சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 2)
இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதை வடிவம். நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பல சுமைதாங்கிகளுக்கு சமர்ப்பணம் – sumai thaangi tamil story 2 [பாகம் 1 ஐ வாசிக்க]
எப்பொழுதோ ஒரு முறை அனுவுடன் செல்லும் பொழுது தனது முதல் மாமியின்
வீடு இது என்று காண்பித்ததது கீதாவுக்கு நினைவிற்கு வந்தது. ஒரு முடிவிற்கு
வந்தாள். அடுத்த நாள் காலை, வேலைகளையெல்லாம் முடித்து விட்டு
அனுவையும் பள்ளியில் விட்டு விட்டு பாஸ்கரின் முதல் மனைவியின் வீட்டிற்கு
சென்றாள். பாஸ்கரின் முதல் மனைவி அங்கு இல்லையென்றாலும் அவளது
தாயார் எல்லாவற்றையும் கூறி அழுதார். பாஸ்கரனுக்கு பணத்தாசை மட்டுமின்றி மிகுந்த வக்கிர புத்தியும் உண்டு என்று கூறினார். அவன் தனது அக்காவுடனேயே குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததையும் சுட்டிக் காட்டினார். இதனாலேயே அவனது அக்காவின் கணவர் தூரம் சென்று விட்டதாகவும் தனது மகள் அனுவுக்காக மட்டுமே இன்றும் விவாக ரத்து வாங்காமல் பணம் மட்டும் அனுப்பி வருவதாகவும் கூறினார்.
சித்தப்பா வழி காட்டுவார்
அவரிடமிருந்து விடை பெற்று கிளம்பிய கீதா, நேராக தான் வெகு நாட்களாக
செல்லாமல் இருந்த சித்தப்பா வீட்டுக்குப் போனாள். கல்யாணமாகி மூன்று நாலு மாதம் ஆகி, பல முறை அழைத்த்தும் வீட்டுக்கு வந்திராத கீதாவை நேரில்
பார்த்தவுடன் அவளது சித்தப்பாவும் சித்தியும் மிகவும் சந்தோஷப் பட்டனர்.
அவளை மிகவும் உபசரித்தனர். கண்டிப்பாக மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும்
என்று வற்புறுத்தினர். கீதாவிற்கும் அந்த அன்பும் உபசரிப்பும் தேவைப் பட்டது.
நல்ல வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த சித்தப்பா தன்னுடைய பிரச்சினைக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற எண்ணத்தோடு அங்கு வந்திருந்தாள் கீதா.
மதிய சாப்பாட்டிற்கு பிறகு கீதா மெதுவாக தனக்கு நடந்த விஷயங்களை
சித்தப்பாவிடம் கூறினாள். இந்த மூன்று மாதங்களாக நடந்த ஒவ்வொரு
நிகழ்ச்சியையும் அவரிடம் சொல்ல, அவர் அப்படியே மௌனமாகி போனார்.
“உனக்கு வயசாயிடுச்சு. எப்படியாவது உனக்கு கல்யாணம் நடந்தால் போதும்
என்கிற எண்ணத்தில் வந்த வரனைப் பற்றி சரியாக விசாரிக்காமல் உன் அப்பா
உன்னை படுகுழியில் தள்ளி விட்டார். உன் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டார் – sumai thaangi tamil story 2.
வக்கீலை பார்த்து முடிவு செய்வோம்
என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட நான் விசாரிச்சிருப்பேன். சரி
விடு. இனிமே நீ அந்த வீட்டுக்கு போக வேண்டாம். இங்கேயே இருந்து விடு. உன்
அப்பாவையும் அம்மாவையும் இங்கே வரவழைப்போம். எல்லோரும் அங்கே
போய் பேசி விட்டு உன் சாமான் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வந்து
விடலாம். பிறகு ஒரு வக்கீலை பார்த்து முடிவு செய்வோம்” என்றார் சித்தப்பா.
அது வரை அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளையும் கண்ணீராய்
கொட்டி தீர்த்தாள் கீதா. “நான் சுமை இல்லையப்பா. இப்படியே சந்தோஷமா
இருக்கேன் என்று சொன்னேன். அனால் அவர் கேட்க வில்லை. இந்த
உலகத்திற்கு, என் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விட்டேன் என்று
காட்டிக் கொள்வதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. இப்போ நிஜமாகவே
அவருக்கு ஒரு சுமையாகவே நான் திரும்பப் போகிறேன்” என்று அழுதாள் கீதா.
இரவோடு இரவாக
சிறிது நேரத்தில் தன்னை தேற்றிக் கொண்டு “நான் இங்கே வந்திருப்பது
அவர்களுக்கு தெரியாது சித்தப்பா. நான் இங்கேயே தங்கிட்டேன்னா அவங்க
முழிச்சுக்குவாங்க. என்னுடைய நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாத்தையும் எடுத்து இரவோடு இரவாக விற்றாலும் விற்று விடுவார்கள். நான் இப்போதைக்கு அங்கு சென்று எப்போதும் போல என் வேலைகளை செய்து கொண்டு எதுவும் நடக்காதது போல இருந்து விடுகிறேன். என்னுடைய நகைகளை நான் எடுத்து வைத்துக் கொள்கிறேன். என்னுடைய வெள்ளிப் பாத்திரங்களையும் ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி விடுகிறேன். நீங்கள் இப்பவே என் அப்பாவிடம் பேசி, நாளை காலையிலேயே அவர்களை இங்கே வரச் சொல்லுங்கள். நாளை காலையில் நீங்கள் எல்லாம் புறப்பட்டு அங்கே வாருங்கள். எல்லாம் பேசி முடித்த பிறகு உங்களுடனேயே நான் வந்து விடுகிறேன். ஏதேனும் பிரச்சினைகள் செய்தால் போலீஸைக் கூட்டி வருவேன் என்று நீங்கள் பயமுறுத்துங்கள் சித்தப்பா” என்றாள் கீதா.
வீட்டை விட்டு வெளியேறினாள்
“நாளைக்கு நான் வரும் பொழுதே என் நண்பர் ஒரு ரிட்டயர்டு டிஎஸ்பி
இருக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டே வருகிறேன்’ இன்று ஒரு நாள் இரவு
மட்டும் ஜாக்கிரதையாக இரும்மா” – சித்தப்பா. அவர்களிடமிருந்து விடை பெற்று
கிளம்பிய கீதா, அனுவின் பள்ளிக்கு சென்று அவளையும் அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு போனாள். எப்பொழுதும் போல டியூஷன் எடுத்தாள். இரவு உணவும்
எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டாள். வேலை எல்லாம் முடித்த பிறகு
அனுவையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு
படுத்தாள். அனு தூங்கிய பிறகு, தன்னுடைய முக்கியமான பொருட்களை
எல்லாம் எடுத்து பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்தாள். அடுத்த நாள் காலை
வந்தது. கீதாவின் அப்பா, சித்தப்பா அவருடைய நண்பர் டிஎஸ்பி அனைவரையும் பார்த்த பாஸ்கரும் அவனது அக்காவும் வாயைத் திறக்க வில்லை. கீதா தன் சாமான்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அனுவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
இரண்டு மூன்று நாட்கள் சித்தப்பா வீட்டிலேயே தங்கி பாஸ்கரிடமிருந்து
விடுதலை பெறுவதற்கு உண்டான வழிகளை யோசித்து ஒரு நல்ல வக்கீலை ஏற்பாடு செய்தனர். இவற்றை எல்லாம் செயது முடித்த பின்னர், தங்கள் சொந்த
ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.
ஆறுதல்
ஊருக்கு வந்த பிறகு கூட, அதிகம் பேசும் மன நிலையில் அவர்கள் யாரும்
இருக்க வில்லை. வீட்டை விட்டு வெளியே செல்வதற்க்கோ, அக்கம் பக்கத்தில்
எவருடனும் பேசவோ விரும்பாமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தாள் கீதா.
கீதாவின் நிலைமையைப் பார்த்த விஸ்வநாதன் எப்போதும் அழுத வண்ணம்
உட்கார்ந்திருந்தார். கீதாவின் தாயார் மட்டும் அவ்வப்போது தன் மகளுக்கு
தன்னால் இயன்ற அளவு ஆறுதல் கூறி வந்தார். நடந்ததையே நினைத்து
மூலையில் உட்காராமல் பழையபடி கீதா வேலைக்கு செல்ல வேண்டும் என்று
அவள் தாயார் கூறி வந்தார்.
“கீதா, நீ ஒரு தப்பும் செய்யலை. அப்படி இருக்கும்போது நீ ஏன் மனசு உடைஞ்சு
உட்கார்ந்திருக்கே? வெளியே போனால் நாலு பெரு கேள்வி கேட்பாங்கன்னு
யோசிக்காதே. தைரியமாக நீ நின்றால் யாரும் உன்னிடம் வம்பு பேச மாட்டார்கள்.
என்னது கர்ப்பமா
அப்படியும் பேசுகிறவர்களை நீ மனோ தைரியத்துடன் எதிர் கொள்ளாத்
தயங்காதே. வருகின்ற மாதத்திலிருந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பி. பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடு, பாட்டு சொல்லிக்கொடு, வீணை வாசிக்க ஆரம்பி. உன் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க முயற்சி செய்”. என்றார் அவளது தாயார்.
இந்த சூழ்நிலையில் கீதா தன் உடலில் ஏற்பட்ட மாறுதல்களை கவனிக்கத்
தவறினாள். அடிக்கடி அவள் பலவீனமாக இருப்பதை கவனித்த அவளது தாயார்,
மிகவும் வற்புறுத்தி அவளை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அவளை
பரிசோதித்த டாக்டர், கீதாவின் தாய் நினைத்தது போலவே, அவள்
கருவுற்றிருப்பதை உறுதிப் படுத்தினார்.
உயிருக்கே ஆபத்து
அங்கேயே, டாக்டரிடம் கீதா, தனக்கு அந்த குழந்தை வேண்டாம் என்று கூறி, உடனே அந்தக் கருவைக் கலைக்க வேண்டுமாறு மன்றாடிக் கேட்ட்டாள். அதற்க்கு அந்த டாக்டர், ஏற்கனேவே நாட்கள் கடந்து விட்டதால், அதை கலைப்பது முடியாத காரியம் என்று கூறினார்.
அவ்வாறு முயற்சி செய்தால் அது கீதாவின் உயிருக்கே கூட ஆபத்தாக
முடியலாம் என்றும் கூறினார்.
கருவை வளர விடக் கூடாது
கடவுள் தன்னை ஏற்கனேவே தண்டித்தது போதாதென்று மேலும் மேலும்
தண்டிப்பதாக நினைத்தாள் கீதா. ஆனால் பாஸ்கரின் இந்தக் கருவை தன்
வயிற்றில் வளர விடக் கூடாது என்று அவள் நினைத்தாள். அதைக்
கலைப்பதற்க்காக தனக்குத் தெரிந்த ஒரு மெடிக்கல் ஷாப் மூலமாக சில
மருந்துகளை வாங்கி, தன் அம்மாவுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தாள். அதைத் தவிர, ஏதேதோ புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்ட நாட்டு வைத்திய முறைகளையும் முயற்சி செய்தாள்.
ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி, அந்தக் கரு அவள் வயிற்றில் தொடர்ந்து வளர ஆரம்பித்தது. இதனிடையே, சட்டப்படியான அவளுக்கு விவாக ரத்து பெறுவதற்கான சில ஆவணங்களை வக்கீல் அனுப்பி அவளது கையெழுத்தைப் பெற்றார். சில மாதங்களுக்குப் பின்னர், அவளுக்கு விவாக ரத்தும் கிடைத்தது. அதே நேரத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. விஸ்வநாதனுக்கு தனக்கு பேரன் பிறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரும் நாட்களில் கீதாவைப் பார்த்துக் கொள்ள ஒரு துணையை கடவுள் கொடுத்ததிருப்பதாக அவர் நினைத்தார். அனால் அந்த நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது காலம் – sumai thaangi tamil story 2.
குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை
குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகியும் பசிக்காக அழவில்லை, சிரிக்கவும்
இல்லை. ஆறு மாதங்கள் ஆன குழந்தைக்கு இருக்க வேண்டிய எந்த விதமான
வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. குழந்தயை டாக்டரிடம் காண்பித்த போது, சில பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை என்பதை டாக்டர் தெரிவித்தார். உடல் மட்டும் வளரும். ஆனால் வேறு எந்த விதமான செயல்பாடுகளும் இருக்காது என்றும் கூவினார். இதை அறிந்தவுடன் வீட்டில் அனைவருமே நிலை தடுமாறி, நடைப் பிணம் போல ஆயினர். விஸ்வநாதன் தன்னுடைய தவறினால் கீதாவின் வாழ்க்கை அழிந்து போனது மட்டுமல்லாது, அவளுக்கு சுமையாக இப்படி ஒரு குழந்தையும் பிறந்து விட்டது என்கிற குற்ற உணர்வால் மிகவும் வருந்தினார். இது அவரது உடல் நலத்தை வெகுவாக பாதித்தது. திடீரென்று ஊரு நாள் அவர் மாரடைப்பால் இறந்து போனார்.
நம்பிக்கையுடன்
வீட்டில் பெண்களுக்கு திருமணம் ஆக வில்லை என்றால் அவள் பெற்றோருக்கு
சுமையாகவோ, அல்லது பெற்றோர் அந்தப் பெண்ணுக்கு சுமையாகவோ இருக்க
நேரிடும் என்ற எண்ணத்தில் இது போன்ற கட்டாயக் கல்யாணங்கள்
நடக்கின்றன. அவ்வாறு நடந்த கல்யாணத்தினால் கீதா வாழ்க்கையில்
எப்போதுமே இறக்கி வைக்க முடியாத ஒரு பெரிய சுமையை தாங்கி நிற்கிறாள்.
எப்படியாவது அந்த சுமையை கரையேற்றி விட்ட பின்னரே தான் சாக வேண்டும்
என்பது மட்டுமே இன்று அவளுடைய பிரார்த்தனையாக இருக்கிறது. பல் வேறு
சோதனைகள் வந்தாலும் தாங்கி கொண்டு நிற்கும் ஒரு சுமை தாங்கியாக கீதா
இன்றும் துணிந்து வாழ்கையுடன் தொடர்ந்து போராடி நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டு வருகிறாள்.
– அனுமாலா சென்னை
கதையைப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இப்படியா ஒருவருக்குக் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வரும். ஆனாலும் கீதாவின் துணிச்சலான முடிவு நிம்மதியைத் தருகிறது.
கருவைக் கலைப்பதற்கு கீதா எடுத்த முயற்சிகள் கூட கு ழந்தையயின் குறைபாடுகளூக்கு காரணமாக இருக்கலாம் கீதா நிலை யாருக்கும் வரக்கூடாது
மனது கனக்கிறது. இப்படி ஒரு நிலைமை, எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. கீதா துணிச்சலாக எடுத்த முடிவு சரியானது. கருவில் இருக்கும்போது சாப்பிட்ட கருகலைப்பு மருந்துகளே குழந்தையின் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கும் .விதி சமயத்தில் மதியை வென்றுவிடும்.
அருமையான கதை மனதை நெகிழ் வைத்தது. நல்ல நடை. சம்பவங்களை கண் முன்னே கொண்டு வருகிறது
மனத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது கீதாவின் வாழ்க்கை. இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பெண்கள் இதுபோன்ற வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது வருத்தத்துக்குரியது. நல்ல கதை