விண்பறவை தமிழ்ப்பாவை

விண்பறவை வெளிச்சமாகி வெள்ளியென வந்துநிற்க
மண்பூமி மகிழ்ந்தபடி மங்கலமாய் சிரித்திருக்க
கண்மலரின் காவியத்தில் கருத்தாழம் கொண்டவளாய்
பெண்ணாகி பேரழகாய் பெருமையுடன் வந்தாளே – tamil kavithai..

இல்லையென்று சொல்லிடாத இதயமலர் வெள்ளியிவள்
முல்லைமலர் முடியேற்றி முகமலர்ந்து ஒளிசிந்த
தொல்லையில்லா நற்கருணை துணையாக வந்திடவே
அள்ளிடவே அன்புடனே அழகாகி சிறந்தாளே..

vinparavai tamilpavai kavithai

தலைப்பாகும் தமிழ்ப்பாவை தந்திட்ட அருள்கூட்டி
பிழைத்திடவே பெரும்பொருளில் பேரழகாய் நிற்பவளை
களைப்பின்றி கடமைக்குள் கண்ணோக்கி மலர்ந்திடவே
உழைப்புக்குள் உணர்வாகி உளமாறச் செய்வாளே

இதயத்து ஓட்டத்துள் இதமாகி நின்றவளை
உதயத்து பெருஎழிலை உயிராகக் கொண்டவளை
நிதமுரைக்கும் வணக்கத்தில் நெஞ்சக் கனவெடுத்து
முதலாகும் வாழ்வுக்கே முன்னுரை யானாளே..

சித்திரை அழகருக்கு சிறப்பான தங்கையாகி
முத்திரை படைத்தவளாய் முகமலரைக் காட்டினாளோ
தித்திக்கும் இவள் நினைவு திருவீதி உலாவர
எத்திக்கும் என் வணக்கம் ஏற்றிடவே வளர்ந்தாயோ – tamil kavithai

ஆண்டாளும் இவள்தானோ.. அழகு நல் கோதையளோ
கொண்டமனம் சிறந்திடவே கொவ்வையிதழ் மலர்ந்திடுமே
அண்டமலர் மலர்ந்திருக்க அன்புமழை பெய்திடுமே
கண்டவுடன் கருணையாகி கவிதைமனம் தந்திடுமே..

வெள்ளிமனம் விளையட்டும் வெற்றிமுகம் காணட்டும்
துள்ளும் மனம் சிறந்தோங்கி தூய அன்பு நிலைக்கட்டும்
அள்ளும் மணம் தந்துநிற்கும் அழகுமலர் கையெடுத்து
சொல்லும் வகை சுடராகி சுபமாகி மிளிரட்டும்..

– பரணி சுப சேகர்

You may also like...