்கொண்ட மாணிக்கம் என்பவரைப் பற்றியது. “பிழைத்திருத்தல்” என்னும் கதை செய்த பாவத்திற்காக மனம் வருந்தி தன் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய ராசுவின் மனசாட்சி குறித்து பேசுகிறது.
தெனக்கூலி கதை
“தெனக்கூலி கதை” பொருளாதார நெருக்கடியைப்போக்குவதற்காக கூலி வேலைக்குச்செல்வதால் அன்பை பரிமாற இயலாதகணவன் மனைவியர் தங்களுக்கிடையில் நேசத்தை வெளிப்படுத்திக்கொள்வதை நுட்பமாக சித்தரிக்கிறது.
முள்வேலிப்பந்தம்
முள்வேலிப்பந்தம் என்னும் கதை மூளைவளர்ச்சியற்ற குழந்தையைத் தவிர்க்கவும் இயலாமல் பராமரிக்கவும் இயலாமல் தவிக்கும் தாயொருத்தியின் பாசப்போராட்டத்தினை அழகுற இயம்புகிறது.
அம்மா என்றொரு புண்ணிய நதி
தொகுப்பின் கதைகளில் மனதை விட்டு நீங்காத கதைகளுள் ஒன்றாக “அம்மா என்றொரு புண்ணிய நதி” விளங்குகிறது. இக்கதை கயவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை அரவணைக்காமல் கெட்டுப்போனா பொருளை வைக்கக்கூடாது என்று விரட்டிவிடும் கணவனால் பிள்ளைகளைப்பிரிந்து செல்லும் தாயொருத்தி மீதமுள்ள வாழ்க்கையினை கேன்சர் நோயாளிகளுக்காக அர்ப்பணித்துக்கொள்வதைத்திறம்பட இயம்புகிறது.
உப்புச்சுமை
தொகுப்பின் பெயரைக்கொண்டுள்ள “உப்புச்சுமை” என்னும் கதை நாம் சுமப்பது வெறும் உப்புச்சுமை தண்ணீரால் உப்பு கரைவதைப்போல நம் மகிழ்ச்சியான எண்ணங்களால் உப்பு சுமையைக்கரைத்து விடலாம் என்பதை உணர்ந்து முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழப்பழகிக்கொள்ளும் மனிதர்களின் மனநிலையை அழகுற சித்தரிக்கிறது இக்கதைகளைப்போலவே தொகுப்பிலிலுள்ள இதர கதைகளும் சகமனிதன் மீதான வாஞ்சையையும் மனிதநேயத்தையும் மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளன.
நுட்பமான நடை, சிறுகதைக்கே உரிய மொழி, அழகான வர்ணனைகள், கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் என நிறைவான நூலினை வாசித்த நிறைவினை – uppuchumai puthaga vimarsanam
இச்சிறுகதைத்தொகுப்புத்தருகிறது.இத்தொகுப்புக்கு திலகவதி I P S அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்கள். தேநீர் பதிப்பகத்தார் அழகிய முறையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். தொகுப்பிலுள்ள கதைகள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவை என்பது கூடுதல் சிறப்பு. நூல் தேவைக்கு – தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை
– கவிஞர் கூடல் தாரிக், தேனி
உப்பு சுமை நன்றாக இருக்கிறது பாவமாக வும் இருக்கிறது
பல்வேறு கதாபாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளை அழகாய் கோர்வையாய் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் விமர்சனம் அமைந்துள்ளது விமர்சகர்க்கு பாராட்டுகள் பல
கதைகளின் கருவமைப்பு மிகவும் அருமை.. விமர்சனம் நன்று..💐
உப்புச்சுமை கதை நன்றி. சுமைத் தாங்கி